-ARA.Fareel + விடிவெள்ளி-
அன்வர் மனதுங்க பௌத்தராக பிறந்து பின்னர் கிறிஸ்தவ மதத்தை தழுவிய இவர் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். மத்திய கிழக்கு நாடுகளில் தஃவாப் பணியில் ஈடுபட்டிருந்த இவர் தற்போது கட்டாரில் வாழும் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் இலங்கை பௌத்தர்களுக்கும் இஸ்லாத்தை போதித்து வருகின்றார்.
இறுதி மூச்சுவரை இஸ்லாமிய தஃவாப் பணியே தனது இலக்கு என்கிறார்.
அவர் மனம் திறந்து பேசினார். அடிக்கடி அரபுவார்த்தைகளை உச்சரித்தார். இலங்கையின் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்குமிடையில் பாரிய இடைவெளியொன்று இருக்கிறது. இந்த இடைவெளி நிரப்பப்பட்டாலே இரு சமூகங்களுக்குமிடையில் இன ஐக்கியம் ஏற்படும். புரிந்துணர்வு ஏற்படும். இஸ்லாத்தைப் பற்றி பௌத்தர்கள் கொண்டுள்ள தவறான புரிதல்கள் கலைக்கப்படவேண்டும்.
இந்த தஃவாப் பணியை நான் முன்னெடுக்க களத்தில் இறங்கியுள்ளேன் என்கிறார் அன்வர் மனதுங்க. அவருடனான முழுமையான நேர்காணலை இங்கு தருகிறோம்.
உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாமா?
பதில்: நான் நுகேகொடையில் பிறந்தவன். பிறப்பினால் பௌத்தன். புனித ஜோன்ஸ் கல்லூரியிலே எனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தேன். எனது 10 ஆவது வயதில் எனது குடும்பம் பௌத்த மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மதம் மாறியது. எனது பெற்றோர் உட்பட என்னுடன் சேர்த்து 6 குடும்ப உறுப்பினர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள்.
கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவ மதத்தைப் படித்தேன். க.பொ.த (உ/த) பரீட்சை எழுதியதன் பின்பு 1996 ஆம் ஆண்டு கிறிஸ்தவ மத பாடசாலையில் (Seminary) சேர்ந்து 2 வருட காலம் படித்தேன். படித்து முடித்து ஐந்து வருட காலம் கிறிஸ்தவ மிஷனரியில் கடமையாற்றினேன்.
இஸ்லாத்தின் மீது எவ்வாறு ஈர்க்கப்பட்டீர்கள்?
பதில்: நான் கிறிஸ்தவ மிஷனரியில் வேலை செய்து கொண்டிருந்த போது கிறிஸ்தவ மதத்தையும் ஏனைய மதங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். இந்த ஒப்பீடுகளுக்காக பல மதங்களைப் பற்றி படித்து அறிவை வளர்த்துக் கொண்டேன்.
எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. ஒரு முறை மலே குடும்பம் ஒன்று நான் வேலை செய்த மிஷனரிக்கு வந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக் கொண்டது. அந்த சம்பவம் என்னை இஸ்லாம் சமயத்தைப் படிக்கத் தூண்டியது. ஏன் அந்தக் குடும்பம் இஸ்லாத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மாறியது என்று சிந்தித்தேன்.
தொடர்ந்து 8 மாதங்கள் இஸ்லாத்தைப் பற்றி படித்தேன். கிறிஸ்தவ மதத்தையும் இஸ்லாத்தையும் நானே ஒப்பிட்டுப் பார்த்தேன். கிறிஸ்தவ மதத்தை விடவும் இஸ்லாமே மேலானது என்பதை உறுதி செய்து கொண்டேன்.
எப்போது இஸ்லாத்துக்கு மதம் மாறிக் கொண்டீர்கள்? அப்போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்வு எவ்வாறு இருந்தது?
பதில்: நான் 2004 ஆம் ஆண்டு இஸ்லாத்துக்கு மதம் மாறிக் கொண்டேன். அப்போது எனக்கேற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மகிழ்ச்சியினால் உள்ளம் நிறைந்தது. மதம் மாறியதை ஏனையோருக்கு கூற முயற்சித்தேன். என்னைச் சூழ்ந்திருந்த முஸ்லிம்கள் இது பற்றிக் கூற வேண்டாம். கூறினால் பிரச்சினை ஏற்படும் என்றார்கள். அதனால் நான் எவரிடமும் கூறவில்லை.எனது பெற்றோருக்கும் இது பற்றி தெரிவிக்கவில்லை. முதலில் இஸ்லாத்தைப் பயிற்சி செய்து பார்ப்போம். தவறானதாக இருந்தால் பிறகு மாறிக் கொள்வோம் என்ற நிலைப்பாட்டிலே இருந்தேன். அதனாலே எனது மதமாற்றத்தைப் பகிரங்கப்படுத்தவில்லை.
இஸ்லாத்துக்கு மதம் மாறிக் கொண்டதும் எவ்வாறான திட்டங்களை முன்னெடுத்தீர்கள்?
பதில்: இஸ்லாமிய அமைப்பொன்றுடன் இணைந்து தஃவாப் பணிகளை முன்னெடுத்தேன். கட்டுரைகள் எழுதினேன். பிரசங்கங்கள் நிகழ்த்தினேன். இரண்டு வருடங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டேன். ஒரு ஜமாஅத்துடன் தொடர்புபட்டு பிரசாரப் பணிகளை முன்னெடுத்ததால் ஏனைய ஜமாஅத்துக்களுக்கிடையில் தவறான கருத்து நிலவலாம் என்பதால் ஜமாஅத்துகளுடன் தொடர்புபடாமல் பிரசாரங்களை முன்னெடுத்தேன்.
2009 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடான பஹ்ரைனிலிருந்து எனக்கோர் அழைப்பு வந்தது. பஹ்ரைனின் Discover Islam எனும் அமைப்பு இந்த அழைப்பினை விடுத்தது. அழைப்பை ஏற்று பஹ்ரைன் நாட்டுக்குச் சென்று 3 மாதங்கள் தங்கியிருந்து அங்கு வாழும் சிங்களவர்களுக்கு இஸ்லாத்தைப் போதித்தேன். விளக்கினேன். இஸ்லாத்தின் கோட்பாடுகளைத் தெளிவு படுத்தினேன். 2009 ஆம் ஆண்டில் பஹ்ரைனிலிருந்து இலங்கை திரும்பி வந்தேன்.
இலங்கையில் எவ்வாறான தஃவாப் பணிகளை முன்னெடுத்தீர்கள்?
பதில்: 2009 ஆம் ஆண்டு பஹ்ரைனிலிருந்து திரும்பி வந்து புறக்கோட்டையில் புத்தக நிலையமொன்றினை ஆரம்பித்தேன். வெள்ளவத்தையிலும் இதன் கிளையொன்றினை நிறுவினேன். புத்தக நிலையங்களை ஊழியர்கள் நடத்தினார்கள். நான் இஸ்லாமிய மார்க்கப் பிரசாரங்களில் ஈடுபட்டேன். கற்பிட்டியில் இஸ்லாமிய மார்க்கப் பயிற்சி நிலையமொன்றினையும் ஆரம்பித்து இஸ்லாத்தில் இணைந்து கொள்வோருக்கு மார்க்கப் பயிற்சிகளை வழங்கினேன்.
2012 ஆம் ஆண்டில் பொதுபலசேனா ஹலாலுக்கு எதிராக செயற்பட்ட காலத்தில் பொதுபலசேனா அமைப்பு இஸ்லாத்துக்கு எதிராக, இஸ்லாத்துக்கு விரோதமாக முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நானே பதில் அளித்தேன். நேர்காணல்களை வழங்கினேன். உலமா சபை பதிலளிக்கத் தவறிய சந்தர்ப்பங்களிலெல்லாம் எனது இணையத்தளம் மூலம் பதில்களை வழங்கினேன். அரசாங்கம் எனது இணையத்தளத்தை இடைநிறுத்தம் செய்தது.
புறக்கோட்டையிலிருந்த எனது புத்தகக் கடைக்கு பொதுபலசேனா ஆதரவாளர்கள் வந்து எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள். அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் நான் டுபாய், பஹ்ரைன், கட்டார் போன்ற நாடுகளுக்கு சென்று அந் நாடுகளில் தஃவாப் பணிகளை மேற்கொண்டேன். தொடர்ந்தும் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அப்போது எனது புத்தகக் கடையில் 8 ஊழியர்கள் பணிபுரிந்தார்கள்.
அச்சுறுத்தல் காரணமாக 2012 ஆம் ஆண்டு கடை மூடப்பட்டது. ஒரு நாள் பகல் வேளையில் மூவர் எனது கடையை உடைக்க முயற்சித்த போது அருகிலிருந்த பொதுமக்கள் அதைத் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். மக்களால் சம்பந்தப்பட்ட மூவர் தொடர்பில் விசாரிக்கப்பட்ட போது அவர்கள் தமது அடையாள அட்டையை காண்பித்துள்ளார்கள். அவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் என்பது அடையாள அட்டை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
இக்காலத்தில் நான் வெளிநாட்டிலே இருந்தேன். டுபாய் நாட்டிலிருந்து கட்டார் நாட்டுக்குச் சென்றேன். இச்சந்தர்ப்பத்தில் எனது இணையத்தளம் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டிருந்தது. எனது சட்டத்தரணிகள் மூலம் எனது இணையத்தளம் தடை செய்யப்பட்டமைக்கான காரணத்தை வினவினேன். பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரிலே தடைசெய்யப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது நீங்கள் எந்த நாட்டிலிருந்து தஃவாப் பணியினை மேற்கொள்கின்றீர்கள்?
பதில்: நான் டுபாய் நாட்டிலே சிங்களவர்கள் மத்தியில் இஸ்லாமிய பிரசாரங்களை முன்னெடுத்து வந்து 2013 ஆம் ஆண்டு கட்டார் நாட்டுக்குச் சென்றேன். அன்றிலிருந்து இன்றுவரை நான்கு வருட காலமாக இஸ்லாமிய பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். மாற்று மதத்தவர்களை பலாத்காரமாக மதம் மாற்றும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபடவில்லை.
ஏனைய இஸ்லாமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தின் கோட்பாடுகள், இஸ்லாமிய வாழ்க்கை முறையினை எடுத்து சொல்கிறேன். அவர்கள் இஸ்லாத்தினால் கவரப்பட்டு விருப்பத்துடன் மதம் மாறிக் கொள்கிறார்கள்.
கட்டாரில் வாழும் ஆபிரிக்க நாட்டவருக்கு ஆங்கில மொழியில் இஸ்லாத்தைப் போதிக்கிறேன். பயிற்சிகள் வழங்குகிறேன். அவர்கள் கிறிஸ்தவர்கள். அத்தோடு அங்கு வாழும் இலங்கை சிங்களவர்களுக்கு சிங்கள மொழியில் இஸ்லாமிய மத பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறேன். இவ்வாறு கட்டாரில் வருடத்திற்கு சுமார் 100 க்கும் அதிகமானவர்களை இஸ்லாத்தை தழுவச் செய்திருக்கிறேன். 2013 லிருந்து இன்று வரை சுமார் 500 பேர் இஸ்லாத்துக்கு மதம் மாறியிருக்கிறார்கள்.
கட்டாரில் பனார் என்ற பெயரில் அரசு மதப் பிரசார நடவடிக்கைளை முன்னெடுக்கிறது. Eid Charity Foundation எனும் அமைப்பின் கீழ் நான் இந்தப் பணியினை முன்னெடுத்து வருகிறேன். இஸ்லாத்தை தழுவிக் கொள்பவர்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் வழங்கப்படுகின்றன.
இலங்கையில் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களுக்கும் இடையில் எவ்வாறான இடைவெளியினை நீங்கள் காண்கின்றீர்கள்?
பதில்: இலங்கையில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் பல நூற்றாண்டு காலத்துக்கு முன்பு ஆடை கலாசாரத்தில் வேறுபாடுகள் இருக்கவில்லை. ஆனால் இன்று பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிங்களவர்கள் மாத்திரமல்ல முஸ்லிம்களும் மேலைத்தேய கலாசாரத்துக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
1500 ஆம் ஆண்டு ரொபட் நொக்ஸ் என்ற ஆங்கிலேயர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இலங்கை மக்களை நேரில் கண்டு அதனை எழுதியுள்ளார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் ‘எதா ஹெலதிவ’ என்று சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
அவர் தனது புத்தகத்தில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.
‘சிங்களவர்கள் 6 அங்குல நீள தாடி வைத்திருந்தார்கள். அவர்கள் சாரம் (லுங்கி) மாத்திரம் அணிந்திருந்தார்கள். மேலாடை அணிந்திருக்கவில்லை. முஸ்லிம்களும் இவ்வாறே ஆடை அணிந்திருந்தார்கள். சிங்களப் பெண்கள், மற்றும் முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் ஆடை விவகாரத்தில் வேறுபாடு காணப்படவில்லை.
பிரச்சினை என்னவென்றால் முஸ்லிம்களில் ஒரு தரப்பு கலாசாரத்தை மாற்றுகிறது. உதாரணத்துக்கு சம்பவமொன்றினைக் குறிப்பிட முடியும். கட்டாருக்கு வேலைவாய்ப்பு பெற்று பெற்று மௌலவி ஒருவர் இலங்கையிலிருந்து வந்தார். அவர் வரும் போது ஜுப்பாவும், அதனுடன் கூடிய நீள காற்சட்டையும் அணிந்திருந்தார்.
அவர் முதல் மாதம் சம்பளம் பெற்றதும் தனது உடையை மாற்றிக் கொண்டார். முதல் மாத சம்பளத்தில் கட்டார் நாட்டவர் அணியும் உடை வாங்கி அணிந்தார். ஏன் இலங்கையிலிருந்து அணிந்து வந்த உடையை மாற்றினீர்கள் என்று கேட்டேன். இலங்கையில் அணிந்தது பட்டானி (பாகிஸ்தான்) ஆடை என்றார். அப்படியென்றால் இலங்கையில் பாகிஸ்தான் ஆடையல்லவா அணியப்படுகிறது. மத்ரஸாக்களிலும் இங்கே இவ்வாறான ஆடையையே மாணவர்கள் அணிகிறார்கள்.
இவர்கள் இருப்பது இலங்கையில், அணிவது பாகிஸ்தான் உடை. அந்த மௌலவி கட்டாரில் இருந்து இலங்கை திரும்பினார். மீண்டும் அதே உடையுடனே வந்தார். இது தான் சுன்னா என்று அவர் நினைக்கிறார்.
பெண்களும் இப்படித்தான். அதிகம் மாறி வருகிறார்கள். பெண்கள் கறுப்பு நிற அபாயாதான் அணிய வேண்டும் என்ற நியதியில்லை. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். இவ்வாறு ஆடை கலாசாரம் மாற்றமடைவதால்தான் இனவாதிகள் முஸ்லிம்கள் இலங்கையை அரபு கொலனியாக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள்.
முஸ்லிம்களின் சிலர் எமது தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்பதில்லை. நமோ…. நமோ…. என்று கூறுவது சிர்க் என்கிறார்கள். இஸ்லாத்தில் எழும்பி நிற்பது வணக்கமல்ல. எஹுதியின் உடல் தகனத்துக்காக எடுத்துச்செல்லப்பட்டபோது கூட நபிகள் நாயகம் அவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். தேசிய கீதத்தில் நமோ… நமோ… மாதா என்ற சொற்களைத் தவிர்த்து எமக்கு தேசிய கீதம் இசைக்கலாம் அல்லவா?-
சிலர் ‘ஆயுபோவன்’ என்று சொல்ல வேண்டாம். என்கிறார்கள். இது தவறு. இவ்வாறு நினைப்பதே எமக்குள் உள்ள இடைவெளியை விரிவுபடுத்துகிறது.
மொழி ரீதியான இடைவெளிகள் எமக்குள் இருப்பதாக கருதுகிறீர்களா?
பதில்: ஆம். முன்னைய முஸ்லிம் தலைவர்கள் சிங்களம் பேசினார்கள். சிங்களவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார்கள். இதனால் இரு இனங்களுக்குமிடையில் ஓர் இணைப்பு இருந்தது. உறவு இருந்தது. சிங்களவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களுக்கு வாக்களித்தார்கள். முஸ்லிம் தலைவர்களில் ஏ.சி.எஸ்.ஹமீட், எம்.எச்.மொஹமட், ஏ.எச்.எம்.பௌசி, அலவி மௌலானா போன்றவர்களை குறிப்பிடலாம்.
இப்போது மொழி ரீதியிலான இணைப்புகள் மாற்றமடைந்துள்ளன. அநேகமானோருக்கு சிங்களம் சரளமாக பேசத்தெரியாது. கிழக்கில் சிங்களம் பேசமுடியாவிட்டால் பிரச்சினையில்லை.
ஆனால் நாட்டில் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு சிங்கள மொழி தேவை. நாம் ஒன்றிணைய மொழி அத்தியாவசியமானதாகும். நான் கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மதம் மாறிய போது முஸ்லிம்கள் என்னைத் தமிழ் படிக்குமாறு பலவந்தப்படுத்தினார்கள்.
பௌத்த தேரர்கள் பள்ளிவாசல்களுக்கு எதிராக செயற்படுவதற்கான காரணம் என்ன எனக் கருதுகிறீர்கள்?
பதில்: பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படுவது ஒரு வரையறைக்குள்ளாக்கப்பட வேண்டும். இதற்கென அரசு சட்டமொன்றினை இயற்ற வேண்டும். இன்று மத்ரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்டு பின்பு அவை பள்ளிவாசல்களாக மாறி உள்ளன. முஸ்லிம்கள் நாம் சன நெருக்கடி மிக்க சந்தியில் பல பள்ளிவாசல்களை நிறுவிக்கொள்கிறோம்.
அப்பள்ளிவாசல்களின் அதான்கள் ஏனைய சமூகத்தினருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன.
நாம் முஸ்லிம் அல்லாத ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் பள்ளிவாசல்கள் எவ்வாறு எந்த இடத்தில் அமைய வேண்டுமென்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கு ஒதுக்கப்படும் காணியின் அளவு, வாகனத்
தரிப்பிடத்துக்கான காணியின் அளவு என்பனவற்றை சட்டமே தீர்மானிக்கிறது. இலங்கையிலும் இவ்வாறான ஒரு சட்டம் இயற்றிக் கொள்ளப்பட வேண்டும்.
கிராமங்களின் மத்தியில் பன்சலைகள் அமைந்துள்ளன. பன்சலைக்கு அருகில் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படும் போது பள்ளிவாசலைச்சுற்றி முஸ்லிம்கள் குடியேறுகிறார்கள். பன்சலையில் இருக்கும் தேரர்களுக்கு சிங்களவர்களின் வீடுகளிலிருந்தே உணவு வழங்கப்படுகிறது.
பன்சலைக்கருகில் பள்ளிவாசல்கள் அமைவதால் பௌத்த தேரர்கள் தமது உணவுக்குகூட பாதிப்புகள் ஏற்படும் எனக் கருதுகிறார்கள். யார் எமக்கு உணவு வழங்குவது என்று சிந்திக்கிறார்கள்.
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு பெற்றுக்கொள்ளலாம்?
பதில்: தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை 2012 முதல் தொடர்கிறது. 20 பர்ச் காணி பள்ளிவாசலுக்கு வழங்குவதாக அரசாங்கம் கூறியிருக்கிறது. இது எமக்கு கிடைக்கும் சட்ட ரீதியான காணியாகும்.
எமக்கு 80 பர்ச் காணி வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்காது 20 பர்ச் காணியை பெற்று பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்ளலாம். மேலும் தேவையான காணியை பணம் கொடுத்து கொள்வனவு செய்து கொள்ளலாம். முஸ்லிம் சமூகம் நிச்சயம் இதற்காக உதவி செய்யும்.
இலங்கையில் இஸ்லாம் தொடர்பான என்ன வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளீர்கள்?
பதில்: இலங்கையில் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கவுள்ளேன். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளேன். சட்டரீதியாக செயற்படுவதற்கு அமைப்பொன்றினை பதிவு செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். பதிவு கிடைத்ததும் கட்டாரில் அங்கு நான் கடமையாற்றும் அமைப்பில் இருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளேன். இலங்கையிலே எனது தஃவாப் பணிகளை முழுநேரமாக முன்னெடுக்கவுள்ளேன்.
0 comments: