Monday, July 18, 2016

துருக்கிய இராணுவ சதி முயற்சி - சில புலனாய்வுக் குறிப்புக்கள்


★★★★★★★★★★★★★★★★★★★★★★★
எம்.எஸ்.எம். ஸியாப் நளீமி

இருள் சூழ்ந்த கடினமான இரவொன்றுக்குப் பின் துருக்கிய வீதிகள் வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. துருக்கி இராணுவத்தினரின் ஒரு பிரிவினரின் மிகப் பலமான திட்மிடலுடனும் அமெரிக்கா-இஸ்ரேல்-யூஏஈ-பத்ஹ் கூலன் கூட்டுச் சதிப் பின்னணியுடனும் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சதிப் புரட்சி முயற்சிகள் கிட்டத்தட்ட முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டன. அங்காரா வான் பரப்புக்களில் பறந்துகொண்டிருந்த சதிகாரர்கள் கட்டுப்படுத்திய F-16 ரக விமானங்கள் மூன்றும் ஹெலிகப்டர் ஒன்றினதும் இரைச்சல் சப்தங்கள் முற்றாக அடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மக்களுக்காக, ஜனநாயகத்துக்காக களமிறங்கியதாகக் கூறிக் கொண்டே எல்லோருக்கும் தெரிந்த சில பினாமிகளின் பிரதிநிதிகளான இராணுவக் கும்பல் அந்தப் பொதுமக்கள் மீதே குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளத் துவங்கியமை யாருடைய தேவைக்கு இவர்கள் ஆட்டம் போட முயல்கிறார்கள் என்பதற்கான பதிலாகும்.
அர்துகானின் ஒரு ஸ்கைப் அழைப்புக்கு செவியேற்று அந்த நள்ளிரவில் வீதிக்கு இறங்கி வந்த துருக்கிய மக்கள், அர்துகானின் அபரிமித மக்கள் செல்வாக்குக்கு சான்றாகியது. இதுவரைக்கும் வீதிகளில் திரண்டு மக்கள் தமது அரசினை அவர்களாகவே பாதுகாக்கும் பிரயத்தனத்தில் இருப்பது உளப் பூரிப்பைத் தருகிறது. வீடியோக்களாக வெளிவந்து கொண்டிருக்கும் மக்கள் திரளும் பள்ளிவாசல்கள் நிரம்பி வழியும் பிரார்த்தனைகளும் எத்தனையோ செய்திகளைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இறுதியில் பத்ஹ் கூலனும் ஒபாமாவும் நெட்டன்யாஹுவும் டுபாய் அரசன் கலீபா ஆலு நாஹியானும் மூக்குடைபட்டு திரைமறைந்து நின்றுகொண்டிருக்கின்றனர்.

அர்துகான் விடுமுறையில் இஸ்தான்பூலுக்கு வெளியே மர்மரா பகுதியில் ஓய்வெடுக்கையில் சதி நடவடிக்கைகள் துவங்குகின்றன. அர்துகானுக்குத் தகவல் பறக்க உடனடியாக இஸ்தான்பூலுக்குப் பறந்து துருக்கிய அரசின் உத்தியோகபூர்வ TRT தொலைக்காட்சி சேவை முடக்கப்பட்டிருந்ததால் ஹபர் துர்க்கியா மூலமாக முதன் முதலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அவ்வுரை பென்சில்வேனியாவிலிருக்கும் பத்ஹ் கூலனுடன் மேற்கு, அரபு சியோனிஸ்டுகளை சாடியிருந்ததோடு சதிகாரர்கள் எதிர்கொள்ளவிருக்கும் மிகப் பாரிய பின்விளைவுகள் பற்றியும் எச்சரித்திருந்தது. மேலும் மக்களைப் பாதுகாக்க வேண்டிய இராணுவ ஆயுதங்கள் மக்களுக்கு எதிராகத் திரும்பக் கூடாது என்ற காட்டமான எச்சரிக்கையையும் முன்வைத்திருந்தார். அதற்கிடையில் மர்மரா ஹோட்டலுக்குள் அர்துகானை சிறைப்படுத்தும் முயற்சிகள் மற்றும் அவர் பயணிக்க இருந்த விமானத்தை முடக்கும் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டிருந்தன.

கேர்ணல் முஹாரம் கோஷா என்பவர் சதிக்கான சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரைக்கும் ஜெனரல், கேர்ணல் தர தளபதிகள் உட்பட 800 வரையான இராணுவத்தினர் கைதாக்கப்பட்டுள்ளனர். சதிகாரர்களால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முப்படைகளின் ஆலோசகரும் பொலிஸாரின் நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டிருக்கிறார்.
முழுமையான பொலிஸ் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு புரட்சியை முறியடிப்பதில் பங்காற்றியது. இராணுவத்தின் கணிசமான பகுதி மற்றும் கடற்படை என்பன சதிப் புரட்சியை புறக்கணித்திருந்தன. இராணுவத் தளபதியும் தான் புரட்சியில் பங்கெடுக்கவில்லை என அறிவித்திருந்தார். அத்தோடு எதிர்க்கட்சிகளும் புரட்சியை தாம் ஏற்பதில்லை என அறிவித்திருந்தது ஆரோக்கியமான ஜனநாயகத்தைப் பிரதிபலித்திருந்தது. எனினும் இச்சதி நடவடிக்கையை முற்கூட்டியே அறிந்திருந்தவர்கள் யாவர்? மற்றும் சதி வெற்றி பெறுமிடத்து இணைந்துகொள்ளச் சித்தமாயிருந்த துரோகத் தரப்புக்கள் எவை போன்ற புலனாய்வுத் தகவல்கள் எதிர்காலத் துருக்கியின் அமைதிக்கு மிகுந்த முக்கியமானவை.

சதி நடவடிக்கைகள் ஆரம்பித்து சில மணிநேரங்களுக்குள்ளேயே பாதுகாப்புத் தரப்புகள், ராஜதந்திர நடவடிக்கைகள், நேரடியாகவே மக்களை வழிநடாத்துதல் என துருக்கிய அதிபர் ரஜப் தையிப் அர்துகான் மிக்க செயலாற்றலுடன் களத்திலிருந்தார். மக்கள் முன் 5 தடவகளுக்கும் மேலால் தோன்றி சதியை முறியடிக்கும் பணியை? நேரடியாகவே மேற்கொண்டார். ஃபஜ்ர் அதானுக்கு 3 மணி நேரங்கள் முன்பதாக அதான் மற்றும் தக்பீர் மூலம் மக்கள் வீதிகளில் திரண்டிருந்தனர். ஃபஜ்ர் அதானுடன் பெருநாள் தக்பீர்கள் துருக்கி முழுதும் ஓங்கி ஒலித்து சதிப் முயற்சி தோல்வியடையச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. காஸா உட்பட பல பிரதேசங்களில் கொண்டாடப்பட்ட சதிப் புரட்சி முறியடிப்பின் வெற்றியானது முஸ்லிம் உலகுக்கு துருக்கியின் ஸ்திரத் தன்மை எவ்வளவு முக்கியமானது என்பதனைக் குறிக்கின்றது.

இச்சதி முயற்சிகளின் பின்னணிகள் குறித்து அரபுலகின் அல்முஜ்தமஃ சஞ்சிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் ஷஃபான் அப்துர்ரஹ்மான் சில தகவல்களைத் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். அவை:

1. துருக்கியிலுள்ள பிரான்ஸ் தூதரகங்கள் இரண்டும் (இஸ்தான்பூல்/அங்காரா) மூடப்படுவதாக கடந்த வியாழனன்று பிரெஞ்சு அதிபர் அறிவித்திருந்தார். இவ்விரண்டு கட்டடங்களும் சதி முயற்சிகளின் முக்கிய தளங்களாக செயற்பட வாய்ப்புக்கள் மிக அதிகம்.
இங்கு, பிரான்ஸ் இதுவரைக்கும் சதி முயற்சி குறித்து மௌனம் காக்கின்றமை கவனிக்கத்தக்கது. இதன் மூலம் துருக்கிக்கும் தமக்கும் இடையில் எவ்விதக் கொடுக்கல்-வாங்கல்களும் இல்லாதது போல் காட்ட முயற்சிக்கிறது.

2. அடுத்து நேற்றைய தினம் அமெரிக்க வெளியுறவு செயலர் ஜோன் கெரி ரஷ்யாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதன் இறுதியில் துருக்கிய சதி நடவடிக்கைகளுக்கு சிலமணிநேரங்கள் முன்பு தாம் சிரியாவில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நிகழ்த்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
பல்வேறு தரப்புக்களுக்கு இடையிலும் யுத்தங்களை ஏற்படுத்தி சிரிய மக்களைக் கொலை செய்து பஷர் அல்அஸதைப் பாதுகாப்பது தவிர வேறு எந்த அஜண்டா அமெரிக்கா-ரஷ்யாவுக்கு இருக்கப் போகிறது எனக் கேள்வி எழுப்பும் ஷஃபான் அப்துர் ரஹ்மான், நிச்சயமாக நேற்று நிகழ்ந்த பேச்சுவார்த்தைகள் துருக்கிய இராணுவ சதிப் புரட்சி வெற்றிபெறுமிடத்து மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளே அங்கு நிகழ்ந்திருக்கும் என அடித்துக் கூறுகிறார்.

உலகில் எந்த அநியாயம்-அக்கிரமம்-குள்ளநரித்தனம் நிகழ்ந்தாலும் அங்கு அமெரிக்காவுக்கு நிச்சயம் ஒரு கை இருக்கும் என்பது பொது விதியாகவே உலக வரலாறு உள்ளெடுத்துக் கொண்டுவிட்டது. இப்பின்னணியில் அமெரிக்காவும் ஐரோப்பியப் பெருச்சாளிகளும் துருக்கிய சதி தோல்வியடையப் போகிறது என்றவுடன் அரசுக்கும் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் ஆதரவு என்ற தொனியில் பச்சோந்தி ஸ்டேட்டஸ்மன்ட் ஒன்றைத் தெறிக்கவிட்டது.

நிகழ்வுகளுக்கெல்லாம் அப்பால் தோன்றிக் கொண்டிருக்கும் புதிய உலக ஒழுங்கொன்றுக்கான முக்கிய மைல் கல்லாக நிச்சயம் நள்ளிரவுடன் நிகழ்ந்து முடிந்த துருக்கிய நிகழ்வுகள் இருக்கும் என்பது சர்வ நிச்சயம்... இன்ஷா அல்லாஹ்.
அத்தோடு துருக்கியின் தேசிய நீரோட்டம், முஸ்லிம் உலக அரசியல், சர்வதேச அரசியலில் முதலாளித்துவக் கார்ப்பரேட்டுகள், கம்யூனிஸ இடதுசாரிகள், ஸலபிப் போக்குகள் கொண்டவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்நிகழ்வுகளோடு எத்தகைய கொடுக்கல்-வாங்கல் செய்தனர் என்பதிலும் எதிர்கால இஸ்லாமின் எழுச்சிக்கு நிறையவே பாடங்கள் படிப்பினைகள் இருக்கின்றன. அதற்கென பிறிதொரு பத்தியை ஒதுக்குவோம்... இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் நம் அனைவரது பணிகளையும் ஏற்று அருள்புரியட்டும்.

(கட்டுரையை வரைய அல்ஜஸீரா, அல்முஜ்தமஃ இணைய தளங்களை உசாவினேன். மேலும் அல்முஜ்தமஃ பிரதம ஆசிரியர் ஷஃபான் அப்துர் ரஹ்மான்,  ஷெய்க் பைரூஸ் மஹாத், சகோ. அஷ்கர் தஸ்லீம் ஆகியோரின் முகநூல் தகவல்கள் உதவின; அத்தோடு துருக்கிய நண்பர் ஒர்ஹான் கராகிஸ் களத்திலிருந்து நேரடியாகவே தகவல் பரிமாற்றம் செய்தார். அனைவருக்கும் நன்றி.)


SHARE THIS

Author:

0 comments: