தொடர்-02 =========================== அஷ்ரஃப் ஏன் படிக்கப்பட வேண்டும் என்ற வினாவுக்குள் நாம் செல்லலாம்.
ஆனால் நம்மிடம் இன்னும் ஒரு கேள்வி எஞ்சியிருக்கிறது. ஆம்! அது இதுதான்! அவருடைய எண்ணங்களும், சிந்தனைகளும் நமக்கு அவசியந்தானா? அவசியமில்லை என்றால் - அவர் காலத்தையும், அவருக்குப் பின்னுள்ள இன்றைய காலகட்டத்தையும் ஒப்புநோக்க வேண்டியவர்களாகின்றோம்.
அவசியம்தான் என்றால் அவருக்கு முன்னுள்ள காலத்தையும், அவர் காலத்தையும் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாகின்றோம்.
இவை இரண்டும் நமக்கு ஒன்றை மட்டுமே உணர்த்தி நிற்கின்றன. அஷ்ரஃப் படிக்கப்பட வேண்டியவர்.
ஏன்?
வறுமையிலும் செம்மையாக வாழ்வதற்கு -
துயரங்களையும், பிரச்சனைகளையும் கண்டு துவண்டு விடாமல் இருப்பதற்கு -
உயர்ந்த சிந்தனைகளுக்கான உழைப்பு ஒரு போதும் வீண் போவதில்லை என்ற எடுத்துக்காட்டுக்கு -
முடிவுகள் எதுவானாலும், தள்ளிப் போடாமல் துணிவுடன் எதிர்கொள்வதற்கு -
முரண்பாட்டாளர்களையும் அனைத்துச் செல்வது எப்படி என்பதற்கு -
அரசியல் ராஜதந்திரத்தில் மிக நுட்பமான வழிமுறைகளை கையாள்வதற்கு -
அஷ்ரஃப் படிக்கப்பட வேண்டும்.
அஷ்ரஃப்! இன, மத பேதங்களுக்கப்பால், ஓர் ஆதர்ச புருஷரே! ஒவ்வொருக்கும் அவரின் வாழ்க்கையில் படிப்பினைகள் உண்டு.
சாரக் கட்டுகளுடன் போராடி கல்வியில் வெற்றி கண்ட போது - உயிருடன் போராடி அரசியலின் உன்னதங்களைத் தொட்ட போது -
தன் சமூகத்துக்கு நேர்ந்த அடக்கு முறைகளுக்கப்பாலும், இன்னொரு சமூகத்தின் விடுதலையை நேசித்த போதும் -
மேடையில், ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நின்று உரையாற்றினாலும், தன்னுடன் வாழ்ந்து பழகிய சாதாரண மக்களையும் இனங்கண்டு, அழைத்து, அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைத்த போதும் -
தன்னை 'அஷ்ரஃப்' என பெயர் விளித்து அழைக்காது போனாலும் பரவாயில்லை. அதற்காக 'சேர்' எனக் கூப்பிட வேண்டாம் என தனது அத்யந்த நண்பர்களைக் கடிந்த நிலையிலும் - சிறுவனாக இருந்தாலும், இஸ்லாமிய சோஷலிசம் என ஒன்றில்லை என்று அரசியல் பலம் வாய்ந்த அமைச்சருக்கும் சவால்விட்டு, மார்க்கக் கடமைகளையும், அதற்கான பிரசாரங்களையும், துணிவாகவும், ஆணித்தரமாகவும் நின்று முன்னெடுத்த வேளைகளிலும் -
தொழில் துறையில் 'பெரிய தொகை' வாங்கும் புரக்டர் எனப் பெயரெடுத்தாலும், அவரிடத்தில் வந்த ஏழைகளுக்காக 'தொகை' கவலையின்றி, நீதிமன்றங்களில் அவர் எழுந்து நின்ற சந்தர்ப்பங்களிலும் -
பேரினவாதத்தின் குற்றச்சாட்டுகளுக்காக, கங்கொடவில சோம தேரருடன் மேற்கொண்ட விவாதத்தினூடாக சவால்கள் எழுவினும், அவை எதிர்கொள்ளப்பட வேண்டும் என துணிந்து நின்ற அம்சங்களிலும் -
அரசியல் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், எதற்கும் வளைந்து கொடுக்காமல், தான் வகித்துக் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காத அம்சங்களிலும் -
ஒற்றை மனிதனாக நின்று, ஒவ்வொருவோர் தேவைகளுக்குமேற்ப ஒட்டு மொத்த சமூகத்தையும் பரிபாலித்த போது -
அஷ்ரஃப் ஓர் ஆதர்ச புருஷர்! சிறந்த வழிகாட்டி! இன்னும் எவ்வளவோ இருக்கின்றது; நாம் தெரிந்து கொள்ளவும்; படிப்பினைகள் கற்றுக் கொள்ளவும். ஆகவே - அஷ்ரஃப் படிக்கப்பட வேண்டும். இன்னும் பலரால் எழுதப்பட வேண்டும். புதிய வெளிச்சம் நோக்கி இந்த சமூகம் நகரும் வரை - தன்னம்பிக்கையும், ஒற்றுமையும் மீண்டும் இந்த மக்கள் மத்தியில் நிலைநிறுத்தப்படும் வரை - அஷ்ரஃப் - நம் மத்தியில் தொடர்ந்தும் பேசப்படட்டும்; படிக்கப்படட்டும். இன்னும் பலரால் எழுதப்படவும் வேண்டும். (முற்று)
எம்.என்.எம்.யஸீர் அறபாத், ஓட்டமாவடி(கல்குடா).
(அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள் எனும் நூலில் இருத்து...)
0 comments: