Sunday, July 31, 2016

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புதிய நிர்வாகத் தெரிவு! - உண்மை நிலவரம். Must read

Sheikh haider

சென்ற 24.07.2016 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது. அத்தெரிவில் ஏலவே இருந்த அதே நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இச்செய்தி கேட்ட பெரும்பான்மையான ஆலிம்களும்;, பொது மக்களும் தமது மகிழ்சியையும், ஆதரவையும் தெரிவித்திருந்த அதே வேளை சர்வதேச மட்டத்தில் பல அறிஞர்கள் பலரினாலும் பல பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனாலும் எமது நாட்டில் விரல் விட்டு எண்ணப்படக்கூடிய ஒரு சில சகோதரர்கள் சமூக ஊடகங்களில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியது மட்டுமல்ல சிலர் தமது காழ்ப்புணச்சியையும் வெளிப்படுத்தியமை மிக மன வேதனையைத் தந்ததது. சிலர் தனிப்பட்ட முறையில் ஒரு சிலரின் மீதி இருக்கக் கூடிய கோபம், பொறாமை, அதிருப்தியின் காரணமாக முழு ஜம்இய்யாவையும், ஒட்டுமொத்த ஆலிம்களையும் குறை கூறியிருந்ததானது அவர்களின் மறுமை வாழ்வைக் கூட நாசப்படுத்தி விடுமோ என்று அஞ்சக் கூடிய முறையில் அவர்களின் பின்னூட்டல்களும், பதிவுகளும் அமைந்திருந்தன். மிகவும் சொற்பமானவர்களின் இந்தக் கருத்துக்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை என்ற போதிலும் அந்த சொற்பமானவர்களும் எமது சகோதரர்களல்லவா! அவர்களும் இது பற்றித் தெளிவு பெற வேண்டும் என்ற நேக்கில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.
நிர்வாகத் தெரிவும், தலைமைப் பொறுப்பும்:
மூன்று ஆண்டுகளுக்கொரு முறை தெரிவு செய்யப்படும் இந்நிர்வாகத் தெரிவு மிகவும் நீதமான முறையிலும், ஜனநாயக ரீதியாகவுமே நடைபெறுகிறது. அதாவது சுமார் 24 மாவட்டங்களிலுமுள்ள மாவட்டக் கிளைகளின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவே மத்திய குழு என அழைக்கப்படும்.
மாவட்ட அல்லது பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களை தெரிவு செய்யும் அதிகாரம் தலைமையகத்திற்கு இல்லை. அதனை அவ்வப்பிரதேச ஆலிம்களே தமக்குள்யேயே தெரிவு செய்து கொள்வர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சுமார் 33 பேர்கள் கொண்ட ஒரு நிறைவேற்றுக் குழுவுக்கு 25 பேரைத் தெரிவு செய்ய (அடுத்த 8 பேரையும் பதவிக்கு வரும் நிறைவேற்றுக் குழு, தகுதி மற்றும் பிரதேச அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்) , மத்திய குழுவின் 25 பேர்களும், ஏலவே நிறைவேற்றுக் குழுவிலிருந்த 33 பேர்களும் தகுதி பெறுவர். இதனடிப்படையில் தெரிவுக்காக வாக்களிக்கும் உரிமை சுமார் 108 நபர்களோ அல்லது அதனை விடக் குறைந்த எண்ணிக்கையுடையோரே பெறுவர்;. சில வேலை 24 மாவட்டங்களிலுமுள்ள பதவி தாங்குனர்கள் குறித்த நிறைவேற்றுக் குழுவில் இடம் பெற்றால் குறித்த 75 எண்ணிக்கையிலிருந்து சிலர் குறையலாம். அந்த அடிப்படையில் இம்முறை சுமார் 99 பேர்கள் தெரிவில் கலந்துகொள்ள தகுதி பெற்றாலும் 77 பேர்களே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குச் சீட்டும், வாக்களிப்பு இடமும்:
இத்தெரிவு இடம்பெறும் மண்டபத்தில் வாக்களிக்கத் தகுதி பெறுபவரும், நிர்ணயிக்கப்பட்ட சில உத்தியோகத்தர்கள் மட்டுமே நுழைய முடியும். ஜம்இய்யாவுக்கு எந்த வகையில் நெருக்கமானவராக இருந்தாலும் இதனுள்ளே பிரவேசிக்க முடியாது என்பது ஒரு ஒழுங்கு முறையாகக் கணிக்கப்படும். இம்முறை மேற்படி இரண்டு தகுதிகளும் இல்லாததினால் நானும் ஜம்இய்யாவுக்கு மிக நெருக்கமான ணரு சகோதர ஆலிமும் இடைநடுவில் நிறைவேற்றுக் குழுவின் ஒரு அங்கத்தவரின் விருப்பத்திற்கமைய மண்டபவத்தை விட்டும் வெளியேற்றப் பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இம்முறை வாக்குச் சீட்டில் சுமார் 99 பேர்களுடைய பெயர்கள் குறிக்கப்பட்டிருந்தன. தமக்கு விருப்பமான 25 பேர்களை தாமாகவே 30 நிமிடத்திற்குள் தெரிவு செய்ய முடியும். இத்தெரிவுக்கு சட்ட யாப்பின் படி அஷ்-ஷைக் எஸ்.எல்.நவ்பர், எம்.எல்.எம்.இல்யாஸ்;, அஷ்-ஷைக் ஏ.எல்.எம் ரிழா ஆகிய மூவரும் தலைமை வகித்தனர். அந்த அடிப்படையில் கீழ்வரும் 25 நபர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
)  அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வி
2) அஷ்-ஷைக் ஏ.சீ.எம் அகார் முஹம்மத்
3)  அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
4)  அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல்
5) அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் காலிக்
6)  அஷ்-ஷைக் எம்.எச்.எம் யூசுப்
7)  அஷ்-ஷைக் ஏ.எல்.எம் றிழா
8)  அஷ்-ஷைக் எஸ.எச் ஆதம்பாவா
9)  அஷ்-ஷைக் ஏ.எல்.எம் ஹாஷிம்
10) அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸிம்
11) அஷ்-ஷைக் எம்.எம்.எம்.முர்ஷித்
12) அஷ்-ஷைக் எம்.கே அப்துர்றஹ்மான்
13) அஷ்-ஷைக் எச் உமறுத்தீன்
14) அஷ்-ஷைக் எஸ்.எல்.நவ்பர்;
15) அஷ்-ஷைக் எம்.எல்.எம்.இல்யாஸ்;
16) அஷ்-ஷைக் எம்.எப்.எம்.பாஸில்
17) அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித்;
18) அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் ஜஃபர்
19) அஷ்-ஷைக் அர்கம் நூறாமித்
20) அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத்
21) அஷ்-ஷைக் ஏ.ஸி.எம் பாழில்;
22) அஷ்-ஷைக் ஏ.பி.எம். அலியார்;
23) அஷ்-ஷைக் எஸ்.எம்.எம் ஜுனைத்
24) அஷ்-ஷைக் எஸ்.ஏ.பி.ஏ.எஸ் சுப்யான்
25) அஷ்-ஷைக் எஸ்.எச் சறூக்
தலைமைப் பதவியும், ஏணைய பதவிகளும்:
ஏணைய தெரிவுகள் பற்றியோ அல்லது அதே நிர்வாகம் என்பது பற்றியோ அவ்வளவாக யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் தலைவரின் தெரிவு பற்றித் தான் ஆநேகமானவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
ஆகவே தெரிவு செய்யப்பட்ட மேற்படி அங்கத்தவர்கள் மீண்டும் தமக்கு மத்தியில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பதவி தாங்குனர்களைத் தெரிவு செய்து கொள்வர். இதனடிப்படையில் அத்தெரிவுக்கு 23 பேர்கள் மட்டுமே சமூகமளித்திருந்தனர். இருவர் குறித்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வில்லை. அந்த் 23 வாக்குகளில் 22 வாக்குகளைப் பெற்ற அஷ்-ஷைக் எம்.ஐ.எம்.ரிஸ்வி முஃப்தி அவர்கள் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அந்த ஒரு வாக்கு வித்தியாசமானது அவர் தனது வாக்கை அஷ்-ஷைக் ஏ.சீ.அகார் முஹம்மத் அவர்களுக்கு வழங்கியிருப்பார் என்பது எனது யூகம்.
மேலும் மத்திய குழுவிலிருந்து 25 பேர்களைத் தேர்ந்தெடுக்க நடாத்தப்பட்ட தெரிவிலும் சுமார் 77 வாக்குகளில் 2 வாக்குகள் செல்லுபடியற்றதாகவும், மீதமுள்ள 75 வாக்குகளில் 73 வாக்குகளை ரிஸ்வி முஃப்தி அவர்களே பெற்றிருந்தார்.
இப்படி ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைமையை முன்பின் தெரியாமல் வாய்க்கு வந்த படி விமர்சிப்பதும், ஒவ்வாத வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதும் எவ்வளவு பெரிய அநியாயமாகும். அல்லாஹுதஆலா சகலரையும் மன்னிப்பானாக!
மாற்றம் வேண்டும்! மாற்றம் ஒன்றே மாறாதது!
மாற்றம் வேண்டும்! மாற்றம் ஒன்றே மாறாதது! என்ற முதுமொழி மாறி ஜம்இய்யாவின் தலைமை ஒன்றே மாறாதது என்று சொல்லுமளவுக்கு மீண்டும் மீண்டும் அதே தலைமை வருகிறது என்று சிலர் கூறுமளவு இம்மனப்பதிவு ஆகி விட்டது.
தனிப்பட்ட முறையில்; நானும் தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும்! என்ற சிந்தனையுள்ளவனாகவும் இருந்திருக்கலாம். ஏன் ஷேக் அகார் அவர்களோ அல்லது யூசுப் முஃப்தி அவர்களோ அல்லது ஜம்இய்யாவின் முன்னேற்றத்தின் இலைமறை காயாக செயற்படும் ஷேக் முபாரக் ஹழரத் அவர்களோ இதற்கு தகுதியானவர் இல்லையா? அல்லது முன்னாள் பொதுச் செயலாளர் ஷேக். அப்துல் நாஸர் அவர்கள் இந்த இடத்திற்கு பொறுத்தமில்லையா? என்றெல்லாம் எனது மனதும் பேசி இருக்கலாம். ஆனால் அவரோடு சுமார் 15 வருடங்கள் பணி செய்து. அவருடைய ஆளுமை, பலம், பலவீனம் என சகல தரப்பையும் விளங்கியவர்களே அவரை மீண்டும் தேர்ந்தெடுத்தார்கள்.
அன்று காலை கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்;; மதிப்புக்குரிய அஷ்-ஷைக் எஸ்.எல்.நவ்பர்; கபூரி அவர்களோடு நான் கைலாகு கொடுத்துக் கதைக்கிறேன். தலைவர் பற்றிய சில கருத்துக்களை அவர் பறிமாறிய போது நான் ஆச்சரியப் பட்டேன். உண்மையில் அவர் ஒரு 'முக்லிஸ்' தூய்மையானவர் எனவும், அவர் மீது எனக்கு இன்னும் மரியாதையும் அன்பும் கூடிற்று. அதாவது:
'முஃப்தியுடன் நான் ஷரீஆ தொடர்பான அல்லது பொதுவான பல விவகாரங்களில் நேரடியாக முரண்படுபவன். ஒழிவு மறைவின்றி முகத்திற்கு முன்னே எதனையும் நான் அவரிடம் கேட்பவன். ஆகவே எனக்கும் அவருக்கும் பல முரண்பாடுகள் இருக்கின்றன என்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருடனான முரண்பாடுகள் அவரின் நலவுகளை மறைக்கக் காரணமாக இருக்கக் கூடாது. அதாவது அவருக்குள்ள மக்கள் செல்வாக்கு! அவர் சொன்னால் மக்கள் கேட்கின்றனர். மட்டுமல்லாது ஜம்இய்யாவுக்குத் தேவையான பல தேவைகள் அவரின் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. புதிய கட்டிடம்' ..... என பல விடயங்களை முன் வைத்தார்.
மாறுவதும் மாறாததம் அங்கத்துவர்கள் கையில் உள்ளது!
மாற்றம் பற்றிப் பேச வேண்டியவர்கள் ஆலிம்களே. அதுவும் அங்கத்துவம் பெற்ற ஜம்இய்யாவினூடாக பணிகள் புரிபவர்களே! ஆனால் அந்த மாற்றம் பற்றிப் பேசத் தகுதி பெற்ற ஆலிம்கள் மௌனிகளாக இருக்கின்றனர் என்றால் அதில் ஏதாவது இரகசியம் இருக்கத் தானே செய்யும்! யாப்பில் அது பற்றி இடம்பெறவில்லை என்று வைத்துக் கொண்டாலும் நாட்டிலுள்ள சுமார் 143 கிளைகளுக்கும் பொதுத் தெரிவுக்கு சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு யாப்புத் திருத்தம் பற்றி ஆலோசனைகள் கேட்கப்பட்டிருந்தன. அதிலும் இது பற்றி யாரும் கருத்துத் தெரிவிக்க வில்லை. காரணம் முஃப்தி அவர்கள் தான் மீண்டும் வர வேண்டும் என்ற ஆவலில் கூட இருக்கலாம்.
மக்கள் மறந்த முஃப்தியின் முக்கிய மக்கற் பணிகள்:
ஏன் அந்த இடத்தில் அவரையே வைத்துப் பார்க்க இந்த ஆலிம்கள் விரும்புகிறார்கள் என்று நாம் மீண்டும் மீண்டும் ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்த மட்டில்.
• நாமும் எமது இயக்கமும் என்றிருந்த (எம் போன்றவர்களை) ஆலிம்களை, தமது இயக்க செயற்பாடுகளுக்கும் அப்பால் சமூகமயப்படுத்தினார்.
• நாம் கொண்டதே கொள்கை என்ற கொள்கைகளுக்கும் அப்பால் பிறர் கருத்துக்களையும் மதிக்கும் மனப்பாங்கு உள்ளவர்களாக ஆலிம்களை மாற்றினார்.
• தம்மை தமது இயக்கத்தவர்கள் எவ்வாறு மதிக்குறார்களோ அதே போன்று மாற்றுக் கருத்துள்ள ஆலிம்களை மதிக்கும் ஆலிம்களையும், பொது மக்களையும் உருவாக்கினார்.
• சென்ற தெரிவில் கூட குறித்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பலர் இருந்தும், மாற்றுக் கருத்துடையவர்கள் பலரைத் தேர்தெடுத்தனர்.
• நாளாந்தம் கருத்து வேறுபாடுகளினால் அடிதடிகளால் மஸ்ஜித்கள் அலங்கரிக்கப்பட்டன. அவைகள் அடாவடித்தனம் என புரிய வைத்தார்.
• அ.இ.ஜ. உலமா குறித்த ஒரு இயக்கத்தினரின் சொத்தல்ல. அது ஆலிம் என்ற தத்துவம் உடையவர்கள் சகலரினதும் ஒரு மத்திய நிலையம் எனக் கூறி சகல கொள்கை உடையோரையும் இயக்க வேறுபாடின்றி ஒரே மேசையில் அமர வைத்தார்.
• நம் நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச மட்டத்திலும் இன்று ஜம்இய்யாவுக்கு நற்பெயர் ஏற்பட்டிருக்கிறது. நமது ஜம்இய்யாவை பல மேற்கத்தைய நாடுகள் முன்மாதிரியாகக் கொண்டுள்ளனர்.
• சுமார் 35 ஊழியர்கள் வைக்கப்பட்ட ஒரு அழகான தலைமையகம் உருவாக்கப்பட்டு, மாதாந்தம் சுமார் 20 இலட்சம் ரூபாய்கள் செலவாகின்ற ஒரு மிகப் பெரிய நிறுவனமாக வளர்த்தெடுத்தார்.
• இவைகள் யாவும் அவருடைய தனிப்பட்ட முயற்சி என்பதை விட ஒரு கூட்டு (வுநயஅ றுழசம) முயற்சியின் வெளிப்பாடு என்றும், தன்னோடு உள்ளவர்களை அரவணைத்துக் கொண்டு, அவர்களின் உதவியோடு சாதித்தவைகள் என்றே கூரலாம்.
• இன்னும் பல நூறு விடயங்களை இங்கு குறிப்பிடலாம். ஆனால் தனிமனித வர்ணனையாகப் போய் விடும் என்பதை அஞ்சி போதுமாக்கிக் கொள்கிறேன்...
ஆகவே இன்னும் இவரால் நடைபெறவேண்டிய பல முக்கிய விடயங்கள் இருக்கின்றன. பொறுமையாக இருந்து இன்னும் தேவையான விடயங்களை அவர் மூலம் அடைந்து கொண்டு குறித்த தலைவருக்கு பிரியாவிடை கொடுப்போம். ஒன்றும் இல்லாமல் இருக்கும் போது பாராமுகமாக இருந்து விட்டு சில செல்வாக்குகளைக் கண்டதும் துடிப்பது அறிவுடமையாகாது என நினைக்கிறேன்.
திறமைக்கு முதலிடம்:
இயக்க வேறுபாடின்றி யாரிடம் திறமை இருக்கிறதோ அவருக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இதனடிப்படையில் ஜம்இய்யாவின் பிரதான ஊழியராக இருப்பது ஒரு நளீமி தான் என்பது இதற்கு அழகிய எடுத்துக் காட்டாகும். மட்டுமல்லாமல் நிர்வாகத்திற்குள் பொறுப்புக்கள் வழங்கப்படும் போதும் பக்கசார்பின்றி சகல அமைப்புக்களையும் பிரதிபலிக்கின்ற அல்லது பிரதிநிதிப்படுத்துகின்ற ஒழுங்கையே ஜம்இய்யா கையாள்கிறது.
தகுதியற்ற விமர்சகர்கள்:
விமர்சனம் செய்வோர் (அங்கத்துவம் பெற்ற) ஆலிம்கள்கள் அல்ல. சகலரும் முகநூல் வீரர்கள் மட்டுமே! இவர்களின் கருத்துக்கள் மூலம் எந்தவொரு அணுப் பிரமாண அளவு கூட ஒன்றும் யாருக்கும் செய்து விட முடியாது என்பதே எனது கருத்து. இது விடயத்தில் தகுதியற்றவர்கள் விமர்சிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
நளீமிகளுக்கு அன்பான அழைப்பு:
நளீமிகள் நளீம் ஹாஜியாரின் கனவுலகம். நளீமிகள் ஷரீஆத் துறையோடு பொதுக் கல்வியையும் பெற்று இன்று நாடு பூராவும் நிர்வாகத் துறையிலும், ராஜதந்திர ரீதியான பதவிகளிலும் புகழ்பூத்து விளங்குகின்றனர். எனவே தகுதியுள்ளவர்கள் என்ற அடிப்படையில் ஜம்இய்யாவைக் கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைவோம்! ஏனெனில் நாம் விரும்பியோ விரும்பாமலோ நளீகள் தான் ஜம்இய்யாவை வழிநடாத்துகின்றனர் என்பது அறியப்பட்ட இரகசியம்.
• ஜம்இய்யாவின் பிரதித் தலைவர் .....நளீமி
• ஜம்இய்யாவின் பிரதான ஊழியராக .....நளீமி
• ஜம்இய்யாவின் ஊழியர்கள் மற்றும் மக்தப் ஆலிம்களின் பிரதான பயிற்றுவிப்பாளர்களிலும் ....நளீமிகள் என்று கூறிக் கொண்டே போகலாம்.
இறுதியாக... ஜம்இய்யா ஆலிம்களின் அமைப்பாக இருந்தாலும் அது பொது மக்களுக்கும் சொந்தமானது. அதில் நாமும் உரிமையோடு கருத்துச் சொல்லுவோம் என்று அறிமுகமற்று பாராமுகமாக இருந்த ஜம்இய்யாவை உரிமை கொண்டாடும் அளவுக்கு ஜம்இய்யாவை கொண்டு வந்து உயர்த்திய ரிஸ்வி முஃப்திக்கும், அவரோடு கைகோர்த்த கண்ணியமிக்க ஆலிம்களுக்கும் நன்றி செலுத்துகிறோம். ஒரு காலம் இருந்தது. ஜம்இய்யா என்றால் ரியாழ் மௌலவி (அல்லாஹ் றஹ்மத் செய்வானாக) அவர்களின் கைப் பையில் தான் முழு காரியாலயமும் இருந்தது. அந்த நேரம் இப்போது கருத்துச் சொல்கிறவர்கள் என்ன செய்தார்கள்? பெயர் வந்தவுடன் பலரும் ஓடி வருகின்றனர் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
எனவே ஆலிம்களும், பொது மக்களும் இணைந்து இது எமது சொத்து இதனை நாம் பாதுகாப்போம் என்ற உள உறுதியோடு செயற்பட முன்வர வேண்டுமென சகலரையும் அன்பாய் அழைக்கிறேன்!
எல்லாவற்றையும் அல்லாஹ்வே அறிந்தவன்.


SHARE THIS

Author:

0 comments: