Tuesday, December 13, 2016

ஸகாத் நிதியத்தையும் விட்டுவைக்காத அரசியல்

kalkudah-sakath-fund

நேற்று அதாவது 12.12.2016 அன்று கல்குடா ஸகாத் நிதியத்தினால் தியாவட்டவான் தாண்டியடியில் மரியம் விலேஜ் என்ற பெயரில் ஒரு வீட்டுத் திட்டம் திறக்கப்பட்டது. உண்மையில் எமது பிரதேசத்தில் இவ்வாரான நல்ல பல அபிவிருத்தித்திட்டங்கள் நடை பெறுவது வரவேற்கத்தக்கதொரு விடயம். இல்லாத ஏழைகளுக்கு இருப்பிடம் கட்டிக் கொடுப்பதென்பது சாதாரண விடயமாகப் பார்க்க முடியாது.
இவ்வாரான நிகழ்வுகள் வரலாற்றிலே சான்றாகக் கொள்ளப்பட வேண்டியவை. ஆனால் இந்த நிகழ்வு ஒரு துாய்மையான நிகழ்வாக நடந்தேறியதா என்று பார்த்தால் அவ்வாரான செயற்பாடுகள் ஒன்றையும் அங்கு காணக்கிடைக்கவில்லை. ஸகாத் என்பது அல்லாஹ்வின் வரம்பாகும். அதில் துாய்மையே முதலில் நோக்கப்படும். எனவேதான் அதை நிறைவேற்றுபவர்கள் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் என அணைவரும் அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும். இல்லையேல் அதனால் எந்தப் பிரயோசனமும் கிடைக்கப்போவதில்லை.
வரலாற்று ரீதியான இவ்வானதொரு நிகழ்வை தனியே அரசியல் மயப்படுத்தி ஒரு சாராரை மாத்திரம் திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட ஒன்றே நேற்று அரங்கேறிய நிகழ்வாகும். எமது பிரதேசத்திலே எல்லா அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும், அதற்காக உழைப்பவர்களும் அனேகம் பேர் உள்ளனர். இவர்கள் எந்தக்கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பினும் ஸகாத் நிதியம் என்று வருகின்ற போது ஒற்றைமைப்படுபவர்கள்.ஏனெனில் அரசியல் வேறு, ஸகாத் நிதியம் வேறு. எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஸகாத்தை கொடுத்தே ஆகவேண்டும் மேலும் அதை ஸகாத் நிதியத்திடமே கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடையாது. எனவேதான் அப்படிப்பட்ட ஸகாத் நிதியம் அரசியல் சாயம் தெளிக்கப்பட்ட ஒன்றாக இருக்கக் கூடாது. அவ்வாரு இருந்தால் அதன் நோக்கம் ,புனிதம் எல்லாம் கெட்டுவிடும். இது போக அந்த ஸகாத் நிதியத்தின் யாப்பிலே எந்த ஒரு அரசியல் கட்சியிடமோ, அரசியல் வாதியிடமோ தன்னை ஈடபடுத்திக் கொள்வதில்லை என்ற ஒரு ஏற்பாட்டையும் செய்து வைத்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் மீறி நேற்று அரசியல் சித்து விளையாட்டொன்றை தாண்டியடியிலே அரங்கேற்றி இருக்கிறார்கள் என்றால் இவர்களின் புனிதம் தான் என்ன? நோக்கம்தான் என்ன?
நேற்றைய நிகழ்வை பார்க்கின்ற போது முழுக்க முழுக்க இதை முன்னின்று நடத்தியது எமது பிரதேசத்தில் முன்னிலை வகிக்கின்ற ஒரு இஸ்லாமிய அமைப்பு.இந்த அமைப்புக்கு இவ்வார நிகழ்வின் சாதக ,பாதக தன்மையினை யாரும் விளக்கத் தேவையில்லை. இஸ்லாத்திலே தங்களை அர்ப்பணித்துச் செயற்படுகின்ற இந்த அமைப்பினர் ஏன் இந்த நிகழ்வை ஒரு சாராரை மாத்திரம் திருப்திப்படுத்துகின்ற நிகழ்வாக மாற்றினார்கள் என்பது புரியவில்லை. இதனால் ஏற்படப்போகின்ற விமர்சனத்தையும் தாண்டி தான் சார்ந்த அரசியல் தலைவனின் திருப்தியே மேலானது என்ற நிலைமைக்குத் தள்ளப்படிருக்கிறார்கள் என்றால் இவர்கள் எந்த அளவுக்கு அந்த அரசியல் வாதியை நேசித்திருக்கிறார்கள் என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை. நிதி எங்கிருந்து வந்தாலும் அது ஸகாத் நிதியத்திற்கே சொந்தமானது. அதை மற்றவர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பால் நின்று இறை திருப்தியை மாத்திரம் எதிர்பார்த்து நடை முறைப்படுத்தினால் மாத்திரமே அதன் நோக்கம் நிறைவேறும். செய்தவருக்கு நற்கூலியும் கிடைக்கும். இப்படியானதொரு நிகழ்வாக நேற்றைய நிகழ்வு இடம் பெறாதது மிகுந்த மன வேதனையளிக்கின்றது.
இந்த நிகழ்வின் பின்னர் கல்குடா ஸகாத் நிதியத்தின் மீது இருந்த நம்பிக்கை அடியோடு போய்விட்டது. இனிமேல் இந்த நிதியத்தை ஒரு நடு நிலமையான, இறை திருப்தியை மாத்திரம் இலக்காகக் கொண்ட அமைப்பாக யாரும் பார்க்கப் போவதில்லை. துாய்மையான முறையில் ஸகாத்தை நிறைவேற்ற முனைபவர்கள் யாரும் இனிமேல் இந்த நிதியத்தை நம்பத்தயாராக இருக்கமாட்டார்கள்.அதே போன்று ஏனைய சமுக நிருவனங்களை தன்னைடைய அரசியல் இலாபத்தை அடைந்து கொள்வதற்காகப் பயன்படுத்தும் அரசியல் வாதிக்கு ஸகாத் நிதியம் ,அல்லாஹ்வுடைய இல்லம்,அவனது வரம்புகள் என்பது எல்லாம் பத்தோடு பதினொன்றாகவே இருக்கும் என்பதில் யாரும் வியக்கத் தக்க செயலாக பார்க்கத் தேவையில்லை.

SHARE THIS

0 comments: