நல்லாட்சி என்ற போர்வையில் அரசியல்வாதிகள் தங்களது அடிமடிகளை நிரப்பிக்கொள்வதில் தீவிரம் காட்டி வருவதாக ஜே.வி.பி.யின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பாரியளவில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நபர்களுக்கும் அரசாங்கம் அமைச்சுப் பதவிகளை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தின் பிழையான அரசியலை மக்கள் நிராகரித்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இணக்கப்பாட்டு அரசியல் என்பது குற்றம் இழைத்த அரசியல்வாதிகளை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரண்டு தரப்பினரும் கூட்டாக இணைந்து முன்னாள் மத்திய வங்கி ஆளுனருக்கும், தற்போதைய மத்திய வங்கி ஆளுனருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவன்கார்ட் வழக்கை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மூடிமறைக்க முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நூறுநாள் போக்குவரத்து அமைச்சர் குற்றம் சுமத்தியது போன்று மஹிந்த ராஜபக்ஸ, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு செலுத்த வேண்டிய பணத்தை தற்போதைய போக்குவரத்து அமைச்சர் அறவீடு செய்வாரா என்பதனை நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணக்கப்பாடு என்ற போர்வையில் இரு தரப்பினரும் தங்களது பிழை மூடி மறைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் குடும்ப ஆட்சி இல்லாமல் போய், தற்போது ஓரு கும்பல் ஆட்சி உருவாகியுள்ளதாக விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
Jaffnamuslim
0 comments: