(கல்குடா எம்.என்.எம்.யஸீர் அறபாத்)
முஸ்லிம் சமூகத்தின் பேரியக்கமான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போது மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்டதோ அன்று தொடக்கம் இந்த சமூக இயக்கத்தை அரசியல் ரீதியாக முஸ்லிம்களின் உரிமையை வென்றடுக்கும் அரசியல் கட்சியாகப் பதிவு செய்தது நாள் தொடங்கி, பல தியாகங்களுக்கு மத்தியில் கட்சியை வழி நடாத்திச்சென்றார் என்பது நாமறிந்ததே.
அவரின் இந்த முன்னெடுப்பில் இந்த சமூகம் பட்ட பல கஷ்டங்களைக்கண்டு கவலையில் மூழ்கிருந்த எம் இளைஞர்கள் மாற்று வழியைத் தேடிய போது, அவர்கள் வழி தவறிச் சென்று விடாமல், அவர்களின் உணர்வுகளுக்கு வழிகாட்டுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தோற்றமளித்ததென்பதை யாராலும் மறுதலிக்க முடியாத நிதர்சனமான உண்மையாகும்.
உரிமை இழந்து கிடந்த முஸ்லிம்களின் உரிமையை வென்று தரும் என்ற நம்பிக்கையில் பலரும் இக்கட்சியை வளர்க்க தங்களின் உயிரையும் துச்சமென மதித்து களத்தில் நின்று போராடினார்கள். பாடுபட்டார்கள். அவர்களில் முக்கிய நபராக சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.வை.எம்.மன்சூர் அவர்களை இந்நேரத்தில் நான் நினைவுகூர்கின்றேன்.
அவர் துணிச்சல்மிக்க சமூகப்பற்று மிகுந்த ஓர் மனிதர். இக்கட்சியூடாக முஸ்லிம் சமூகம் மீட்சி பெற வேண்டுமென்பதற்காக தலைவர் அஷ்ரப் அவர்களுடன் இணைந்து செயற்பட்டார். அன்றைய காலத்தில் மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இந்தக் கட்சியை வளர்ப்பதற்காக கொழும்பில் டாம் வீதியில் அலுவலகமொன்றை அமைத்து, அங்கு போராளிகளை வரவழைத்து கட்சியினதும் சமூகத்தினதும் வளர்சிக்கான முன்னெடுப்புக்களைச் செய்து கொண்டிருந்தனர்.
அக்கால கட்டத்தில் அவர்களுக்கான உணவு வசதிகள் எல்லாமே தலைவர் அஷ்ரப் அவர்களின் சொந்தப் பணத்திலிருந்தே எவ்வாறெனில், தனது வக்கீல் தொழிலிருந்து வரும் வருமானத்தில் ஒரு பங்கையே பல அர்ப்பணிப்புக்களுடன் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் தியாகம் செய்து வந்தார் என்பதை கடந்த கால ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றிலிருந்து எம்மால் அறிய முடிகிறது.
சில நேரங்களில் அங்கிருக்கும் போராளிகள் தலைவர் வரும் வரை பட்டினி கிடந்து, இந்தக்கட்சிக்காக போராடியிருக்கின்றார்கள் என்ற உண்மை எம் அநேகருக்குப் புரியாத புதிராகவே இருக்கின்றது. ஆனால், அந்நேரங்களிலெல்லாம் எம்.வை.எம்.மன்சூர் அவர்கள் வந்தால், அவர்களுக்கு உணவுகளை வாங்கிக் கொடுத்து உதவுவார்கள். அஷ்ரப் அவர்கள் வரும் வரை அவர்களை காத்திருக்க வைக்கமாட்டார்கள்.
இப்படி இந்தக்கட்சியின் வளர்ச்சியில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி, தன்னையும் தனது பொருளாதாரத்தையும் துச்சமாக மதித்துச் செயற்பட்டவர் தான் எம்.வை.எம்.மன்சூர் அவர்கள்.
அது மாத்திரமல்லாமல், 1989 ஆண்டில் முதலாவது இணைந்து நடந்த வட கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் விடுதலைப் புலிகளின் பலத்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கிழக்கில் வேட்பாளர்களின் பெயர் போட வேண்டாமென பல அச்சுறுத்தல் கடிதங்கள் அனுப்பப்பட்டது.
அந்த நேரத்தில், முஸ்லிம்களின் உரிமையை உறுதிப்படுத்த உயிரைத்துச்சமாக மதித்து, சமூகத்தின் நலன்கருதி தேர்தலில் களிமிறங்கி, தேர்தலிலும் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிற்பாடு சொற்ப காலத்திலயே அவர் விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.
இது போன்று பலர் இந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்க்க உடல், பொருள், உயிர்களைத் தியாகஞ்செய்தார்கள். இவ்வாறு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல், சமூக விடுதலையையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு, எத்தனையோ போராளிகள் உயிரையும் தியாகம் செய்தார்கள். இன்றைய சூழலில் இவர்களின் தியாகங்கள் அடிக்கடி இந்த சமூகத்தில் நினைவுபடுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயத்தேவையாகவிருக்கின்றது.
அப்போது தான், தற்போதையே தலைமுறையினர் இக்கட்சி பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயற்படுவார்கள். ஏனெனில், தற்போது சிலர் தங்களின் சுயநலனிற்காக இவ்வாறானவர்களின் தியாகங்களை புறந்தள்ளி விட்டு, இந்த முஸ்லிம் காங்கிரசை அழிக்கச் சதி செய்து கொண்டிருக்கிறார்கள்.
எவ்வாறெனில், இக்கட்சியிலிருந்து அரசியல் முகவரி பெற்று, பதவிக்கும், பணத்துக்கும் சோரம் போன சில அரசியல்வாதிகள், சில குறிப்பிட்ட ஊடகங்களையும், ஊடக தர்மம் என்றால் என்னவென்றே தெரியாத சில சில்லறை எழுத்தாளர்களையும் மஞ்சல் கவர்களைக் கொடுத்து, தன் வசப்படுத்தி கட்சியின் செயற்பாடுகளையும் கட்சியின் தலைவரையும் விமர்சனம் செய்வதைக் கண்கூடாக நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறு இந்த முஸ்லிம் காங்கிரஸை கட்சி அழிப்பதற்கு பல்வேறு சதித்திட்டங்களை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தீட்டிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.
ஆனால், இந்தக்கட்சியை அழிப்பதனூடாக இவர்கள் எதிர்பார்ப்பது தான் என்ன? என்ற கேள்வி அநேகரிடத்தில் கிளம்பியுள்ளது. அதற்கான பதில்களையும் அவர்களே தர வேண்டும்.
எந்தவித சுயநல எதிர்பார்புமில்லாமல் உயிரைத்தியாகம் செய்தவர்களின் உணர்வுகளை அழித்தது மாத்திரமின்றி, இந்த மக்கள் இயக்கமான முஸ்லிம் கட்சியினூடாக முஸ்லிம் சமூகம் நன்மையடையும் போது, அது அவர்களின் கபுர்களில், மறுமையில் நன்மையாகக் கிடைக்கும். இதணை இந்த தியாகத்தைத் தடுக்க நினைக்கிறார்களா? இதற்கு முஸ்லிம் சமூகமும் இளைஞர்களும் துணை போவதை எந்த ஒரு உண்மை முஸ்லிமாலும் ஏற்றுக்கொள்ளவோ, பொறுத்துக் கொள்ளவோ முடியுமா....?
அன்றைய பயங்கரவாதச் சூழ்நிலையை இன்றைய இளைஞர்கள் உணரமாட்டார்கள் என்பது உண்மை தான். ஆனால், அவர்களுக்கு இவ்வாறான வரலாறுகளை நினைவுபடுத்த வேண்டியதும், தற்போதைய சூழ்நிலையைத் தெளிவு படுத்த வேண்டியதும் கட்சி வரலாறு தெரிந்த ஒவ்வொருவரின் கடமையாகும்.
கௌரவ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத்தலைவர் உருவாக்கித் தந்த இக்கட்சியை தற்போதைய தேசியத்தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்கள் பல தியாகங்களுக்கு மத்தியில், கடந்த பதினைந்து வருடங்களாக வளர்த்து வரும் இந்த முஸ்லிம் காங்கிரஸைப் பாதுகாத்து, எதிர்காலச் சந்ததிகளிடம் ஒப்படைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பும் அவரிடமே இருக்கின்றது.
அதற்கு கட்சியிலுள்ள முக்கிய பிரமுகர்களும் பொது மக்களாகிய நாமும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி, சுயநலனுமின்றி சமூகத்துக்காக என்ற அடிப்படையில் இக்கட்சியை வழி நடாத்திச் செல்வதற்கு தலைவருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்பதே எமது நீண்ட கால அவாவுடன் கூடிய பிரார்த்தனையாகும்
0 comments: