Wednesday, January 18, 2017

ஐயா...வட்டியோட சேர்த்து நூறு ரூபா வேணும்.

ldr-ashraff-biography-07

             தொடர்-07
=======================
   காதுப்பூ-மின்னி
       =====
சட்டத்துறை பொது வாழ்க்கையில் அதீத ஈடுபாடுள்ளது.
இங்கே -
இருப்பவனும், இல்லாதவனும்,
நல்லவனும், கெட்டவனும்,
புத்திசாலியும், புத்தி கெட்டவனும் என்று பல்வகைப்பட்ட மனிதர்கள் வந்து போகிறார்கள்.

அஷ்ரஃப் எனும் சட்டத்தரணிக்கும் அனைத்து மட்டங்களிலும் நண்பர்கள் இருந்திருக்கிறார்கள்.
அன்றாடம் மூட்டைதூக்கிப் பிழைக்கும் நாட்டாண்மை கூட அஷ்ரஃப்புக்குத் தோழர்தான். அவர், அவன் தோளில் கைபோட்டுப் பேசுவார்.
சட்டத்தரணி, நாட்டாண்மை என்ற பேதமெல்லாம் அங்கே கிடையாது.

கல்முனையில் ஒரு காலைப் பொழுது.
அம்மன் கோவில் வீதி, 'ஹிரா' என்ற இல்லத்தின் முன்பாக ஒரேஞ் வர்ண ஒன்பது ஸ்ரீ வொக்ஸ்வேகன் நிற்கிறது.
அஷ்ரஃப் தமது அலுவல்கள் அனைத்தையும் முடித்துக்கொண்டு
கோர்ட்டுக்கும் புறப்பட்டாகிவிட்டது.

இன்னும் ஒரு வழக்காளியின் வரவுதான் குறைவாக உள்ளது.
புறப்பட்டு விட்ட பின்னர்,
எவரையும் திரும்பச் சந்தித்து,
வழக்கு விபரங்கள் கேட்கவோ, நடுவழியில் வைத்து 'பீஸ்' வாங்கிச் செல்லவோ அவர் விரும்ப மாட்டார்.

தெருவுக்கு வந்தாயிற்று -
ஆனாலும், என்ன செய்வது, அந்த வழக்காளி?

அவள் அப்போதுதான் வந்தாள்!
அவளுக்கு ஒரு தாபரிப்பு வழக்கு;
அன்று வழக்கு நாள்.

"என்ன...? என்றார் அதட்டலாக.

"இல்ல ஐயா... இப்பதான் கட திறந்தவன்..."

பயந்து தயங்கிப் பேசியவாறே. சேலை முடிச்சை பிரித்து இருந்ததை எடுத்துக் கொடுத்தாள்.

வாங்கிக் கணக்கு பார்த்தார் -
எண்பத்தைந்து ரூபா; நூறுக்கு பதினைந்து குறைவாக.

நேரத்துக்கு வராத ஒரு வழக்காளி.
வழங்கப்படும் 'பீஸ்' முழுசாக இல்லை.
தொழிலுக்குப் புறப்படும் காலை வேளையில்,
இம்மாதிரியான விடயங்கள் எரிச்சலைத் தராமல் வேறு எதைத் தருமாம்....?

"இதென்ன... இது...?"

பணத்தை அவளது முகத்துக்கு நேரே நீட்டினார்; தாவிவரும் கோபக் குதிரையை இழுத்துப் பிடித்தவாறு.

"இல்லை ஐயா... இருந்த காதுப்பூவுக்கு இவ்வளவுதான் வட்டிக் கடையில் தந்தவன்..."

அவளது கண்களில் நீர்த்தழும்பல்.

அஷ்ரஃப் ஆடித்தான் போனார்; நெற்றிப் பொட்டில் யாரோ ஓங்கி அடித்தது போல் இருந்தது.

"இப்ப இந்த காதுப்பூவ திருப்ப எவ்வளவு வேணும்....."
"ஐயா.... வட்டியோட சேர்த்து நூறு ரூபா வேணும்....."

நூறை அவள் கையில் வைத்தார்.

"ஐயா....?"

அவளுக்கு பேச்சுத் திக்கியது. "காதுப்பூவ கொண்டுவந்து கோட்ல காட்டு.... அதுக்குப் பிறகு வழக்குப் பேசிறன்..."

அஷ்ரஃப் அங்கிருந்து மறையும் வரை -

அவள் அதே இடத்தில் ஆணி அடித்தாற்போல் நின்று கொண்டிருந்தாள்.

உள்ளங்கள் வெல்லப்படுகின்றன;
உங்களையும் சேர்த்துத்தான்.
                தொடரும்.....!

 எம்.என்.எம்.யஸீர் அறபாத்,
       ஓட்டமாவடி (கல்குடா).

   (அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகளிலிருந்து....)

SHARE THIS

0 comments: