Showing posts with label leader marhoom ashraff. Show all posts
Showing posts with label leader marhoom ashraff. Show all posts

Sunday, June 4, 2017

அஷ்ரஃப் ஏன் படிக்கப்பட வேண்டும்  தொடர்-02

அஷ்ரஃப் ஏன் படிக்கப்பட வேண்டும் தொடர்-02


 தொடர்-02
===========================
அஷ்ரஃப் ஏன் படிக்கப்பட வேண்டும்
என்ற வினாவுக்குள் நாம் செல்லலாம்.


ஆனால்
நம்மிடம் இன்னும் ஒரு கேள்வி எஞ்சியிருக்கிறது.
ஆம்! அது இதுதான்!
அவருடைய எண்ணங்களும்,
சிந்தனைகளும் நமக்கு அவசியந்தானா?
அவசியமில்லை என்றால் -
அவர் காலத்தையும்,
அவருக்குப் பின்னுள்ள
இன்றைய காலகட்டத்தையும்
ஒப்புநோக்க வேண்டியவர்களாகின்றோம்.

அவசியம்தான் என்றால்
அவருக்கு முன்னுள்ள காலத்தையும்,
அவர் காலத்தையும்
பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாகின்றோம்.

இவை இரண்டும்
நமக்கு ஒன்றை மட்டுமே உணர்த்தி நிற்கின்றன.
அஷ்ரஃப் படிக்கப்பட வேண்டியவர்.

ஏன்?

வறுமையிலும் செம்மையாக வாழ்வதற்கு -

துயரங்களையும், பிரச்சனைகளையும் கண்டு துவண்டு விடாமல் இருப்பதற்கு -

உயர்ந்த சிந்தனைகளுக்கான உழைப்பு
ஒரு போதும் வீண் போவதில்லை என்ற எடுத்துக்காட்டுக்கு -

முடிவுகள் எதுவானாலும்,
தள்ளிப் போடாமல் துணிவுடன் எதிர்கொள்வதற்கு -

முரண்பாட்டாளர்களையும்
அனைத்துச் செல்வது எப்படி என்பதற்கு -

அரசியல் ராஜதந்திரத்தில்
மிக நுட்பமான வழிமுறைகளை கையாள்வதற்கு -

அஷ்ரஃப் படிக்கப்பட வேண்டும்.

அஷ்ரஃப்!
இன, மத பேதங்களுக்கப்பால்,
ஓர் ஆதர்ச புருஷரே!
ஒவ்வொருக்கும் அவரின் வாழ்க்கையில் படிப்பினைகள் உண்டு.

சாரக் கட்டுகளுடன் போராடி
கல்வியில் வெற்றி கண்ட போது -
உயிருடன் போராடி
அரசியலின் உன்னதங்களைத் தொட்ட போது -

தன் சமூகத்துக்கு நேர்ந்த
அடக்கு முறைகளுக்கப்பாலும்,
இன்னொரு சமூகத்தின் விடுதலையை நேசித்த போதும் -

மேடையில்,
ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நின்று உரையாற்றினாலும்,
தன்னுடன் வாழ்ந்து பழகிய சாதாரண மக்களையும்
இனங்கண்டு, அழைத்து, அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைத்த போதும் -

தன்னை 'அஷ்ரஃப்' என பெயர் விளித்து அழைக்காது போனாலும் பரவாயில்லை.
அதற்காக 'சேர்' எனக் கூப்பிட வேண்டாம் என தனது அத்யந்த நண்பர்களைக் கடிந்த நிலையிலும் -
சிறுவனாக இருந்தாலும், இஸ்லாமிய சோஷலிசம் என ஒன்றில்லை என்று அரசியல் பலம் வாய்ந்த அமைச்சருக்கும் சவால்விட்டு, மார்க்கக் கடமைகளையும், அதற்கான பிரசாரங்களையும், துணிவாகவும், ஆணித்தரமாகவும் நின்று முன்னெடுத்த வேளைகளிலும் -

தொழில் துறையில் 'பெரிய தொகை' வாங்கும் புரக்டர் எனப் பெயரெடுத்தாலும், அவரிடத்தில் வந்த ஏழைகளுக்காக 'தொகை' கவலையின்றி, நீதிமன்றங்களில் அவர் எழுந்து நின்ற சந்தர்ப்பங்களிலும் -

பேரினவாதத்தின்
குற்றச்சாட்டுகளுக்காக,
கங்கொடவில சோம தேரருடன் மேற்கொண்ட விவாதத்தினூடாக சவால்கள் எழுவினும், அவை எதிர்கொள்ளப்பட வேண்டும் என துணிந்து நின்ற அம்சங்களிலும் -

அரசியல் அதிகாரங்கள்
பறிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், எதற்கும் வளைந்து கொடுக்காமல், தான் வகித்துக் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காத அம்சங்களிலும் -

ஒற்றை மனிதனாக நின்று, ஒவ்வொருவோர் தேவைகளுக்குமேற்ப ஒட்டு மொத்த சமூகத்தையும் பரிபாலித்த போது -

அஷ்ரஃப் ஓர் ஆதர்ச புருஷர்!
சிறந்த வழிகாட்டி!
இன்னும் எவ்வளவோ இருக்கின்றது; நாம் தெரிந்து கொள்ளவும்; படிப்பினைகள் கற்றுக் கொள்ளவும்.
ஆகவே -
அஷ்ரஃப் படிக்கப்பட வேண்டும்.
இன்னும் பலரால் எழுதப்பட வேண்டும்.
புதிய வெளிச்சம் நோக்கி இந்த சமூகம் நகரும் வரை -
தன்னம்பிக்கையும்,
ஒற்றுமையும்
மீண்டும் இந்த மக்கள் மத்தியில் நிலைநிறுத்தப்படும் வரை -
அஷ்ரஃப் -
நம் மத்தியில் தொடர்ந்தும்
பேசப்படட்டும்; படிக்கப்படட்டும்.
இன்னும் பலரால் எழுதப்படவும் வேண்டும்.
     (முற்று)

எம்.என்.எம்.யஸீர் அறபாத்,
 ஓட்டமாவடி(கல்குடா).

(அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள் எனும் நூலில் இருத்து...)

Friday, March 31, 2017

விஸ்வரூபம்-(01)

விஸ்வரூபம்-(01)


கல்வியைக் கூட தொடரவிடாமல் அங்குமிங்குமாக விரட்டி அடித்த ஜார் ஆட்சியின் நிர்ப்பந்தம் காரணமாக,
ஒருவித நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்ட லெனின்,
வெளிநாடு ஒன்றுக்கு தப்பி வந்து,
கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் எடுக்கத்தக்க சட்டக் கல்வியை,
ஒன்றரை வருடங்களுக்கும் குறைவான காலத்தில் படித்து, பரீட்சை எழுதி, சித்தியடைந்தார்.

லெனின் இந்த சட்டக் கல்வியை முடிக்காது இருந்திருந்தால் -
அவரது வாழ்வும் வெறும் லெனினாகத்தான் முடிந்திருக்கும்,
அந்த மாபெரும் ரஷ்ய தலைவராக அல்லாமல்.

ஸ்ரீலங்காவின் முஸ்லிம் சமூகத்திலிருக்கும் எத்தனையோ அஷ்ரஃப்புக்களில் ஒருவராகத்தான் இவர் கதையும் முடிந்திருக்கும்.

ஆங்கிலக் கல்வியை மட்டும் அஷ்ரஃப் பூர்த்தி செய்யாமல் இருந்திருந்தால்.......
        தொடரும்....

எம்.என்.எம்.யஸீர் அறபாத்.
ஓட்டமாவடி (கல்குடா)
அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள் நூல்)
slmc-ashraff-biography

Tuesday, February 21, 2017

மர்ஹும் அஷ்ரஃப் எதிர்கொண்ட முதலாவது சிவில் நிர்வாகச் சீர்திருத்தம்

மர்ஹும் அஷ்ரஃப் எதிர்கொண்ட முதலாவது சிவில் நிர்வாகச் சீர்திருத்தம்

slmc-ashraff-biography-08
ன் முற்பகுதி.
ஸ்டான்லி ஜெயராஜ். அஷ்ரஃப்பின் அத்யந்த நண்பர்.

ஒரு தந்தி வருகிறது.
'Job available, come immediately - Ashraff'

தந்தியைக் கவனித்தார் ஸ்டான்லி.
கொடுக்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டு நாட்கள் பிந்தியிருந்தது.

அஷ்ரஃப் ஊரில் தனது கல்வியை 'ஒருகை' பார்த்துவிட்டு அதையே 'மறுகை' பார்க்க கொழும்பு வந்திருந்த தருணம்.

மச்சானும் மாவட்ட நீதிபதியுமான உசேனின் வீடு உறைவிடம்.பாணந்துறை இடம்.

அஷ்ரஃப் ஊரிலிருந்து புறப்படுகையில் ஸ்டான்லி ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

'மச்சான் நீ கொழும்பு போனதும். உன்ட மச்சான்ட சொல்லி எனக்கொரு வேலைக்கு ஏற்பாடு செய்ய வேணும்'

உசேன் நீதிவானின் இல்லம் புகுந்த அஷ்ரஃப், வருகையின் உபசரிப்பு முடிந்த மறுகணமே முன்வைத்த வேண்டுகோள் -
''எங்கட ஸ்டான்லிக்கு ஒரு வேலை எடுத்துக் கொடுக்க வேண்டும்....''

உசேன் நீதிபதிக்கு ஸ்டான்லியை ஊரில் வைத்தே தெரியும்.
வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.

தந்தி கிடைத்து மூன்றாம் நாள் ஸ்டான்லி பாணந்துறை வந்தார்.
"ஏன் மூன்று நாள் சுணக்கம்?" கேள்வி எழுப்பினார் உசேன்.

அஷ்ரஃப்புக்கு இது ஆச்சர்யம். ஸ்டான்லி தந்தியைக் காட்டினார்; கிடைத்த திகதியைக் கூறினார்.

உசேன் நீதிபதி, உடனடியாக அஷ்ரஃப்பைக் கொண்டு தபாலதிபருக்கு கடிதமொன்று எழுத வைத்தார்.

இரண்டு தினங்களில் -
நடந்த தவறுக்கான மன்னிப்புக் கோரி, தந்திக் கட்டணமான எழுபத்தைந்து சதமும் திருப்பியனுப்பப்பட்டிருந்தது.

இது அன்றைய இலங்கையின் சிவில் நிர்வாகம்!

அஷ்ரஃப் எதிர்கொண்ட,
முதலாவது சிவில் நிர்வாகச் சீர்திருத்தம்.

   (அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள்)

எம்.என்.எம்.யஸீர் அறபாத்,
   ஓட்டமாவடி (கல்குடா

Wednesday, January 18, 2017

ஐயா...வட்டியோட சேர்த்து நூறு ரூபா வேணும்.

ஐயா...வட்டியோட சேர்த்து நூறு ரூபா வேணும்.

ldr-ashraff-biography-07

             தொடர்-07
=======================
   காதுப்பூ-மின்னி
       =====
சட்டத்துறை பொது வாழ்க்கையில் அதீத ஈடுபாடுள்ளது.
இங்கே -
இருப்பவனும், இல்லாதவனும்,
நல்லவனும், கெட்டவனும்,
புத்திசாலியும், புத்தி கெட்டவனும் என்று பல்வகைப்பட்ட மனிதர்கள் வந்து போகிறார்கள்.

அஷ்ரஃப் எனும் சட்டத்தரணிக்கும் அனைத்து மட்டங்களிலும் நண்பர்கள் இருந்திருக்கிறார்கள்.
அன்றாடம் மூட்டைதூக்கிப் பிழைக்கும் நாட்டாண்மை கூட அஷ்ரஃப்புக்குத் தோழர்தான். அவர், அவன் தோளில் கைபோட்டுப் பேசுவார்.
சட்டத்தரணி, நாட்டாண்மை என்ற பேதமெல்லாம் அங்கே கிடையாது.

கல்முனையில் ஒரு காலைப் பொழுது.
அம்மன் கோவில் வீதி, 'ஹிரா' என்ற இல்லத்தின் முன்பாக ஒரேஞ் வர்ண ஒன்பது ஸ்ரீ வொக்ஸ்வேகன் நிற்கிறது.
அஷ்ரஃப் தமது அலுவல்கள் அனைத்தையும் முடித்துக்கொண்டு
கோர்ட்டுக்கும் புறப்பட்டாகிவிட்டது.

இன்னும் ஒரு வழக்காளியின் வரவுதான் குறைவாக உள்ளது.
புறப்பட்டு விட்ட பின்னர்,
எவரையும் திரும்பச் சந்தித்து,
வழக்கு விபரங்கள் கேட்கவோ, நடுவழியில் வைத்து 'பீஸ்' வாங்கிச் செல்லவோ அவர் விரும்ப மாட்டார்.

தெருவுக்கு வந்தாயிற்று -
ஆனாலும், என்ன செய்வது, அந்த வழக்காளி?

அவள் அப்போதுதான் வந்தாள்!
அவளுக்கு ஒரு தாபரிப்பு வழக்கு;
அன்று வழக்கு நாள்.

"என்ன...? என்றார் அதட்டலாக.

"இல்ல ஐயா... இப்பதான் கட திறந்தவன்..."

பயந்து தயங்கிப் பேசியவாறே. சேலை முடிச்சை பிரித்து இருந்ததை எடுத்துக் கொடுத்தாள்.

வாங்கிக் கணக்கு பார்த்தார் -
எண்பத்தைந்து ரூபா; நூறுக்கு பதினைந்து குறைவாக.

நேரத்துக்கு வராத ஒரு வழக்காளி.
வழங்கப்படும் 'பீஸ்' முழுசாக இல்லை.
தொழிலுக்குப் புறப்படும் காலை வேளையில்,
இம்மாதிரியான விடயங்கள் எரிச்சலைத் தராமல் வேறு எதைத் தருமாம்....?

"இதென்ன... இது...?"

பணத்தை அவளது முகத்துக்கு நேரே நீட்டினார்; தாவிவரும் கோபக் குதிரையை இழுத்துப் பிடித்தவாறு.

"இல்லை ஐயா... இருந்த காதுப்பூவுக்கு இவ்வளவுதான் வட்டிக் கடையில் தந்தவன்..."

அவளது கண்களில் நீர்த்தழும்பல்.

அஷ்ரஃப் ஆடித்தான் போனார்; நெற்றிப் பொட்டில் யாரோ ஓங்கி அடித்தது போல் இருந்தது.

"இப்ப இந்த காதுப்பூவ திருப்ப எவ்வளவு வேணும்....."
"ஐயா.... வட்டியோட சேர்த்து நூறு ரூபா வேணும்....."

நூறை அவள் கையில் வைத்தார்.

"ஐயா....?"

அவளுக்கு பேச்சுத் திக்கியது. "காதுப்பூவ கொண்டுவந்து கோட்ல காட்டு.... அதுக்குப் பிறகு வழக்குப் பேசிறன்..."

அஷ்ரஃப் அங்கிருந்து மறையும் வரை -

அவள் அதே இடத்தில் ஆணி அடித்தாற்போல் நின்று கொண்டிருந்தாள்.

உள்ளங்கள் வெல்லப்படுகின்றன;
உங்களையும் சேர்த்துத்தான்.
                தொடரும்.....!

 எம்.என்.எம்.யஸீர் அறபாத்,
       ஓட்டமாவடி (கல்குடா).

   (அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகளிலிருந்து....)

Sunday, January 1, 2017

அஷ்ரஃப் நடைபயின்ற பாதையில்....தொடர்-06 மணிக்கூடு

அஷ்ரஃப் நடைபயின்ற பாதையில்....தொடர்-06 மணிக்கூடு

.தொடர்-06 மணிக்கூடு


1969 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஒரு நாள் -
slmc-ashraff-biography-06தமது 'அறைத்தோழரை' வரவேற்க புறக்கோட்டை புகையிரத நிலையம் சென்றிருந்தார் அஷ்ரஃப்.

தோழர்;(டாக்டர்) தாஸிம்.
கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியிருந்தார்.
ஊரில் நண்பர் அஷ்ரஃப்பின் வீட்டுக்குச் சென்றார்.
உசேன் விதானையாரிடம் இதனைத் தெரிவித்தார்.

"ஒண்டும் யோசிக்காதை. அஷ்ரஃப்க்கு அறிவிக்கிறேன். நீ அவனோடயே இருக்கலாம்..."என்றார்.

அஷ்ரஃப் ஒரு உறவினர் வீட்டிலிருந்தபடியே சட்டக் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார். இனி ஒரு அறை எடுக்கத்தான் வேண்டும்.

நண்பரை வரவேற்றார்; ஒரு பத்திரிகையும் வாங்கிச் சென்றிருந்தார்; ஒப்சேவர்.

"அஷ்ரஃப் எங்க அறை?... அங்கதானே போறம்"

"அறையெல்லாம் ஒண்டும் கிடையாது. இனித்தான் பார்க்கப் போறம்..."

"என்ன.....!"

"ஒண்டும் பெரிசா முழிக்காத. இந்தாபார் பேப்பர்ல ஒரு விளம்பரம்.
இங்க கொள்ளுப்பிட்டியில் ஒரு ரூம் இருக்கிறதா இருக்கு...
முதல்ல அங்க போவம்..."

அந்த விளம்பரந்தான் -

இல.8, 25வது ஒழுங்கை, கொள்ளுப்பிட்டி.

இவர்களின் கொள்ளுப்பிட்டி அறைக்கு, அஷ்ரஃப்பின் நண்பர்கள் வெகுவாக எப்போதும் வந்து போவார்கள்.

யோகேஸ்வரன்,விநோதன்,பெரிய சுந்தரம்பிள்ளை,கபூர்,ரஞ்சித்
மாசிலாமணி,இக்பால்,சச்சிதானந்தம், இன்னும் -

ஒரு முறை அஷ்ரஃப்பின் நண்பர்கள் வந்து சென்றதன் பின்னர்,
நண்பர் தாஸிம் தனது மணிக்கூட்டைத் தேடினார். அது கிடைக்கவில்லை.
தாஸிமின் தந்தையார் வெகு அன்பாக வாங்கிக் கொடுத்த பரிசு.
அதன் வெள்ளிப்பட்டிக்கு மேலால், பிசு பிசுவென்று கறுத்த முடிகள் அடர்ந்த இன்னுமொரு தோல் பட்டி. 'வொட்ச்' பார்வைக்கு ரொம்பவும் கவர்ச்சியாக இருக்கும்.

நண்பருக்கு இது விடயத்தில் ரொம்பவும் வருத்தம் -
அறைக்கு வரும் நண்பர்களில்,குறிப்பிட்ட ஒருவரின் பெயரைக் கூறி -
"இன்னார்தான் அதை எடுத்திருக்க வேண்டும்" என்றார் தாஸிம்.
அஷ்ரஃப் அதை அடியோடு மறுத்து நின்றார்.
நண்பருக்கோ, மருத்துவத்துறை சம்பந்தமான 'பிரக்டிகல்' வகுப்புக்கள்,மாறி மாறி இருப்பதால் 'வொட்ச்' ஒன்று கட்டாயம் அவசியம்.
அதை விட முக்கியம்,
அது அவரது தந்தையார் கொடுத்த பொருள்.

நண்பர் விடுவதாக இல்லை.

அஷ்ரஃப் ஒரு நாள் பார்த்தார்; இரண்டாம் நாள் பார்த்தார்; மூன்றாம் நாள்; வேறு வழியில்லை.
தமது கையிலிருந்த 'வொட்சைக்' கழற்றிக் கொடுத்து விட்டார்.
அஷ்ரஃப் அப்போதிருந்த நிலமைக்கு அது மாபெரும் இழப்பு!

 தனக்கென இனி ஒரு கைக்கடிகாரத்தை எப்போது வாங்குவது? எப்படி வாங்குவது?

மனிதப் பண்புகளை அதன் மேலான அம்சங்களினூடாக மிக அவதானமாகக் கையாளுவதில் அஷ்ரஃப் தெளிவான அணுகு முறை கொண்டவராகவே விளங்கினார்.

இதற்கு உதாரணங்களை நிறைவாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

எனினும்,
சிறிது காலங்களுக்கு சட்டக்கல்லூரியின் விவாதங்களில் கலந்துகொள்ள அஷ்ரஃப்பிற்கு ஒரு கைக்கடிகாரம் தேவையான போது, தாஸீம் அதை அவருக்கே திருப்பி அளித்தார்.

1998ஆம் ஆண்டு என்று ஞாபகம்.

எழுத்தாளர்களையும், ஊடகவியலாளர்களையும் அழைத்து அஷ்ரஃப் ஒரு விருந்து கொடுத்தார்.

அந்த விருந்தில் - 
'தாருஸ்ஸலாம்' முகப்புத் தோற்றம் பதித்த சுவர்க்கடிகாரம், பாக்கர் பேனை, சாவிக் கோர்வை என்பவற்றைப் பரிசாக வழங்கினார்.

டாக்டர் தாஸிம் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். டாக்டர் தாஸிம், டாக்டர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த கவிஞரும் கூட.

அவர் சென்று இந்த சுவர்க்கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டார்.
இருவருடைய பார்வைகளும் சந்தித்துக் கொண்டன.

டாக்டர் தாஸிம் சொல்கிறார் -
"அந்தப் பார்வை என் நெஞ்சக் கூட்டை ஊடுருவிச் சென்றது...
ஒரு சின்னக் கடிகாரத்துக்காக எப்படி அலட்டிக் கொண்டாய்.
இதோபார்!இப்போது ஒரு பெரிய கடிகாரம் ஒன்றையே உனக்கு பரிசாகத் தருகின்றேன் என அப்பார்வை சொல்லாமல் சொல்லியது..."

அந்தச் சுவர்க்கடிகாரம் இயக்கமற்றுப் போனாலும் டாக்டர் தாஸிம் அவர்களின் இல்லச் சுவரினை அலங்கரித்த வண்ணம் அழியா நினைவுகளுடன் இன்னும் காட்சிதருகின்றது.

வாழ்க மனிதம்! வளரட்டும் மனித நேயம்!

            தொடரும்...!
அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள் எனும் நீலில் இருந்து...)

எம்.என்.எம்.யஸீர் அறபாத்,
   ஓட்டமாவடி