Monday, October 23, 2017

மக்களை தவறாக வழிநடாத்தி தன்னை தலைவனாகக்காட்ட முற்படும் அமைச்சர் றிசாட்!

  எம்.என்.எம்.யஸீர் அறபாத்
                    ஓட்டமாவடி-கல்குடா.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாக பாராளுமன்றத்திற்கு முதன் முதலாக
பிரவேசித்தார் றிசாட் பதூர்தீன். அன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
அரசாங்கம் முஸ்லிம் காங்கிஸை அழிக்க முற்பட்ட போது, அதற்கு துணை போனதன்
விளைவாக அமைச்சராக நியமிக்கப்ட்டார். பின்னர் தொடர்ந்தும் அந்த அரசாங்கத்தில்
முழு அமைச்சராக இருக்கவும் மக்கள் செல்வாக்கை முஸ்லிம் காங்கிரஸை
விட்டுத்தூரமாக்கவும் தன்னையே முஸ்லிம்களின் தலைவராகக்காட்டி அரசியல்
அதிகாரத்தைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காகவும் றிசாட்  அகில இலங்கை முஸ்லிம்
காங்கிரஸ் என்ற கட்சியை தன்னைப்போல் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து
வெளியேறிவர்களைக் கொண்டு ஆரம்பித்தார்.

அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியில் இருந்தது. இதனையும்
முஸ்லிம் காங்கிரஸுக்கெதிரான அன்றைய அரசாங்கத்தின் முழு ஆதரவையும் பெற்று
அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் மனங்களை முஸ்லிம் காங்கிரஸிற்கெதிராக
திசை திருப்பினார். இந்தச்செயற்பாடு இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டு தான்
இருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திலும் தன்னை அவர்களின் செல்லப்பிள்ளையாகக்
காட்டிக்கொண்டு அவர்களைத் திருப்திபடுத்துவதிலும் (அகில இலங்கை முஸ்லிம்
காங்கிரஸ் என்ற கட்சி பெயரில் முஸ்லிம் என்ற பத்தையும் நீக்கி அந்த இடத்தில்
மக்கள் என்ற பத்தைச்சேர்த்தார்) முஸ்லிம் காங்கிரஸ் செல்வாக்கை குறைப்பதிலும்
கவனஞ்செலுத்தினார்.

இவரின் இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மனங்களிலிருந்து பெருவாரியாக முஸ்லிம்
காங்கிரஸை வெளியேற்ற முடியவில்லை. மாறாக, தன்னைப் போலுள்ளவர்களையே
இணைத்துக்கொள்ள முடிந்தது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை விமர்சிப்பதும், அவர் ஏதும் சமூகம் சார்ந்து
நடவடிக்கையெடுத்தால், அதை மக்களுக்குத் தவறாகக்காட்ட முற்படுவதும்,
இல்லையென்றால், அதை தான் செய்தாக அறிக்கைவிட முற்படுவதுமாக தனது செயற்பாடுகளை
முன்னெடுத்து, தன்னையே முஸ்லிம்களி்ன் தலைவராகக் காட்டுவதற்கும்
முயற்சி்க்கிறார். இவரின் இவ்வாறான செயற்பாடுகள் அண்மைக்காலத்தில்
அதிகரித்துக்காணப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் முஸ்லிம் காங்கிரஸிற்கு அதன்
முக்கியத்துவத்தை உணர்ந்து உரிய கௌரவம் வழங்கப்பட்டு, பொறுப்புமிக்க அமைச்சும்
அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் விளைவாக பாரிய
அபிவிருத்தித்திட்டங்களும் அதில் முக்கியமாக
குடிநீர்ப்பிரச்சனைகளுக்குட்பட்டிருந்த பிரதேசங்களுக்கு இன, மத, பிரதேச
வேறுபாடின்றி துரிதமாகச் செயற்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளால் கடந்த ஆட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தி
தொடர்பாக றிசாட் வைத்த குற்றச்சாட்டுகள் மறக்கடிக்கப்பட்டு, கட்சியின் ஆதரவு
மக்கள் மத்தியில் அதிகரித்துச்செல்கிறது. இதை மறைத்து முஸ்லிம் காங்கிரஸிலும்
அதன் தலைமையிலும் முஸ்லிம் சமூகம் அதிருப்தியிலிருப்பது போன்ற ஒரு மாயையை
தனக்கு சார்பான ஊடகங்களைப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதுவதையும் பார்க்கலாம்.

முஸ்லிம் சமூகத்தைப்பாதிக்கும் விடயங்களை இந்த அரசாங்கத்தில் ஏற்படும் போது,
ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் ஒன்று கூடுவதும், பின்னர் அவரை
விமர்சிப்பதும் என்ற ஒரு போக்கையும் அண்மையில் றிசாட் கடைப்பிடித்திருந்தார்.

ரவூப் ஹக்கீம் அவர்களைப் பொறுத்தளவில் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை அவர் உரிய
இடங்களில் பேசும் போது, அதற்கு துணையாக றிசாட் கருத்துத்தெரிவித்திருந்தால்,
அதை வரவேற்று இவ்வாறான சந்தர்பத்தில் றிசாட் பேசினார் என்று கூறி நன்றி
தெரிவிக்கும் பண்பு அவரின் அரசியல் முதிர்ச்சியையும், பக்குவமான
தலைமையென்பதையும் பரைசாற்றி நிற்கின்றது.

அண்மையில், ஜனாதிபதி ரவூப் ஹக்கீம் அவர்களையும் றிசாட், அசாத் சாலி ஆகியோரை
விசேடமாக அழைத்து முஸ்லிம்களின் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசியிருந்தார்.
அப்போது ரவூப் ஹக்கீம் பல பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டினார்.
இந்தச்சந்தர்ப்பத்தில் றிசாட் அவர்களும் இணைந்து பேசியதையும்  சேர்த்தே ரவூப்
ஹக்கீம் அவர்களின் ஊடகம் வெளியிட்டிருந்தது.

ஆனால், இந்த பக்குவத்தை றிசாட் அவர்களிடம் காண முடியாது. அவரின் அத்தனை
செயற்பாடுகளும் அவரை முதன்மைப்படுத்தியும் ஹக்கீம் அவர்களை தவறான ஒரு
தலைவராகக் காட்டுவதாகவும் சில சந்தர்ப்பங்களில் சமூகம் சார்ந்த விடயங்களில்
அவருடன் இணைந்து சென்று அவரைப் புறக்கணித்து, தான் அர்ப்பணிப்புடன்
சமூகத்துக்காகச் செயற்படுவதாகவும் ரவூப் ஹக்கீம் சுயநலமாக சமூக
அக்கறையில்லாமல் செயற்படுவதாக தனது ஊடக நண்பர்களூடாகவும் தனது ஊடகம் மூலமும்
காட்டி வருகிறார்.

அண்மையில் மாகாண சபைத்திருத்தம் அவசரமாகக் கொண்டு வரப்பட்ட போது, அரசாங்கம்
அதனை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்த போது, அதில்
சிறுபான்மையினருக்கு காப்பீடுகளை ஏற்படுத்துவதில் ரவூப் ஹக்கீம் அவர்கள்
காத்திரமாகச் செயற்பட்டிருந்தார்.

ஆனால், றிசாட் அதனை மறைத்து தனது ஊடகங்கள் மூலம் தானும் இராஜாங்க அமைச்சர்
ஹிஸ்புல்லாஹ் தான் போராடினதாகவும் அமைச்சர்கள் அடிக்க வந்ததாகவும் ரவூப்
ஹக்கீம் அவர்கள் அரச தரப்பிடம் தன்னை போட்டுக் கொடுத்ததாகவும்
ஈற்றில் ஏதும் செய்ய முடியாத நிலையில் சில திருத்தங்களை முன்வைத்து
வாக்களித்ததாகவும் செய்திகளை வெளியிட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

அவ்வாறான ஊடக அறிக்கைகளைப் பார்த்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் அவர்கள்
ரவூப் ஹக்கீம் அவர்கள் தனது பணியைச்சிறப்பாகச் செய்வதையும் ஊடகங்கள் அதை
மறைத்து றிசாட்டையும் தன்னையும் பெரிதாக எழுதியிருந்ததற்கு அவர் ரவூப் ஹக்கீம்
அவர்கள் இந்த விடயத்தில் காத்திரமாகச் செயற்பட்டிருந்தார்.
அவருடன் அவரின் கட்சிபாராளுமன்ற உறுப்பினர்களும் உறுதுணையாக இருந்தார்கள் என்ற
உண்மையை வெளிப்படுத்தியிருந்ததையும் காணக்கூடியதாக இருக்கிறது.

எனவே, தன்னை முஸ்லிம் சமூகத்தின் தலைவனாகக் காட்டுவதற்கு
கடும்பிரயத்தனமெடுக்கிறார். அதற்கு முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும்
தடையாக இருக்கவே அதற்கெதிரான கருத்துக்களைப் பரப்பி மக்களைக்குழப்பும்
வேலையைச் செய்கிறார்.

சமகாலப் பிரச்சனைகளைப் பார்க்கும் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்
ஹக்கீம் அவர்கள் தூரநோக்கோடு தனது பணியை முன்னெடுக்கிறார். ஆனால், றிசாட்
பதூர்தீன் அவர்கள் தனது அரசியல் இலாபங்களுக்காக குறுகிய சிந்தனையில்
செயற்படுகிறார் என்பதைப்புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

இவைகளைக் கருத்திற்கொண்டு, சமூகத்தின் நன்மைகருதி இவ்வாறான செயற்பாடுகளை
தவிர்த்து முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பாரிய சதிகளை முறியடிக்கத்
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது காலத்தின் தேவையாகும் என்பதை உணர்ந்து
செயற்பட வேண்டும்

SHARE THIS

0 comments: