கல்குடா தொகுதியின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் தொடர்பாக சில விசமிகளால் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் தவறான கருத்துக்கள் தொடர்பாக மக்களைத் தெளிவுபடுத்துவதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது.
விசமிகளால் முன்வைக்கப்படும் தவறான கருத்தும் அதன் உண்மைத்தன்மையும் ஒன்றன் பின் ஒன்றாக விளக்கமாக இங்கு தருகிறோம்.
1-வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையிலிருந்து முதலாவதாக தனது அபிவிருத்தியை மேற்கொள்வதாக அமைப்பாளர் வாக்குறுதியளித்திருந்தார் அதற்கு என்ன நடந்தது?
பதில்:- உண்மையில் றியாழ் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அவ்வாறு சொன்னார் தான் அவர் வெற்றி பெற்றிருந்தால், அவருக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து அதிகளவான நிதிகளை அந்-நூர் தேசிய பாடசாலைக்கு ஒதுக்கி அபிவிருத்திகளையும் ஆரம்பித்திருப்பார்.
ஆனால், அவர் தோற்றதால் தற்போது பிறரிடம் சென்று தான் அபிவிருத்திக்கான நிதிகளைப் பெற வேண்டியுள்ளது. அதற்கு எது பொருத்தமான இடங்களாக இருக்கிறதோ அந்த இடங்களையே தற்போது அவர் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறான நிலை வரும் போது தான் அந்-நூர் பாடசாலைக்குத்தான் முதலில் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று கூறி, ஏனைய பிரதேச அபிவிருத்திகளைப் புறக்கணிக்கவும் முடியாது என்பதால் தான் ஏனைய பிரதேசங்களுக்கான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதே போல் அந்-நூர் தேசிய பாடசாலையின் அபிவிருத்தியையும் றியாழ் அவர்கள் மறக்கவில்லை என்பதையும், அதற்காக அவர் எடுத்துள்ள முயற்சி தொடர்பாகவும் இந்தக்கட்டுரையை முழுமையாக நீங்கள் வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடியும்.
2-நகரத்திட்டமிடல் அமைச்சின் கல்குடாவுக்கான நிதியொதுக்கீட்டுக்கு என்ன நடந்தது?
பதில்:- 2016ம் ஆண்டில் தான் நகரத்திட்டமிடல் அமைச்சிற்கு திறைசேரியால் நிதியொதுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு நிதியொதுக்கப்பட்ட விடயம் தொடர்பில் தலைவரோ அல்லது இணைப்பாளர்களோ யாருக்கும் அறிவிக்கவில்லை. இவ்வாறு தலைவரின் அமைச்சிற்கு நிதி வந்துள்ளதை அறிந்த ஒரு சிலர் அதனைப் பெற்றுக் கொள்வதற்காக ஜூலை மாதமளவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அவர்களும் பிறருக்கு அறிவிக்கவில்லை.
இவ்வாறான நிலையில் தான் றியாழ் அவர்கள் தலைவரின் அமைச்சுக்கு நிதி வந்த விடயங்களை செப்டெம்பர் மாதமளவில் அறிந்து கொள்கிறார். அந்த மாதமே அந்நிதியை கல்குடாவிற்குப் பெற்று அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டுமென்ற நிலையில், அதற்கான கடிதங்களை எழுதி அதனைத் தலைவரிடம் ஒப்படைத்து, அந்த கடிதங்களில் தலைவர் ஒப்பமிட்டதன் மூலம் அனுமதியைப் பெறுகிறார்.
அந்த கடிதத்தை தலைவரின் அமைச்சான நகரத்திட்டமிடல் அமைச்சுக்கு கொண்டு சென்று ஒப்படைத்தார். இதனை ஏற்றுக்கொண்டு அவ்வமைச்சின் அதிகாரிகள் இந்த திட்டத்தை உரிய பிரதேசங்களில் அமுல்படுத்தும் அரச திணைக்களங்கள் (பிரதேச சபை அல்லது பிரதேச செயலகம் அல்லது கச்சேரி அல்லது மாகாண சபை அல்லது மத்திய அரசாங்கத்திலுள்ள ஒரு அதிகார சபை) எவை என்பதை அடையாளப்படுத்தி அவைகளுக்கு இத்திட்டத்தின் திட்ட வரைபை வரைந்து தருவதற்கு கடிதம் வழங்க வேண்டும்.
அதைப்பெற்று உரிய திணைக்களங்கள் அதற்கான திட்ட வரைபுகளைத் தயாரித்து அமைச்சுக்கு மீண்டும் அனுப்ப வேண்டும். அதற்கு சில காலம் தேவைப்படும். ஏனெனில், பல நபர்களை நாடியே இவ்வேலைகளைச் செய்து முடிக்க வேண்டுமென்பதால், இவ்வாறு கல்குடாத் தொகுதிக்கான அபிவிருத்தி திட்டவரைபுகள் அடங்கிய வாழைச்சேனை சந்தைக் கட்டடத்தொகுதி தவிர்ந்த ஆவணக்கோவைகளை நவம்பர் மாதமளவில் றியாழ் அவர்கள் அமைச்சில் ஒப்படைத்தார்கள்.
ஒப்படைத்து விட்டு, அவர் அது தொடர்பாக அமைச்சிற்குச் சென்று அவர் அடிக்கடி விசாரித்தும் வந்தார். அமைச்சிக்கு கொடுக்கப்பட்ட ஆவணங்கள் அமைச்சரினால் கையழுத்திட்டு தேசிய திட்டமிடல் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் தான் நிதியொதுக்கப்படும். ஆனால், கல்குடா அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட ஆவணக்கோப்பு இவ்வாறு நகராமல் அமைச்சிலேயே முடக்கப்பட்டிருந்தது. இந்த இழுபறியினால் 2016ம் ஆண்டும் நிறைவடைந்து விட்டது.
வாழைச்சேனை சந்தைக் கட்டடத்தொகுதி உள்ளடக்கப்படாததற்கு காரணம், அதை அமைப்பதற்கான காணி தொடர்பாக பல சிக்கல்கள் காணப்பட்டன. அதாவது, சந்தை கட்டடத்தொகுதியை கட்டுவதென்றால், குறித்த காணியை பிரதேச சபைக்கு குத்தகை அடிப்படையில் எழுதிக் கொடுக்க வேண்டியிருந்தது. இதை வாழைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயலும் விரும்பாமையால் மக்களும் அதனைப் பின் தொடர விரும்பவில்லை என்பதாலுமே அது இறுதி நேரத்தில் விடுபட்டது.
2016ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீடு கல்குடாவிற்கு தலைவர் அவர்கள் தருவதாக ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டு தந்தாரே தவிர, அது முறையாக ஒதுக்கீடு செய்யவில்லை. எவ்வாறெனில், தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட அபிவிருத்தி தொடர்பான ஆவணக்கோப்புகளிலும் அமைச்சில் வைத்து கையெழுத்திட வேண்டும். ஆனால், அவ்வாறு கையெழுத்திடாததினால் தான் 2016ம் ஆண்டுக்கான நிதியை கல்குடாத்தொகுதி பெற முடியாது போனது.
இவைகளை அறிந்திடாத சிலர் அமைப்பாளர் றியாழ் அவர்கள் மீது வாய்க்கு வந்தவாறு அவர் திறமையில்லாதவர் என்றெல்லாம் குற்றஞ்சாட்டுகிறார்கள். இவர்களுக்கு என்ன தெரியும் கணக்கறிஞர் றியாழ் அவர்களைப்பற்றி, அவர் பல கோடிக் கணக்கான பணப்புழக்கமுள்ள பாரிய நிறுவனங்களையே வழி நடாத்திக் கொண்டிருப்பவர்.
அவருக்கு இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கான கோவைகளைத் தயாரிப்பது சர்வ சாதாரணமானவொன்று என்பதை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதுடன், அபிவிருத்தித் திட்டங்களை அடையாளப்படுத்தி அதற்கான திட்ட வரைபு, ஆவணக்கோவைகளை அமைச்சுக்கு ஒப்படைப்பது தான் அமைப்பாளரின் வேலையே தவிர, அதற்கு அனுமதியளிப்பதில்லை. அதற்கு அனுமதியளிப்பது அமைச்சர் தான் என்பதையும் இவ்வாறு விமர்சிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அமைச்சு மட்டத்தில் இது முன்னெடுக்கப்படாததால் தான் அந்நிதியை அவருக்கு பெற முடியவில்லை.
இந்த அபிவிருத்தித் திட்டங்களை 2017ம் ஆண்டிலாவது முன்னெடுக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு கணக்கறிஞர் றியாழ் அவர்கள் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை பலமுறை சந்தித்து கல்குடா அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக முன்னர் அவர் முன்னெடுத்தவை, நிதியொதுக்கப்படாமை, கல்குடா மக்களின் அபிவிருத்தி தொடர்பான எதிர்பார்ப்புகள், அபிலாஷைகளை விளக்கமாக எடுத்து விளக்கியுள்ளார்.
அது மாத்திரமல்லாது, கட்சித்தலைவர் தலைமையில் அபிவிருத்தி தொடர்பாக நடத்தப்பட்ட சந்திப்புகளிலும் மிகவும் உருக்கமாக கல்குடாத்தொகுதி அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுகிறது என்பதையும் கடந்தாண்டு ஒதுக்கித் தருவதாகச் சொல்லப்பட்ட நிதி தரப்படாமல் போனது தொடர்பாகவும் எடுத்துக்கூறினார்.
அது மாத்திரமில்லாது, நகரத்திட்டமிடல் அமைச்சிலுள்ள அமைச்சின் மேலதிகச் செயலாளரைச் சந்தித்து, அவருடனும் இது தொடர்பாக கலந்துரையாடினார். இதன் பின்னர் தலைவர் ஆரம்ப கட்டமாக 7.5 கோடிக்கான அபிவிருத்தித் திட்டத்தை கல்குடாவில் முன்னெடுப்பதற்கு அனுமதியளித்து கடிதங்களிலும் கையெழுத்திட்டுள்ளார்.
தலைவர் கையெழுத்திட்ட உடனே ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்டிருந்த கோப்புகளிலிருந்த ஆவணங்களில் 7.5 கோடிக்கான திட்டங்களை தெரிவு செய்து, அதிலுள்ள திகதியை மாற்றி விட்டு, அவற்றை அமைச்சுக்கு கொண்டு சென்று ஒப்படைத்தார். அதில் தலைவர் கையெழுத்திட்டார். அது தற்போது அடுத்த கட்டமாக தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கல்குடாவிற்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அடையாளப்படுத்தும் போது, வாழைச்சேனை பிரதேசத்திற்கு சந்தைக் கட்டடத்தொகுதி அமைப்பது என்று தீர்மானித்ததால், ஏனைய பிரதேசங்களுக்கு வேறு திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அதற்கான கோப்புகளும் தயாரிக்கப்பட்டன. அவைகளுக்கும் தற்போது அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டுள்ள திட்டங்களில் வாழைச்சேனை வீதி அபிவிருத்தியும் உள்வாங்கப்பட்டிருந்தாலும், வாழைச்சேனை பிரதேசத்திற்கு பாரிய அபிவிருத்தித் திட்டங்களைச் செய்ய வேண்டுமென்பதால் றியாழ் அவர்கள் வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த கலந்தர் அவர்களை கொழும்பிலுள்ள கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாத்திற்கு அழைத்து கலந்துரையாடினார்.
அதில், வாழைச்சேனை அந்-நூர் பாடசாலைக்கு மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடமும் வாழைச்சேனை பிரதேசத்திற்கான கலாசார மண்டபமும் கட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் பின்னர் அமைப்பாளர் அதற்கான கடிதங்களைத் தயாரித்துக் கொண்டு தலைவரிடம் அனுமதி கேட்டார். தலைவர் இதனை இணைப்புச்செயலாளர் ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.
ஆனால், அவர் அக்கடிதத்தில் கையெழுத்திட்டும் அனுமதியளிக்கவில்லை. பின்பு றியாழ் அவர்கள் கடிதத்தை தலைவர் சொன்ன பிரகாரம் கையளித்தார். பின்னர் றியாழ் அவர்களைத் தொடர்பு கொண்ட ரஹ்மத் மன்சூர் அவர் சொன்னார் தான் தலைவரிடம் கடிதத்தைக் கொண்டு சென்ற போது, அதனையும் சேர்த்துக் கொள்வதற்கு எழுத்து மூலம் அனுமதியளிக்காவிட்டாலும், சேர்த்துக் கொள்ளுமாறு அனுமதியளித்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது இவைகளுக்கான திட்டவரைபைத் தயாரிப்பதற்கு அமைச்சினூடாக கடிதம் தரப்பட வேண்டும், இந்த கடிதத்தை அமைச்சின் மேலதிகச் செயலாளர் தான் தர வேண்டும். இதற்கு அவர் தான் பொறுப்பாக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்திலிருந்தவர் மாற்றப்பட்டு, தற்போது புதியவர் நியமிக்கப்பட்டுள்ளதால் அந்த கடிதத்தைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இருந்த போதும், ஒரு வாரத்திற்குள் கடிதத்தைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும். அதனைப் பெற்றுக் கொண்டு ஊருக்கு வந்து றியாழ் அவர்கள் வாழைச்சேனையில் எங்கு கலாசார மண்டபம் அமைப்பது என்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு, அதற்கான திட்டவரைபுகளை பாடசாலைக் கட்டடத்திற்கும் சேர்த்து தயாரிக்க வேண்டும்.
அவ்வாறு தயாரித்த ஆவணங்களை கோப்புகளாக ஒப்படைக்க வேண்டும். இதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தேவைப்படலாம். ஆனால், றியாழ் அவர்களால் இவை விடுபடாது முன்னெடுக்கப்படும் என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை.
அந்-நூர் தேசிய பாடசாலைக்கு கட்டடம் பெறுவதற்கான நிதியை நகரத்திட்டமிடல் அமைச்சினூடாகப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே காணப்படுவதாகவும், இது தொடர்பாக தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் பேசிப்பார்போம் என்றும், கலாசார மண்டபத்திற்கான நிதியை ஒதுக்குவதில் பிரச்சனை இல்லை என்றும் தலைவர் சொல்லியிருக்கிறார்.
அவ்வாறு நிதியொதுக்கப்பட்டால் தான் அந்-நூர் தேசிய பாடசாலைக்கு கட்டடம் கட்டப்படும் என்பதையும், ஆனால், கலாசார மண்டபம் கட்டாயம் கட்டலாம். அதற்கான இடத்தைத் தெரிவு செய்ய வேண்டும். கலாசார மண்டபம் கட்டுவதற்கு 5 கோடி ஒதுக்குவதாக தலைவர் கூறியிருக்கிறார். அதற்குரிய வேலைகளை றியாழ் அவர்கள் முன்னெடுப்பார்கள். அண்மையிலும் ஊர் வந்திருந்த றியாழ் அவர்கள் வாழைச்சேனைப் பிரதேசத்திற்குச் சென்று, கலாசார மண்டபம் கட்டுவதற்காக மூன்று, நான்கு இடங்களை அடையாளப்படுத்தியுமுள்ளார்.
கடிதம் கிடைத்தவுடன் அது தொடர்பாக வாழைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயல் தலைமைத்துவத்திற்கும் விளக்கமளிப்பதுடன், அவர்களின் ஆதரவுடன் கலாசார மண்டபத்திற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். அதற்கான அடிக்கல்லினை நடுவதற்காக தேசியத்தலைவர் வருகை தருவார்.
3.அமைப்பாளர் ஏன் ஊருக்கு வருவதில்லை மற்றும் அவர் தற்போது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் குறைவு என்ற கேள்வி இன்று பலரிடத்தில் எழுந்துள்ளது.
பதில்:- போராளிகள் இவ்விடயம் தொடர்பாக தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அமைப்பாளர் றியாழ் அவர்கள் தேர்தலுக்கு வேட்பாளராக வந்து தேர்தல் கேட்டதனால் தான் கல்குடாத்தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸுக்கு சற்று எழுச்சி ஏற்பட்டது. அது வரைக்கும் மு.கா. கல்குடா தொகுதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் போராளிகளும் கட்சியின் மீது மனம் தளர்ந்து நம்பிக்கை இழந்து கைவிட்ட நிலையில் தான் இருந்தார்கள்.
இதில் முக்கியமாக ஒன்றை நினைவுபடுத்த வேண்டும். இதற்கு முன்னர் இவ்வாறான பாதிப்புக்களை அரசியல் வியாபாரிகளோ, விசமிகளோ அடையவில்லை. அவர்களின் காட்டில் எப்போதும் மழை தான். கட்சிக்காகப் போராடி பல இழப்புக்களைச் சந்தித்த போராளிகள் கூட தங்களின் நிலை மாறாதா? தங்களை வழி நடாத்தவும், தங்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் ஒரு தலைவன் வரமாட்டானா? என்ற ஏக்கமுமே வந்தவர்களும் இடையில் கைவிட்டுச் சென்ற விரக்தியுமே போராளிகளை கட்சியை விட்டு மெல்ல ஒதுங்கச் செய்ததும் எனலாம்.
இவ்வாறு சோர்வடைந்த போராளிகளுக்கு புதுத்தெம்பாக நம்பிக்கை நட்சத்திரமாக றியாழ் அவர்களின் வருகை அமைந்தது என்றால், அது மிகையில்லை. அதுவே கட்சியை கல்குடாத்தொகுதியில் புத்தெழுச்சி பெற வைத்தது . அமைப்பாளர் றியாழ் அவர்கள் எமது சமூகச் சொத்தான இந்த தேசிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் கடந்த ஒரு வருடகாலமாக அயராது பாடுபட்டார்.
கல்குடாப் பிரதேசத்துக்கு அடிக்கடி வருகை தந்தார். ஒவ்வொரு பிரதேசமாக கூட்டங்களைப் போட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இளைஞர்களுக்கு மத்தியில் கட்சி தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொண்டார். இவ்வாறு தனது தலைமைத்துவமத்தின் கீழ் கட்டுக்கோப்பாக கட்சியை கட்டியெழுப்பினார். இது சிலருக்கு தலையிடியாய் அமைந்தது. இதனால் சில விசமிகளை ஏவி விட்டு தங்களின் எண்ணங்களை ஒரு சில அரசியல் வியாபாரிகள் சாதிக்க முயற்சி செய்கிறார்கள்.
இது இவ்வாறிருக்க 2016ம் அண்டிற்கான நிதியொதுக்கீட்டில் நமது பிரதேசம் கண்டு கொள்ளப்படவில்லை என்பதால், றியாழ் அவர்கள் தனது அமைப்பாளர் பதவிக்கான கடமைகளை முன்னெடுப்பதைச் சற்று நிறுத்தி வைத்துள்ளார். அது மாத்திரமில்லாது, கல்குடாப் பிரதேசத்திற்கான அபிவிருத்திகளுக்கான நிதியை ஒதுக்கித்தராவிட்டால், றியாழ் அவர்கள் தனது அமைப்பாளர் பதவியைத் தொடர்வதில்லை என்ற முடிவையும் தலைவருக்கும் அறிவித்துள்ளார்.
இவ்வாறான விடயங்களுக்காகதான் அதாவது இந்நிதியை ஒதுக்கி எடுத்து வந்து, ஊருக்குத் தேவையான அபிவிருத்திகளைச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்திற்காகத்தான் அமைப்பாளர் பதவியை சற்று அடக்கி வாசிக்கிறார்.
மற்றப்படி ஊரிலுள்ள சில விசமிகள் பேசுவது போன்று றியாழ் விட்டுட்டு போய் விட்டார். அவர் எதுவும் செய்வதாகயில்லை. எனப்பேசுவதெல்லாம் மக்களைக் குழப்புவதற்கான அரசியல் ராஜதந்திரங்களாகும்.
இவ்வாறு சில விசமிகள் தன்னுடைய சுய நலன்களுக்காகவும் தன்னை பெரிய ஆளாகக் காட்டிக் கொள்வதற்காகவும் றியாழ் அவர்களை விமர்சித்து பதிவுகளை இடுவது தவறான விடயமாகும். றியாழ் அவர்கள் தனது காய்களை நிதானமாக நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்பதை மூத்த போராளிகளும் அமைப்பாளருடன் கூட இருக்கும் நம்பிக்கைத்துரோகம் செய்யாத போராளிகளும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால், ஒரு சிலர் தேசிய மாநாட்டுக்குச் செல்வதில் கல்குடாவின் ஒற்றுமையை உடைப்பதற்கு முன்னின்று செயற்பட்டவர்களே, அந்தக்குழு தான் இந்த முறையும் கட்சியின் பேராளர் மாநாட்டிற்கு கல்குடாவிலிருந்து ஒற்றுமையாகச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும், தாங்கள் தனியாகச் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்து விட்டு, பின்னர் அமைப்பாளர் றியாழ் அவர்களுக்கெதிராக பொய்ப்பிரச்சாரங்களையும் முன்னெடுத்தார்கள்.
அவ்வாறானவர்கள் றியாழ் அவர்களுக்கு மக்களின் ஆதரவு எவ்வாறு இருக்கின்றது என்று ஆழம் தெரியாது பேசிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல்கள் வரும் போது அதனை உணர்ந்து கொள்வார்கள். இவ்வாறான விசமிகளின் தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்புவதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறான கட்டுரை எழுதப்படுகிறது.
அதே போல், கல்குடாவில் கடந்த காலங்களில் இந்தக்கட்சியூடாக தலைமை தாங்க வந்தவர்களுக்கு என்ன நடந்தது? என்பதையும் சமூகம் மறப்பதற்கில்லை. அவர்கள் தேர்தல்களில் வேட்பாளர்களாக இறக்கப்பட்டு தங்களின் சொத்துகளை விற்று போட்டியிட்டு தோல்வியடைந்து, கட்சியும் அவர்கள் தொடர்பாக கவனமெடுக்காததால், அவர்கள் கட்சியை விட்டுப்போய் இன்று அதில் சிலர் கட்சிக்கெதிரானவர்களாக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படுகிறார்கள்.
சிலர் அமைதியாக ஒதுங்கி விட்டார்கள். இவைகள் நமக்கு நல்ல உதாரணமாகும். இவ்வாறான நிலைமை றியாழ் அவர்களுக்கும் வந்து விடக்கூடாது. இந்தக்கட்சி என்பது எமது சமூகத்தின் சொத்து. இதனை நாம் நிதானமாக வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது.
அதனால் தான் றியாழ் அவர்கள் இவைகளைக் கருத்திற்கொண்டு தனது பொருளாதார நிலையைக் கவனத்திற்கொண்டும் தான் கீழே விழுந்திடாது, அதனை கவனித்துக் கொண்டும் அரசியலையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.
அடிக்கடி ஊருக்கு வருவது ஒவ்வொரு பிரதேசமாக மக்களைச் சந்திப்பது மத்திய குழுவைக் கூட்டி கட்சிச்செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவது இவ்வாறு அழகாக தனது கட்சிப்பணிகளை முன்னெடுத்து வருகிறார். இந்நிலைமையை மாற்றியமைத்ததில் சில விசமிகளுக்கும் பங்குண்டு. இவர்கள் தான் எதற்கு கூட்டம் போடனும், அபிவிருத்திக்கு என்னாச்சு? இவ்வாறான கூட்டங்களால் என்ன பிரயோசனம்? கல்குடாவிற்கு கட்சி அபிவிருத்தி செய்யாது, எல்லாம் ஏமாற்று நாடகம் என்றெல்லாம் பேசி கூட்டங்களைக் குழப்பி விட்டார்கள்.
இவ்வாறானவர்களின் நடவடிக்கை ஊர் மக்களை அமைப்பாளருக்கெதிராகத் தூண்டி விடும் சதியாகவும் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறான பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த றியாழ் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஏன் அமைதியாக இருக்கிறார் என்றால், இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதியை தலைவர் கல்குடாவிற்கு ஒதுக்கி தரனும் தரவில்லையாயின், அதற்குப்பிறகு றியாழ் அவர்கள் அமைப்பாளராக இருப்பதிலும், அரசியல் செய்வதிலும் எவ்வித பிரயோசனமுமில்லை என்பதால் தான் இரண்டில் ஒன்றை அறிவதற்காக இருக்கிறார்.
ஆனால், கட்சிக்கெதிரியாக ஒரு காலமும் அவர் மாறமாட்டார். வேண்டுன்றால், இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படாது விட்டால் ஒதுங்கி அமைதியாக இருப்பார்.
எனவே, பிறரை திருப்திப்படுத்துவதற்காக கல்குடாவில் எழும்பும் தலைமைகளை அது முளைக்கும் போதே கிள்ளியெறியாமல் தன்னுடைய சுயநலன்களுக்காக தான் பெரிய ஆளாக வேண்டுமென்பதற்காக பொய்யான தகவல்களையும் றியாழ் அவர்களுக்கெதிரான விசமக்கருத்துக்களையும் மக்களிடத்தில் பரப்ப வேண்டாம் என இதில் ஈடுபட்டுள்ளவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன், இவ்வாறன விசமிகளின் செயற்பாடுகளைப் பார்த்துக்கொண்டு தடுக்காமலிருந்தால் கல்குடாவில் நமக்கான தலைமை என்பது கானல் நீர் என்பதை போராளிகள் புரிந்து கொண்டு தலைமையைப் பாதுகாக்கவும் விசமிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் நாம் என்றும் பின்நிற்கக்கூடாது என்பதுடன், சமூக உணர்வுடன் நாம் எதிர்பார்த்த நல்ல தலைமையின் உள்ளத்தை வேதனைப்படுத்தும் விசமிகளும் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்.
குறிப்பு:
கணக்கறிஞர் றியாழ் கல்குடாவின் அபிவிருத்திற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஆதாரப்பூர்வமான பத்திரங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன
கணக்கறிஞர் றியாழ் கல்குடாவின் அபிவிருத்திற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஆதாரப்பூர்வமான பத்திரங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன
வை.எம்பைரூஸ்
0 comments: