-ஏ.எல். நிப்றாஸ்-
உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழும், மனித உரிமை ரீதியாக வஞ்சிக்கப்பட்ட மக்கள் மாத்திரமல்லாமல் சர்வதேச நாடுகளும் கூட தற்சமயம் ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் அமர்வின் ஒவ்வொரு நகர்வையும் இமைகொட்டாமல் அவதானித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் சர்வதேசம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் மிகக் கரிசனையுடன் இருக்கின்றனர்.
ஆனால் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இது பற்றிய எந்த பிரக்ஞையும் அற்றவர்களாக இருப்பதை காண்கின்றோம். கடந்த சில நாட்களாக ஹஜ்ஜூப் பெருநாளைக்கு ஆடைகளை கொள்வனவு செய்வதில் திளைத்திருந்த அவர்கள் இப்போது பெருநாளை கொண்டாடுவதில் மூழ்கியிருக்கின்றார்கள். இந்த மயக்கத்தில் இருந்து வெளியில் வர இன்னும் நான்கைந்து நாட்கள் செல்லும். அப்போது ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்து விடும். எருமை மாட்டில் மழை பெயய்வது போல் இருந்து விட்டு, எல்லாம் கைமீறிப் போனபிறகு கைசேதப்படுவதும் கழிவிரக்கம் கொள்வதும் இலங்கைச் சோனகர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த வாதப் பிரதிவாதங்கள், அறிக்கை முன்வைப்புக்கள் கடந்த பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றன. யுத்த காலத்தில் இலங்கை அரச படைகள் போர்க்குற்றங்களை மேற்கொண்டதற்கான ஆதாரங்களை தமிழர்கள் தேடிப்பிடித்து கொண்டுவந்து மனித உரிமைப் பேரவையில் முன்வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு அமர்விலும் புதிய புதிய ஆதாரங்களை சர்வதேசத்துடன் இணைந்து தமிழர் தரப்பு முன்வைப்பதன் காரணமாக அதனை சமாளிப்பதில் அரசாங்கம் கடுமையான சவால்களை எதிர்நோக்கியிருக்கின்றது. அதுமட்டுமன்றி, எந்தவொரு தமிழ் பொதுமகனும் எந்தப் பெரிய சபைக்கும் வந்து சாட்சியமளிக்கவும் தயாராக இருக்கின்றான். ஆனால் முஸ்லிம்கள் இன்னுமின்னும் சும்மா இருக்கின்ற ஒரு சமூகமாகவே காலத்தை கடத்துகின்றார்கள்.
இலங்கையின் வரலாற்றில் தமிழர்களுக்கு முன்னதாகவே இனக்கலவரம் ஒன்றுக்கு முகம் கொடுத்த முஸ்லிம்கள், யுத்தகாலத்தில் இரு தரப்பிற்கும் இடையில் சிக்கி பெரும் அழிவுகளை எதிர்கொண்ட முஸ்லிம்கள், யுத்தம் முடிவடைந்த பிற்பாடு கூட சிங்கள பேரினதவாதத்தால் உரிமைகள் நசுக்கப்பட்ட முஸ்லிம்கள்..... தம் மீதான யுத்தகால குற்றங்கள் பற்றியோ மனித உரிமை மீறல்கள் குறித்தோ சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் எதனையும் செய்யாதிருக்கின்றனர். இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களின் மனித உரிமைகளுக்கான போராட்டம் என்பது தேனீர் கடைகளில் அமர்ந்து கொண்டு விடுதலைப் புலிகளையும் பாதுகாப்பு படையினரையும் விமர்சிப்பதோடு மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகளின் போராட்டம் என்பது ஆகக் கூடியபட்சம் ஒரு அறிக்கை விடுவதோடு முடிவடைந்து விடுகின்றது.
தமிழர்களின் உரிமைப் போராட்டம் என்பது மிகவும் நியாயமானது. ஆரம்பத்தில் அது தனியே தமிழர்களுக்கு மட்டுமான ஒன்றாக இருக்கவில்லை. மாறாக ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களுக்குமான ஒரு விடுதலை வேட்கையாகவே அவதானிக்கப்பட்டது. அதன்காரணமாகவே அக்காலத்தில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழர் அரசியலோடு மிக நெருக்கமாக சேர்ந்தியங்கினர். சமகாலத்தில் தனியீழ போராட்டத்தை ஆரம்பித்த விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் கருத்தியல் ரீதியான போராட்டங்களையே முன்னெடுத்தனர். இதனால் அப்போதிருந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அவர்களுக்கும் இடையே பெரிய முரண்பாடுகள் இருந்ததாக சொல்ல இயலாது.
ஆனால், சிங்கள ஆட்சிச் சூழலில் ஏற்பட்ட கொள்கை ரீதியான மாற்றங்கள், ஜூலைக் கலவரம் மற்றும் அதற்கு முன்பின்னரான சிறு கலவரங்கள் என்பன பெருமளவுக்கு ஆயுதங்கள் மீது நம்பிக்கை கொண்;ட போரட்ட இயக்கமாக விடுதலைப் புலிகளை மாற்றிவிட்டிருந்தது. இதன் உடனடி விளைவு, மாற்றுக் கருத்துள்ள தமிழ் அரசியல் தலைமைகளை நோக்கி புலிகளின் துப்பாக்கிகள் திரும்பியமைதான்.
தமது தமிழ் அரசியல் தலைவர்களுடனேயே புலிகள் ஒத்துப் போகாத நிலையில் முஸ்லிம் தலைவர்களை கட்டித் தழுவுவார்கள் என்று நம்பிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்த பிற்பாடே, முஸ்லிம் அரசியல்வாதிகள் தனியான அரசியல் கட்சிகளை ஆரம்பிப்பது பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர் என்பது தனிக்கதை. இக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, ஈ.என்.டி..எல்.எப்., ஈ.பி.டி.பி., புளொட், ஈரோஸ் என பல ஆயுத இயக்கங்கள் துப்பாக்கிளால் உரக்கப் பேச ஆரம்பித்திருந்தன. அதாவது, தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது பெருமளவுக்கு துப்பாக்கிகள் மீது நம்பிக்கை கொண்டதாக மாறிவிட்டதோ என்று எண்ணுமளவுக்கு நிலைமைகள் மாறிவிட்டிருந்தன.
எவ்வாறிருப்பினும், முஸ்லிம் பகுதிகளில் இருந்து எண்ணற்ற இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் ஏனைய ஆயுதக் குழுக்களுக்கும் சென்று சேர்ந்தனர். தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஈர்ப்பு, இளைஞர்களின் துடிப்பை தூண்டி விட்டதன் விளைவாக ஏகப்பட்ட முஸ்லிம் தாய்மார்கள் தமிழ் இயக்கங்களுக்கு தம்முடைய பிள்ளைகளை தத்துக் கொடுத்தனர். குறிப்பாக பாறூக், றாபி என பெயர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பலர் அந்தந்த இயக்கங்களில் மிக உயர்ந்த பதவிகளையும் வகித்தனர். ஆனால் என்ன நடந்தது........?
புலிகள் ஒரு பெரிய இயக்கமாக வளர்ச்சி கண்டதன் பின்னர் ஏனைய சிறு இயக்கங்களுக்கும் புலிகளுக்கும் இடையில் சகோதர படுகொலைகள் ஆரம்பமாகின. இதில் முஸ்லிம் போராளிகளும் இலக்கு வைக்கப்பட்டனர். முஸ்லிம்களுக்கு தனியீழம் தேவைப்படவில்லை. அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக எந்த முகாந்திரமும் அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஏதோவொரு விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டனர். அவ்வாறு தமிழர்களுக்காக போராடிய முஸ்லிம்களை அதே சமூதாயத்தின் சக இயக்கங்கள் கொலை செய்து வீர வசனம் பேசின.
அப்போதும் கூட முஸ்லிம்கள் மிகவும் நெருக்கமான உறவை விடுதலைப் புலிகளோடு கொண்டிருந்தார்கள். இராணுவத் தாக்குதல்களின் போது தப்பித்து வரும் புலிப் போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் பல மாதங்களாக தனது வீட்டுக்குள் பூட்டி வைத்து சாப்பாடு போட்ட எத்தனையோ முஸ்லிம் குடும்பங்கள் இன்னும் சாட்சியாக இருக்கின்றனர். எத்தனை போராளிகளை தமது சொந்தப் பிள்ளை எனக் கூறி, இராணுவத்தினரிடம் அடிபட்டுக் காப்பாற்றிய முஸ்லிம் தாய்மார்கள் இருந்தார்கள். ஏனென்றால், விடுதலைப் புலிகளின் போராட்ட முறைமைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என்றாலும், அந்தப் போராட்டத்தில் ஒரு நியாயம் இருந்ததாக முஸ்லிம்கள் நம்பினார்கள். பிரபாகரன் பற்றியோ அல்லது புலிப் போராளிகள் பற்றியோ முஸ்லிம்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களது அபிலாஷைகள் நிறைவேற வேண்டும் என்று நினைத்துத்தான் இப்படியான மனிதாபிமான உதவிகளை எல்லாம் செய்தார்கள்.
ஆனால் புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் என்ன செய்தன? சுருக்கமாக கூறினால் முஸ்லிம்களின் விடயத்தில் புலிகள் இயக்கம் (தமிழ் மக்கள் அல்ல) நன்றி மறந்தவர்களாக நடந்து கொண்டது. இவ்வாறு நான் குறிப்பிடுவதற்கு தமிழ் சகோதரர்கள் மன்னிக்க வேண்டும். ஆனால் அதுதான் உண்மை. புலிகள் இயக்கத்தில் போராடுதவற்காக பல இளைஞர்களை கொடுத்த முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும், ஆபத்தான வேளைகளில் தம்மை அடைக்கலம் கொடுத்த மக்களுக்கு எதிராகவும் புலிகள் கடுமையான அநியாயங்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இவ்வாறான அத்துமீறிய செயற்பாடுகள் 1980களின் பிற்பகுதியில் இருந்து இடம்பெறத் தொடங்கின எனலாம்.
இதில் முதன்மையானது வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை. 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் கடைசிப்பகுதியில் ஒருநாள். யாழ் குடா நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரையும் ஐந்து சந்திப்பகுதியில் கூடுமாறும் அங்கிருந்து இரண்டு மணிநேர அவகாசத்தில் வெளியேறிச் செல்லுமாறும் விடுதலைப் புலிகள் அறிவிப்புச் செய்தனர். தங்களிடம் இருக்கின்ற பணம், நகை எல்லாவற்றையும் ஒப்படைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்படுகின்றது. முஸ்லிம்களுக்கு வேறு வழியில்லை. உடுத்த உடையோடும் புலிகளால் கொடுக்கப்பட்ட 500 ரூபாய் அல்லது 1000 ரூபாய் காசோடும் அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெளியேறினர். இரண்டு பாவாடைகளை உடுத்துச் செல்லவோ அல்லது நான்கு பனடோல் மாத்திரைகளை கொண்டு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை என்று, புலிகள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதற்கு சான்று பகரும் ஏராளம் கதைகள் வடபுல முஸ்லிம்களிடம் இருக்கின்றன.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளத்தை அண்டிய பிரதேசங்களிலும் வேறு பல பகுதிகளிலும் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இதுவரை முழுமையாக மீள் குடியேற்றப்படவில்லை. இவ்வாறு புலிகளால் முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட போது சர்வதேசம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை அமைப்புக்களும் இதற்கெதிராக குரல் எழுப்பியதாக ஞாபகம் இல்லை. அது பிரச்சினையில்லை. ஆனால் அப்போதிருந்த சில முற்போக்கு சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இதனை எதிர்த்த போதும், புலிகளின் 'துரோகிப் பட்டத்திற்கு' பயந்து பல தமிழ் அரசியல்வாதிகள் இந்நடவடிக்கையை கண்டிக்கவில்லை என்பதுதான் முஸ்லிம்களின் மனதில் இன்றும் வடுவாக இருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து புலிகள் பல பலியெடுப்புக்களை மேற்கொண்டனர். பொது இடத்தில் பல தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. நேரடியாக அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்காக மக்கள் நடமாட்டமுள்ள பல இடங்களில் ஏகப்பட்ட குண்டுத்தாக்குதல்களையும், துப்பாக்கிச் சூடுகளையும் புலிகள் நடத்தினர். அவ்வாறான அனர்த்தங்களில் எல்லா இனத்தவர்களும் சிக்கி உயிரிழந்தார்கள்;;;. எனவே அவ்வாறான சம்பவங்கள் பொதுவாக ஆராயப்பட வேண்டியது. அதேபோல் ஆயுத இயக்கங்களில் போராளியாக இருந்தமைக்காக கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள், உளவு பார்க்கும் வேலை செய்ததற்காக கொல்லப்பட்டோர், கறுப்பு ஆடுகள் என்பதற்காக கழுத்தறுக்கப்பட்டோர் போன்ற தரப்பினரின் படுகொலைகள் சற்று விதிவிலக்காக இருக்கலாம். எவ்வாறு புலிப் போராளிகளும் அரச படையினரும் நேரடியாக யுத்தத்துடன் தொடர்பட்டிருந்தமைக்காக கொல்லப்பட்டார்களோ அதுபோலவே இவர்களும் யுத்தத்துடன் ஏதோ ஒருவிதத்தில் தொடர்புபட்டிருந்தவர்கள் என்ற அடிப்படையிலேயே, இவர்களது மரணத்தை நோக்க வேண்டி இருக்கின்றது.
ஆனால் நான் இங்கு குறிப்பிடுவது தனியே முஸ்லிம்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகும். எவ்வாறு வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பிரித்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்களோ அதுபோல கிழக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய முஸ்லிம் பொலிஸார் 600 பேர் டயர் போடப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவங்கள் போன்ற கசப்பான அனுபவங்களாகும். இவற்றுள் அநேக சம்பவங்களை விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர் ஒருசில சிறுசம்பவங்கள் ஆயுதக்கழுக்களால் கூட்டிணைந்து மேற்கொள்ளப்பட்டன எனலாம்.
அந்த வகையில் முஸ்லிம்களை மட்டுமே இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், கடத்தல்கள், இனஅழிப்புக்களின் பட்டியல் மிக நீளமானது. குறிப்பாக காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையை குறிப்பிடலாம். அங்கு பள்ளியில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேபோல் ஏறாவூர் பள்ளிவாசலில் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 112 பேர் பலியாகினர். எவ்வாறு தமிழ் கிராமங்களுக்குள் இராணுவ ஒட்டுக்குழுக்கள் புகுந்து வேட்டையாடிச் சென்தாக கூறப்பட்டதோ அதுபோலவே பல முஸ்லிம் கிராமங்களுக்குள் புலிகள் புகுந்து விளையாடினர். அழிஞ்சிப்பொத்தானை கிராமத்திற்குள் புகுந்த விடுதலைப் புலிகள் நூற்றுக்கு மேற்பட்டோரை கொன்று குவித்து, கிட்டத்தட்ட ஒரு கிராமத்தையே தரை மட்டமாக்கிவிட்டுப் போயிருந்தனர். அதற்கு பிற்பாடு அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பள்ளிவாசலுக்குள் தாக்குதல் நடாத்தப்பட்டது. அப்பிரதேச வயல்களுக்கு நெல் அறுவடைக்காக சென்றிருந்த சுமார் 50 முஸ்லிம்கள் கழுத்தறுக்கப்பட்டு, பிணங்களாக வீட்டுக்கு எடுத்து வரப்பட்டனர்..... இப்படியாக அந்தப் பட்டியல் நீள்கின்றது. இவையெல்லாம் பல காணொளிகளை தயாரிப்பதற்கு போதுமானது. ஆனால் முஸ்லிம்கள் அதை செய்யவில்லை.
சர்வதேசம் இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. முஸ்லிம் தலைமைகள் இது பற்றி பேசுவதற்கு வெகுவாக அஞ்சினர். மேலே குறிப்பிட்டது போல் தமிழ் தலைமைகள் மௌனம் காத்தனர். இது விடயத்தில் தமிழர் அரசியல் பிழையாக நடந்து கொண்டுள்ளது என்பதை அவர்களே உணர்ந்து கொண்டனர். அந்த அடிப்படையில், பின்வந்த நாட்களில் சம்பந்தன் ஐயா போன்ற ஒரு சில நல்ல தலைவர்கள் இதற்கு பிராயச்சித்தம் தேடவும்;, முஸ்லிம்களோடு நல்ல உறவை பேணவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். இருப்பினும், முஸ்லிம்களை புலிகள் பலியெடுத்தபோது இவர்கள் எல்லாரும் வாய்மூடி இருந்தவர்கள்தானே என்ற எண்ணமே தமிழர்களுடன் அரசியல் உறவை பேணுவதைவிட்டும் முஸ்லிம்களை இன்னும் தடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.
உண்மையாக நோக்கினால் இந்த நாட்டில் அதிகம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழர்களே. அவர்கள் இழந்தவைதான் அதிகம். பேற்றவை என்று பெரிதாக எதுவுமில்லை. தமக்கான விடுதலைப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவளித்தார்கள் என்பதற்காக தமிழர்கள் எல்லோரும் சிங்கள பெருந்தேசிய வாதத்தாலும் படையினராலும் புலிகளாகவே பார்க்கப்பட்டனர். தமிழனைக் கொன்று விட்டு புலிகள் என்றனர். புலிகளின் இனம் தமிழினம் என்பதால் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றால், அரசபடைகளில் அதிகமானோர் அல்லது அரசாங்கம் சிங்கள பெரும்பான்மையைக் கொண்டது என்பதற்காக புலிகள் சிங்கள மக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தினர் எனலாம். ஆனால், முஸ்லிம்கள் எதற்காக கொல்லப்பட வேண்டும்?அவர்கள் எதற்காக இனச் சம்ஹாரம் செய்ய வேண்டும்? பெரும்பான்மை இனத்திற்கு எதிராக போராடிய சிறுபான்மை ஆயுத இயக்கங்கள் இன்னுமொரு சிறுபான்மை இனத்தை ஏன் ஆயுதத்தால் அடக்க வேண்டும்? என்ற கேள்விகளே முஸ்லிம்களிடையே இருக்கின்றன.
உண்மையாக தமிழர்களின் இழப்புக்களோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் இழந்தது சொற்பானதுதான். ஆனால் தமிழர்கள் ஒரு வேண்டுதலின் பெயரில் சிலவற்றை இழந்தனர். ஆனால் முஸ்லிம்கள் ஏன் இழப்புக்களை சந்திக்க வேண்டும்? அவர்கள் தனிநாடு கோரி புலிகளுடன் சேர்ந்து போராடவும் இல்லை. தனிநாடு கொடுக்கக் கூடாது என்று தமிழர்களுக்கு எதிராக நிற்கவும் இல்லை. அப்படியிருந்தும், புலிகளாலும் ஏனைய ஆயுதக் குழுக்களாலும் அவ்வப்போது அரச படைகளாலும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டனர். இவையெல்லாம் மனித உரிமை மீறல்கள் இல்லையா? இவையெல்லாம் விசாரிக்கப்பட வேண்டியவை இல்லையா? என்ற கேள்வியில் நியாயமில்லை என்று யாராவது சொல்ல முடியுமா.
பல்லாயிரம் முஸ்லிம் மக்களை வடக்கில் இருந்து வெளியேற்றிவிட்டு புலிகள் சொன்ன ஒரேயொரு வார்த்தை – அது ஒரு துன்பியல் நிகழ்வு என்பதுதான். அதற்குப் பிறகு நடைபெற்ற எந்த சம்பவத்திற்கும் புலிகள் மன்னிப்புக்கோரவோ மனம் வருந்தவோ இல்லை என்பது கவனிப்பிற்குரியது. இவ்வளவு அநியாயங்கள் நடைபெற்ற பிற்பாடும் சர்வதேசம் முஸ்லிம்கள் விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடந்து கொள்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
ஆனால், சர்வதேசத்தையோ அல்லது மனித உரிமைகள் பேரவையையோ நாம் குற்றம் சொல்ல முடியாது. இலங்கையில் யுத்த காலப்பகுதியில் இராணுவம், புலிகள் என்ற இரு தரப்பினரும் குற்றமிழைத்துள்ளதாகவே அவர்கள் அறிக்கையிட்டுள்ளனர். அதை விசாரிக்க வேண்டும் என்றே கோரி நிற்கின்றனர். ஆனால் புலிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பான 100 வீத ஆதாரங்கள் அடங்கிய அறிக்கை எதுவும் ஐ.நா.வுக்கு சமர்ப்பிக்கபடவில்லை. இதற்கு காரணம் முஸ்லிம் மக்களும், அமைப்புக்களும் அரசியல்வாதிகளுமே அன்றி, சர்வதேசம் அல்ல. கிடைக்காத முறைப்பாட்டுக்காக விசாரிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.
வடக்கு முஸ்லிம்களை ஜெனீவா மறந்து விட்டதாக முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் அறிக்கை விட்டுள்ளார். மற்றைய முஸ்லிம் தலைவர்களுக்கு ஒரு அறிக்கை விடக் கூட நேரமில்லை. உண்மையாகச் சொல்லப்போனால்? இவ்வளவு காலமும் முஸ்லிம்கள் புலிகளாலும் ஏனைய ஆதக்குழுக்களாலும், அரச படைகளாலும் சந்தித்த இழப்புக்கள் தொடர்பான முழு விபரமும் எந்த முஸ்லிம் அரசியல்வாதியிடமும் இல்லை. ஆங்காங்கே இருந்து சேகரிக்கப்பட்ட சில தகவல்களையே இவர்கள் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்கள் சமர்ப்பித்துள்ளது போன்ற உறுதிமிக்க ஒளிப்படங்களோ, புகைப்படங்களோ, ஆவணங்களோ இவர்களிடம் இல்லை. கேட்டால் தேசிய தலைவர்கள் என்பார்கள்.
இதேவேளை தலைப்பிறையில் சண்டை பிடிக்கின்ற, தொழுகின்ற முறையில் விவாதம் நடாத்துகின்ற முஸ்லிம் அமைப்புக்கள் இப்பணியை சரியாகச் செய்யவில்லை. அதுபோலவே முஸ்லிம் மக்களும் சுரணையற்ற சமூகமாக இருக்கின்றனர். வடக்கிலும் கிழக்கிலும் எத்தனை ஆணைக்குழுக்கள் அமர்வுகளை நடத்தின. ஏத்தனை முஸ்லிம்கள், குடும்பஸ்தர்கள், பள்ளி நிர்வாகிககள் வந்து சாட்சியமளித்தார்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் தெரியும், இவர்களது சமூக அக்கறையும் தைரியமும். இவ்வாறு நமது பக்கத்தில் பிழைகளை வைத்துக் கொண்டு சர்வதேசத்தை குற்றம் சொல்வது நியாமற்றது. எனவே இவற்றையெவல்லாம் ஆவணப்படுத்தி முறையாக சமர்ப்பிக்க வேண்டும்.
இறுதி யுத்தகாலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், தமிழர் மீதான மனித உரிமைகள் மீதான ஏதோ ஒரு அடிப்படையிலான விசாரணை இடம்பெறுவது சாத்தியமாகிக் கொண்டிருக்கின்றது. அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் வருகின்ற போது முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்களும் விசாரிக்கப்பட வேண்டும். தமிழர்களின் உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டது என்பதை விசாரிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது வேறு விடயம். ஆனால் அதே காலப்பகுதியில் புலிகளாலும் ஏனைய தரப்பினராலும் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடாத்துவதை தட்டிக்கழிக்க முடியாது.
முள்ளியவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழனும், அரந்தலாவையில் கொல்லப்பட்ட சிங்களவனும், காத்தான்குடியில் கொல்லப்பட்ட முஸ்லிமும் இழந்தது - ஒரே வகையான மனித உரிமைதான்.
0 comments: