Wednesday, December 28, 2016

ஊரே மயான பூமியான அந்தக் நாள்- டிசம்பர் 26, 1992ம் வருடம்


*****************************
24 வருடங்கள் கடந்தும்  இன்னும் அந்தச் செய்தி  பேரிடியாய் என் காதுகளில் ஒலிக்கிறது. ஊரே மயான பூமியான அந்தக் காட்சி இன்றும் என் மனதை கருகச் செய்கிறது.

இன்று அர்த்தமற்றுப் போன அன்றைய LTTE பாசிசத்தின் இரத்தப் பசிக்கு எங்கள் 'கலங்கரை விளக்குகள்' பலி கொள்ளப்பட்டன.  
றிதிதென்ன மக்களின் கண்ணீர் துடைக்கச் சென்ற எங்கள் சத்தியங்கள் மீயாங்குளச் சந்தியில் சத்தூக்கிடப்பட்டன.

உயர்பதவியில் தீரமானிக்கும் சக்திகளாக முஸ்லிம்கள் இருக்கக் கூடாது, முஸ்லிம்களுக்கென்று தனியான சுயசிந்தனை, அபிலாஷைகள் வேண்டியதில்லை என்ற பாசிசத்தின் ஏகாதிபத்தியக் கொள்கை இந்த திட்டமிட்ட படுகொலைகளுக்கு காரணமாயின.

அன்றைய கண்ணிவெடித் தாக்குதலில்  ஜனாப் வை. அஹமது, ஜனாப் ஏ.கே. உதுமான், ஜனாப் எஸ்.ஏ.எஸ். மகுமூது, ஜனாப் ஏ.பி.எம். முஹிதீன் மற்றும்  இப்படுகொலைக்கு கண்கண்ட சாட்சியாகவிருந்த ஜனாப் யூ.எல். சாஹுல் ஹமீட் ஆகிய முத்துக்கள் சஹீதாக்கப்பட்டனர்.
வாகன சாரதியாகச் சென்ற மகேந்திரன் என்னும் தமிழ் மகனும் உயிர் நீத்திருந்தார்.

மர்ஹூம் வை. அஹமது (1945-1992)
******************************************
கல்குடாவின் முதல் கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர் மற்றும் முதல் மாவட்ட மேலதிக அரச அதிபர். இலக்கியவாதி, கல்விமான், சமூக சிந்தனையாளர்,சிறந்த அரசாங்க நிருவாகி எனப் பல்வகைமை ஆளுமை கொண்ட இளகிய மனம் படைத்த பண்பாளர்.

மர்ஹூம் ஏ.கே. உதுமான் (1962-1992)
*********************************
கல்குடாவின் முதல் இளம்வயது முஸ்லிம் உதவி அரசாங்க அதிபர்.  எளிமை, சதா புன்னகை சிந்தும் முகம், புத்திக்கூர்மை,பேச்சாற்றல், சமூக சிந்தனை என்பவற்றால் மக்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்டவர்.

மர்ஹூம்  எஸ்.ஏ.எஸ். மகுமூது அதிபர்
******************************************
'அதிபர்' பதவியின் இலக்கணத்தை மெய்ப்பித்தவர்.  எப்போதும் பிறருக்கு உதவும்  நன்மனப்பாங்குடன் தன் வருமானத்துக்குள் ஏழ்மையிலும் செம்மையாய் வாழ்ந்தவர். 
'நட்பு' என்னும் சொல்லுக்கு 'கற்பு' என்னும் அர்த்தம் மிளிர உறவாடிய நல்ல மனிதர்.

மர்ஹூம் ஏ.பி.எம். முஹைதீன்
************************************
கல்குடாவின் முதல் சட்டத்தரணி என்னும் பெருமைக்குரியவர். சமூக அக்கறை கொண்டவர். எல்லோருடனும் அன்புடனும் சகஜமாகவும் பழகும் பண்பு கொண்டவர்.  தனிப்பட்ட முறையில்  பிறருக்கு உதவுதல், கல்விக்கான ஊக்கமளித்தல் என்பவற்றை தனித்துவமான பண்புகளாக கொண்டவர்.

மர்ஹூம் யூ.எல். சாஹுல் ஹமீட்
***************************************
ஐந்து பிள்ளைகளின் தந்தை. அன்றாடம் சுயதொழில் செய்து பிழைப்பு நடாத்தி வந்த ஏழை மனிதர். அன்றைய தினம் விறகு வெட்டி வயிற்றுப் பசிபோக்க வாகனேரி காட்டுப் பகுதிக்குள் சென்றிருந்தார்.

இந்தத் தினத்தில் மட்டுமல்லாது என்றும் சமூகத்திற்காய் அவர்கள் சிந்திய இரத்தத்திற்கும், இழந்த இன்னுயிர்களுக்குமுரிய  பெறுமானத்தை நாம் உணரத் தலைப்பட வேண்டும். 

அவர்கள் விட்டுப் போன சமூகப் பணிகளைத் தொடர நன்மனம் கொண்ட சந்ததிகளை உருவாக்குதல்  நாம் அன்னவர்களுக்குச் செய்யும் நன்றிக் கடனாகும்

எமக்காய் உயிர்நீத்த அந்த நல்லவர்களின் மண்ணறை வாழ்வுக்காகவும், மறுமை வாழ்வுக்காகவும் அல்லாஹ்விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்வோம்.

யா அல்லாஹ், அன்னார்களுடைய சமூகப் பணிகளை ஏற்றுக் கொள்வாயாக; சஹீதாக்கப்பட்ட அன்னவர்களுக்கு உன் உயர்தரமான சுவனத்து அந்தஸ்தை வழங்குவாயாக.  

ஆமீன்

SHARE THIS

Author:

0 comments: