.தொடர்-06 மணிக்கூடு
1969 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஒரு நாள் -
தோழர்;(டாக்டர்) தாஸிம்.
கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியிருந்தார்.
ஊரில் நண்பர் அஷ்ரஃப்பின் வீட்டுக்குச் சென்றார்.
உசேன் விதானையாரிடம் இதனைத் தெரிவித்தார்.
"ஒண்டும் யோசிக்காதை. அஷ்ரஃப்க்கு அறிவிக்கிறேன். நீ அவனோடயே இருக்கலாம்..."என்றார்.
அஷ்ரஃப் ஒரு உறவினர் வீட்டிலிருந்தபடியே சட்டக் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார். இனி ஒரு அறை எடுக்கத்தான் வேண்டும்.
நண்பரை வரவேற்றார்; ஒரு பத்திரிகையும் வாங்கிச் சென்றிருந்தார்; ஒப்சேவர்.
"அஷ்ரஃப் எங்க அறை?... அங்கதானே போறம்"
"அறையெல்லாம் ஒண்டும் கிடையாது. இனித்தான் பார்க்கப் போறம்..."
"என்ன.....!"
"ஒண்டும் பெரிசா முழிக்காத. இந்தாபார் பேப்பர்ல ஒரு விளம்பரம்.
இங்க கொள்ளுப்பிட்டியில் ஒரு ரூம் இருக்கிறதா இருக்கு...
முதல்ல அங்க போவம்..."
அந்த விளம்பரந்தான் -
இல.8, 25வது ஒழுங்கை, கொள்ளுப்பிட்டி.
இவர்களின் கொள்ளுப்பிட்டி அறைக்கு, அஷ்ரஃப்பின் நண்பர்கள் வெகுவாக எப்போதும் வந்து போவார்கள்.
யோகேஸ்வரன்,விநோதன்,பெரிய சுந்தரம்பிள்ளை,கபூர்,ரஞ்சித்
மாசிலாமணி,இக்பால்,சச்சிதானந்தம் , இன்னும் -
ஒரு முறை அஷ்ரஃப்பின் நண்பர்கள் வந்து சென்றதன் பின்னர்,
நண்பர் தாஸிம் தனது மணிக்கூட்டைத் தேடினார். அது கிடைக்கவில்லை.
தாஸிமின் தந்தையார் வெகு அன்பாக வாங்கிக் கொடுத்த பரிசு.
அதன் வெள்ளிப்பட்டிக்கு மேலால், பிசு பிசுவென்று கறுத்த முடிகள் அடர்ந்த இன்னுமொரு தோல் பட்டி. 'வொட்ச்' பார்வைக்கு ரொம்பவும் கவர்ச்சியாக இருக்கும்.
நண்பருக்கு இது விடயத்தில் ரொம்பவும் வருத்தம் -
அறைக்கு வரும் நண்பர்களில்,குறிப்பிட்ட ஒருவரின் பெயரைக் கூறி -
"இன்னார்தான் அதை எடுத்திருக்க வேண்டும்" என்றார் தாஸிம்.
அஷ்ரஃப் அதை அடியோடு மறுத்து நின்றார்.
நண்பருக்கோ, மருத்துவத்துறை சம்பந்தமான 'பிரக்டிகல்' வகுப்புக்கள்,மாறி மாறி இருப்பதால் 'வொட்ச்' ஒன்று கட்டாயம் அவசியம்.
அதை விட முக்கியம்,
அது அவரது தந்தையார் கொடுத்த பொருள்.
நண்பர் விடுவதாக இல்லை.
அஷ்ரஃப் ஒரு நாள் பார்த்தார்; இரண்டாம் நாள் பார்த்தார்; மூன்றாம் நாள்; வேறு வழியில்லை.
தமது கையிலிருந்த 'வொட்சைக்' கழற்றிக் கொடுத்து விட்டார்.
அஷ்ரஃப் அப்போதிருந்த நிலமைக்கு அது மாபெரும் இழப்பு!
தனக்கென இனி ஒரு கைக்கடிகாரத்தை எப்போது வாங்குவது? எப்படி வாங்குவது?
மனிதப் பண்புகளை அதன் மேலான அம்சங்களினூடாக மிக அவதானமாகக் கையாளுவதில் அஷ்ரஃப் தெளிவான அணுகு முறை கொண்டவராகவே விளங்கினார்.
இதற்கு உதாரணங்களை நிறைவாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
எனினும்,
சிறிது காலங்களுக்கு சட்டக்கல்லூரியின் விவாதங்களில் கலந்துகொள்ள அஷ்ரஃப்பிற்கு ஒரு கைக்கடிகாரம் தேவையான போது, தாஸீம் அதை அவருக்கே திருப்பி அளித்தார்.
1998ஆம் ஆண்டு என்று ஞாபகம்.
எழுத்தாளர்களையும், ஊடகவியலாளர்களையும் அழைத்து அஷ்ரஃப் ஒரு விருந்து கொடுத்தார்.
அந்த விருந்தில் -
'தாருஸ்ஸலாம்' முகப்புத் தோற்றம் பதித்த சுவர்க்கடிகாரம், பாக்கர் பேனை, சாவிக் கோர்வை என்பவற்றைப் பரிசாக வழங்கினார்.
டாக்டர் தாஸிம் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். டாக்டர் தாஸிம், டாக்டர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த கவிஞரும் கூட.
அவர் சென்று இந்த சுவர்க்கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டார்.
இருவருடைய பார்வைகளும் சந்தித்துக் கொண்டன.
டாக்டர் தாஸிம் சொல்கிறார் -
"அந்தப் பார்வை என் நெஞ்சக் கூட்டை ஊடுருவிச் சென்றது...
ஒரு சின்னக் கடிகாரத்துக்காக எப்படி அலட்டிக் கொண்டாய்.
இதோபார்!இப்போது ஒரு பெரிய கடிகாரம் ஒன்றையே உனக்கு பரிசாகத் தருகின்றேன் என அப்பார்வை சொல்லாமல் சொல்லியது..."
அந்தச் சுவர்க்கடிகாரம் இயக்கமற்றுப் போனாலும் டாக்டர் தாஸிம் அவர்களின் இல்லச் சுவரினை அலங்கரித்த வண்ணம் அழியா நினைவுகளுடன் இன்னும் காட்சிதருகின்றது.
வாழ்க மனிதம்! வளரட்டும் மனித நேயம்!
தொடரும்...!
அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள் எனும் நீலில் இருந்து...)
எம்.என்.எம்.யஸீர் அறபாத்,
ஓட்டமாவடி
0 comments: