Wednesday, May 17, 2017

கல்குடாவின் சுத்தமான குடிநீர் கனவை நனவாக்க றியாழ் முயற்சி: தலைவர் சீனா பயணம்

வை.எம்.பைறூஸ்
hmm-riyal-goes-to-china-to-implement-water-project-in-kalkudah




ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் கணக்கறிஞர் எச்.எம்.எம். றியாழ் அவர்களின் பிரேரணையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத்திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கிமின் அமைச்சினூடாகவும் ஏனைய பல நிறுவனங்களின் ஒத்துழைப்பினாலும் கல்குடாத்தொகுதிக்கான சுத்தமான குடிநீர்த் திட்டமானது சிறியதாக ஆரம்பிக்கப்பட்டு, கல்குடாப் பிரதேசத்தில் ஒரு சில முக்கிய பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கல்குடாத்தொகுதி முழுவதுமாக சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்வதற்கான நிதியானது மிகப்பெரும் தொகையாகும். ஏறத்தாழ இருபதினாயிரம் பில்லியன் ரூபாவாகும் ஒட்டு மொத்த தொகை நிதியையும் நீர் வழங்கல் அமைச்சினூடாகவோ, எமது நாட்டின் அரசாங்கத்தின் மூலமாகவோ பெற்றுக் கொள்வதென்பது சாத்தியமில்லாதவொன்றாகும்.
மாறாக, அந்நிதியை அந்திய நாட்டு உதவியுடன் மூலமே பெற வேண்டிய நிலையேற்பட்டது. அதனை கருத்திற்கொண்ட கணக்கறிஞர் றியாழ் அவர்கள் வெவ்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, எவ்வாறாயினும் கல்குடா மக்களின் நீண்ட நாள் கனவும் தனதூர் மக்களின் அத்தியாவசிய தேவையுமான சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டார்.
அதனடிப்படையில், இக்குடிநீர்த் திட்டத்தினை முதல் முதலாக ஆரம்பித்து வைத்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும்  நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களிடத்தில் பல முறை வேண்டிக் கொண்டதற்கமையவும் எவ்வாறாயினும், கல்குடாத்தொகுதி பூராகவும் சுத்தமான குடிநீர்த் திட்டத்தினைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று தலைவரை வேண்டிக் கொண்டார். அதற்கமைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் அந்நிதியைப் பெற்றுத்தருவதாக கணக்கறிஞர் றியாழுக்கு வாக்குறுதியளித்திருந்தார்.
அந்த வகையில், கடந்த 13-05-17ம் திகதி எமது நாட்டின் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஏனைய  அமைச்சர் குழுக்களுடன் சீனாவில் நடைபெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பட்டுப்பாதை தொடர்பிலான மாநாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குடிநீர்த் திட்டத்துக்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார் என தலைவரின் நெருங்கிய வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.
உண்மையில் ஒட்டு மொத்த கல்குடாவுக்குமான சுத்தமான குடிநீர்த் திட்டத்தை ஆரம்பிக்கும் போது, ரவூப் ஹக்கீமினால் கல்குடாவுக்கு போத்தலில் அடைத்த தண்ணீரைக்கூட கொண்டு வரமுடியாது எனக்கூறியவர்கள், இன்று வாயடைத்துப் போயுள்ளார்கள். அந்த வகையில் இத்திட்டத்துக்கு ஆரம்பத்திலிருந்து கல்குடா மஜ்லிஸ் சூரா சபை முன்னெடுத்தாலும் காலப்போக்கில் அவர்களும் சற்று பின் வாங்கிருந்தார்கள்.
ஆனால், கணக்கறிஞர் றியாழ் அவர்கள் இத்திட்டத்தைக் கொண்டு வந்ததற்குப் பிற்பாடும் மாற்றுக்கட்சிக்காரர்களினால் பல விமர்சனங்களையும் பொருட்படுத்தாது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கொடுத்த வாக்கின்படி செய்து தருவார் என்ற நம்பிக்கையிலிருந்தார்.
தற்போது கணக்கறிஞர் றியாழின் நம்பிக்கை நிறை வேறியுள்ளதோடு, அவரின் முயற்சிக்கான வெற்றியும் கிடைக்கப் பெற்றுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் எமது கௌரவ தலைவர் ரவூப்ஹக்கீம் அவர்களுக்கு கல்குடா சமூகம் சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, கணக்கறிஞர் றியாழ் அவர்களினால் எமது சமூகம் இன்னும் அளப்பெரிய நன்மைகளைப் பெற வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.

SHARE THIS

0 comments: