Thursday, July 21, 2016

புஸ்வானமாய் போன கிழக்கின் எழுச்சி.

கிழக்கின் எழுச்சி என்றதும் எனக்குள் ஒரே கிளர்ச்சியாகவே இருந்தது. நமக்குள் இருக்கும் பலவீனங்களை களைவதற்கு அது பயன்படலாம் என்ற எதிர்பார்ப்பு மிகைத்திருந்தது. ''கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்ற'' முதுமொழிக்கேற்ப, முஸ்லிம் காங்கிரஸ் கொஞ்சம் விழிப்படையும் வேகம் கூடுமென நினைத்திருந்தேன். அதனால், உள்ளூற கிழக்கின் எழுச்சியின் வருகையை ஆதரித்தேன்.

அப்படி இருக்கும் போதுதான், கிழக்கின் எழுச்சி அணியினர் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்த இருப்பதாக அறிந்தேன். ஒரு திரில் ஆக உணர்ந்தேன். பேசட்டும் எல்லாவற்றையும் திறந்து பேசட்டும் என்றிருந்தேன். புல்மோட்டை முதல் பொத்துவில் வரையுள்ள முஸ்லிம்களின் பிரச்சனைகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கட்டும் என்றிருந்தேன். தேசிய இன முரண்பாட்டின் தீர்வில் முஸ்லிம்களுக்கான பங்கு பற்றிப் பேசட்டும் என்றிருந்தேன். யாப்பு மாற்றத்தைப் பற்றிப் பேசி நம் தலை எழுத்தையே மாற்றட்டும் என்றிருந்தேன்.

நேற்றைய பொழுது விடிந்ததும் எனக்கிருந்த பரபரப்பை எப்படி விபரிப்பதென்றே தெரியவில்லை. கிழக்கு எழுச்சி அணியினரின் ஊடகவியலாளர் சந்திப்புக்கான நேரத்தை எதிர்பார்த்து நிமிஷங்கள் , வருஷங்களாகக் கழிந்தன. முகநூல், வட்ஸ்அப், வைபர், என எல்லாவற்றையும் இயக்கத்தில் வைத்திருந்தேன். அறிந்த எல்லா இணைய செய்தி பக்கங்களையும் ஒரு முறை திறந்து பார்த்து, ஊடகவியலாளர் சந்திப்பு நடந்ததும் தேடித் திறக்காமல் உடனே திறக்க ஏற்பாடு செய்திருந்தேன்.

அடிக்கடி முகநூலை நோண்டிக் கொண்டிருந்தேன். நண்பர்கள் அந்த ஊடகவியலாளர் சந்திப்பைப் பற்றி என்ன எழுதியிருந்தாலும் வாசித்துப் பார்த்தேன். வாசிக்க வாசிக்க ஆர்வம் கூடிக் கொண்டே போனது. இதய துடிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. கைக்கடிகாரம் வாங்கியதிலிருந்து எனக்கு உச்சமாகப் பயன்பட்டது இப்போதுதான். அத்தனை முறை மணி பார்த்திருப்பேன்.

நேரமும் வந்தது. அந்த ஹோட்டலுக்குப் பக்கத்து நண்பர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தொடங்கி விட்டதா என்று கேட்டேன். அவரிடமும் நான்கு தரம் கேட்டுக் கொண்டதால் சற்றுக் கடிந்து கொண்டார். தனக்கு வேறு வேலையிருப்பதாகவும் இந்த வேலை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க முடியாது என புறுபுறுத்தும் கொண்டார். பொறுமையில்லாமல் துடித்தேன். ஒருவாறாக ஊடகவியலாளர் சந்திப்பு தொடங்கி விட்டதாகச் சொன்னார். ''அது'' என்று சினிமா பாணியில் மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.

கையடக்கத் தொலைபேசியில் முகநூல், வட்ஸ்அப், வைபர், டுவிட்டர், செய்தி இணையத்தளங்களை திரும்பத் திரும்ப துருவித் துருவி பார்த்தேன். நேரம் போனதே தவிர துணுக்குகளைக் காணவில்லை. சிலோன் முஸ்லிமில் ''கிழக்கின் எழுச்சி ஊடகவியலாளர் மாநாட்டில் ஹசனலியின் மகனும் பங்கேற்பு'' என்ற ஒரு செய்தி. படித்ததில் இன்னும் ஆர்வம் கூடியது.

சற்று நேரத்தில் ''மடவல நியுஸ்'' போன்றவற்றில் கருத்துக்கள் வெளிவரத் தொடங்கின. டுவிட்டர்கள் அதிர்ந்தன. முகநூலில் அனல் கிளம்பியது. எல்லாவற்றையும் திறந்து வைத்து ஒவ்வொன்றாகப் பார்த்தேன். ஒன்று பார்த்ததும் ஒன்றுமில்லை என்று பட்டது. மற்றதில் இருக்குமென்று மற்றதைப் பார்த்தேன். அதிலும் ஒன்றும் இல்லை. எல்லாம் பார்த்தேன் எல்லாவற்றிலும் காரமாக ஒன்றையும் காணவில்லை. அவர்கள் சொன்ன கருத்தை ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்று நினைத்தேன்.

ஊடகவியலாலர்களுக்குத்தான் விளங்கவில்லை, அவர்கள் எழுதவில்லை என்று நினைத்துக் கொண்டு, முகநூலில் பாய்ந்தேன். ஒரு வீடியோ கிளிப் போடப்பட்டிருந்தது. தலைவர் வபா பாரூக் பேசுகிறார். ஒவ்வொரு சொல்லுக்குக்கும் ஒவ்வொரு நிமிடம். பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டேன். கிழக்கென்றார். சேர்ப்பென்றார். பிரிப்பென்றார். சம்மந்தன் என்றார். ஹக்கீம் என்றார். காசு என்றார். ''பஹத்'' என்ற ஊடகவியலாளர் எழும்பி குறுக்கு கேள்வி கேட்டார். வபா பாரூக் குழப்பத்தில் நாக்குழைந்தார். நாங்க சொல்லல என்றார். கேள்விப்பட்டோம் என்றார். நாங்க சொல்றோம் என்றார். அப்படி சொல்லல இப்படி சொல்றோம் என்றார். பத்து நிமிட வீடியோவும் முடிஞ்சிட்டு. பதிலே இல்லாம முடிஞ்சிட்டு.

அப்போ என்னுள் ஒரு பாட்டுக் கேட்டது ''என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா''.

எப்படி நினைச்சிருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்களே. அடிப்போம் அடிப்போம் என்று பயம் காட்டிக்கு இருக்கிற மாதிரி இருந்திருக்கலாமே. வில்லன் வேஷம் போட்டுட்டு இப்படி சிரிப்புப் போலீஸ் மாதிரி ஆகிட்டீங்களே. இந்த ஊடகவியலாளர் சந்திப்பை செய்யாம விட்டிருந்தா பயமாவது இருந்திருக்குமே டா நாநாமாரே. இப்படி சப்பையாக்கி விட்டீங்களே டா.

இனி என்ன முகத்தோட டா நாங்க முஸ்லிம் காங்கிரஸ்காரனுகளை சந்திக்கிற. பேசின பந்தாக்கு அவனுகள் அடிப்பானுகள் நக்கல். ஊரை விட்டுப் போகலாமா என்று யோசிக்க வெச்சிட்டாங்களே டா பாவிமக்காள்.

இப்படிக்கு

எம்.ஏ.றஸாம் முஹமட்
கல்முனை


SHARE THIS

Author:

0 comments: