Saturday, September 5, 2015

ஐ.எஸ். அமைப்பை இயக்குவது யார்?


2015-08-05 05:39:56 Zacky Fouz
ஐ.எஸ் வன்முறைக் குழுவின் உள்ளக இரகசியங்கள் தொடர்ந்தும் மர்மமாகவே காணப்படுகின்றன. அதன் தனிப்பட்ட தீர்மானங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களைப் பற்றி யாருக்கும் தெரியாது.
இந்த பரம இரகசியத்தை வெளிப்ப­டுத்தாது , வெறும் "இஸ்லா­மிய நெறி முறைகளை அடிப்ப­டையாகக் கொண்ட ஆட்சி" என்ற பெயரில் முஸ்லிம் உலக இளை­ஞர்களை கவரும் கவர்ச்சியான பிரச்சார உத்தியை ஐ.எஸ் வன்­முறைக் குழு முடுக்கி விட்­டுள்ளது.
ஆனால், அதன் உட்கட்டமைப்­போடு தொடர்புபட்ட பலரின் நேர்காணல்கள் , அனுபவங்கள் மற்றும் ஐ.எஸ் அமைப்பின் பிர­தான புள்ளிகளுடன் ஒன்றாகச் செயற்பட்ட நபர்களின் கருத்துக்கள் என்பன ஐ.எஸ் வன்முறையாளர்­களின் வேறோர் கறுப்புப் பக்­கத்தை அடையாளப்படுத்துகி­றது.
இன்னும், அவ்வமைப்பின் இரா­ணுவத் திட்டமிடல்கள் , தாக்கு­தல்கள் , ஆளணி முகாமைத்­துவம் என்பன ஐ.எஸ் போராளி­களின் சுயநல இரகசிய நிகழ்ச்சி நிரல்களுக்கு உதவி செய்யும் முகமாகவே பயன்படுத்தப்படு­கிறது என்ற பயங்கர உண்மை­யையும் அத்தகைய நபர்களின் கருத்துகள் தெளிவுபடுத்து­கின்றன.
ஐ.எஸ் வன்முறைக்குழுவின் படைகளில் நான்கு வகையான போராளிகள் தொழிற்படுகின்­றனர். முதலாவது தரத்தில் , ஏற்க­னவே சதாம் ஹுசைனின் இரா­ணுவத்தில் உளவுப் புலா­னாய்வுத் துறை, ஆளணி முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்புத் துறைத் தீர்மா­னங்கள் போன்றவற்றில் அனுபவம் பெற்ற பாத் கட்சி உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இரண்டாம் தரத்தில், 2003 – 2008 இடைப்பட்ட காலப் பிரிவில் அமெரிக்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அல்கைதா இயக்கத்தின் வன்முறைச்  சிந்­தனைப் பின்புலத்தைக் கொண்ட­வர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மூன்றாம் தரத்தில், ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடியதால் சிறைபிடிக்கபட்டு சித்திரவ­தைக்குட்படுத்தப்பட்ட இளை­ஞர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர் . கடைசியாக, அதன் கவர்ச்சியான பிரச்சார உத்தியை நம்பி , ஈராக்­கிற்கும் , சிரியாவிற்கும் இடம்­பெயர்ந்த வெளிநாட்டு முஸ்லிம் இளைஞர்களையும் ஐ.எஸ். வன்முறைக் குழு உள்ள­டக்கியுள்ளது.
  பாதுகாப்பு, தேச நிர்வாகம் மற்றும் தாக்குதல் திட்டமி­டல்கள் போன்ற ஐ.எஸ் வன்முறைக் குழுவின் பிரதான விவகாரங்­களில் சதாம் ஹுசைனின் பாத் கட்சி ஆட்சியில் அனுபவம் பெற்ற உளவுப் புலானாய்வுத் துறை நிபுணர்களே முழு­மையாக ஆதிக்கம் செலுத்து­கின்றனர்.
கொடூரமான கொலைகள் , ஆட்­டிலரி மற்றும் பாரிய அதிநவீன ஆயுதங்களை கையாளும் பயிற்சி என்பன இத்தகைய இரா­ணுவ ஜனரல்களின் நேரடி கண்­காணிப்பிலேயே இடம்பெறு­கிறது.
இவர்களே உயர் மட்டத்தில் இருந்து கொண்டு ஐ.எஸ் வன்­முறைக் குழுவின் விவகாரங்­களை நேரடியாக இயக்கும் புள்ளிகளாகும். மறுபுறம், மவ்ஸூலிலிருந்து ரக்கா வரை பரந்து விரிந்துள்ள ஐ.எஸ் ஆதிக்க பிராந்தியத்தின் தலைவ­ராக அபூபக்கர் அல் பக்தாதி என்­பவர் அறிவிக்கப்பட்டார். ஆனால், இது வெறும் "பெயரளிவி­லான நியமனம்" என்பதே ஐ.எஸ் வன்முறைக் குழுவின் உள்ளி­ருந்து வெளிவரும் உளவுத் துறைத் தகவல்கள் தெரி­விக்கும் கருத்தாகும். "அபூ­பக்கர்  அல் பக்தாதி" என்ற போலி கலீபாவின் பின்புலத்தில் பாத் கட்சி இராணுவ ஜனரல்கள் தங்க­ளது இரகசிய நிகழ்ச்சி நிரல்க­ளுடன் ஐ.எஸ். யை இயக்கி வரு­கின்றனர்.
குறிப்பாக , அபூ அய்மன் அல் ஈராகி , அபூ அலி அல் அன்பாரி , அபூ அப்துர் ரஹ்மான் பய்­லாவி , அபூ முஸ்லிம் அத்துர்க்­மானி மற்றும் ஹாஜி பக்கார் போன்றவர்கள் அபூபக்கர் அல் பக்தா­தியின் இரண்டாம் தரத்தில் ஐ.எஸ். வன்முறைக் குழுவை வழிந­டாத்தும் நபர்கள் என நம்பகமான பல செய்தி மூலங்கள் உறுதிப்ப­டுத்தியுள்ளன.
இவர்கள் அனைவரும் 1980கள் முதல் 2003 வரை சதாமின் இரா­ணுவத்தில் பாதுகாப்புத் துறை திட்டமிடல்களில் மற்றும் பொருளாதாரத் தடை காலத்தில் கறுப்புச் சந்தையில் ஆயுதம் மற்றும் எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்ற இராணுவ ஜனரல்­களாகும்.
அதிலும் அபூபக்கர் அல் பக்தாதி­யுடன் ஐ.எஸ். இயக்கத்தை நிறு­வுவதற்கு துணை புரிந்த மேஜர் ஜனரல் ஜாஹி பக்கார் ஒரு சுத்தமான மதச்சார்பற்ற தேசிய­வாதி. 1980-/87 காலப்பிரிவில் ஈரான் - ஈராக் போரின் போது முன்னணியில் நின்று ஈராக் படையை வழிநடாத்தியவர். இவரின் ஆலோசனையின் பெய­ரிலேயே அதிகமான பாத் கட்சி இராணுவ வீரர்கள் ஐ.எஸ். வன்­முறைக் குழுவில் உள்வாங்கப்­பட்டனர்.
இன்னும் ஹாஜி பக்கார் தெளி­வாகவே தனது பதவி மோகத்தை தீர்த்துக் கொள்வதற்­காக ஐ.எஸ். வன்முறையாளர்க­ளுடன்  இணைந்து கொண்டவர்.
அதேபோல், ஐ.எஸ். இன் சிரியா விவகாரங்களை நிர்வகிக்கும் அபூ அய்மன் அல் ஈராகி என்பவர் சதாம் ஹுசைனின் புலனாய்வுத் துறையில் பணி­யாற்றிய ஷீயா கொள்கை பின்­புலத்தைக் கொண்ட பாத் கட்சி உறுப்பினர் என்பதும் குறிப்பி­டத்தக்கது. ஏனைய ஜிஹாத் குழுக்களை மற்றும் அதன் உறுப்­பினர்களை பலாத்காரமாக ஐ.எஸ். இயக்கத்தில் இணைய வைக்க முயற்சிப்பதும் இல்லாத போது கொடூரமாக கொலை செய்வதும் அபூ அய்மன் அல் ஈரா­கியின் சிறப்புத் தேர்ச்சி­யாகும்.
ஐ.எஸ். இன் இரண்டாம் மூன்றாம் தர உறுப்பினர்களுடன் எந்த உற­வுகளையும் இத்தகைய மேல்­மட்ட உறுப்பினர்கள பேணுவ­தில்லை. இவர்களை ஐ.எஸ். இன் கீழ்மட்டத்தில் போராடும் பல சிப்­பாய்கள் சந்திக்க முற்பட்ட போது "அவர் உங்களுக்கு தெரியாத வேஷத்தில் உங்களோடு இருக்­கிறார்" என்ற பதிலே அதிகமாக கூறப்படும்.
மேற்குறிப்பிட்ட அம்சத்தை ஐ.எஸ். வன்முறைக் குழுவின் கறுப்பு எஜன்டாக்களை கண்டு, அதிலிருந்து துருக்கிக்கு தப்­பியோடிய "அபூ ஹம்ஸா" என்ற இளைஞன் நேர்காணலொன்றின் போது  குறிப்பிடுகிறான். ஐ.எஸ். இன் சிரிய கிளையின் ஒரு பகுதிக்கு தலைவராக அபூ ஹம்ஸா நியமிக்கப்பட்டார்.
ஆனால், பல போது யாராலோ அவர் கட்டுப்படுத்தப்படுகிறார் என அபூஹம்ஸா உணர்திருக்­கிறார். அத்தகையவர்களை அபூ­ஹம்ஸா சந்திக்க முற்பட்ட போது, அச்சுறுத்தப்பட்டு பல நாட்கள் சிறையில் அடைக்கப்பட்­டுள்ளார்.
இவ்வாறான ஐ.எஸ். இன் முதலாம் தர உறுப்பினர்க­ளுக்கும் , இஸ்லாமிய கோட்பா­டுகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே அதன் உள்ளக இர­சியங்களை ஆய்வு செய்யும் ஊடகவியலாளர்களின் கருத்­தாகும். வெறுமனே, தமது அதிகார வெறியை தீர்த்துக் கொள்ளும் நோக்குடன் ஐ.எஸ். வன்முறைக் குழுவை இவர்கள் வழிநடாத்துகின்றனர். இதற்கான சிறந்த சான்று யாதென்றால், ஐ.எஸ். இன் மத்திய குழுவால் நியமிக்கப்படும் இராணுவ, நிர்­வாக மற்றும் உளவுத் துறை தலைவர்களின் பின்னால் சதாமின் பழைய பாத் கட்சி இரா­ணுவ ஜெனரல்களால் நியமிக்கப்­படும்  நிழல் கண்காணிப்பாளர்­களும் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்களே யார்?, எப்போது ?, எங்கு ? , எதனை ? என்ற ஐ.எஸ். இன் போர்த் திட்டமிடல்களின் போதான மிக முக்கியமான இராணுவத் தீர்மானங்களை வழிந­டாத்துவதாக "அபூ ஹம்ஸா" அடித்துத் சொல்கிறார். சுருக்­கமாக, இந்நிலைமையை இப்ப­டியும் வேறு வசனத்தில் கூறலாம். அதாவது, சதாம் ஹுசைன் பேசிய "அகன்ற அரபுத் தேசியவாதம்" என்ற கருத்தி­யலை விட "இஸ்லாமிய ஜிஹாத்" அல்லது " இஸ்லாமிய கிலாபத்" போன்றன தங்களது அதிகார வெறியை தீர்த்துக் கொள்வதற்கு காலத்திற்கு மிகப் பொருத்தமான கோஷங்கள் என பாத் கட்சி இராணுவ ஜன­ரல்கள் சிந்திக்கின்றனர்.
ஐ.எஸ். வன்முறைக் குழுவின் உயர் மட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் இத்தகைய சதாம் ஆட்சி கால இராணுவ ஜனரல்க­ளுக்கும், ஏனைய அல் கைதா ஈராக் போராட்ட குழுத் தலைவர்­களுக்கும் இடையில் எத்தகைய தொடர்பு நிலவுகிறது என்பத­னையும் சில உள்ளக உளவா­ளிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது, ஐ.எஸ். இன் இராணுவ பலம் மற்றும் பிராந்திய விஸ்த­ரிப்பு சுமுகமாக இடம்பெற வேண்டுமாக இருந்தால், இவ்­வாறான பாத் கட்சி மதச்சார்பற்ற இராணுவ ஜனரல்களை வைத்தி­ருப்பது அத்தியவசியம் என அல்­கைதா ஈராக் பிரிவினர் நம்பு­கின்றனர்.
எனவே,  எவ்வளவுதான் இஸ்­லாத்தின் பெயரால் போலிக் கோட்பாடுகளை ஐ.எஸ். வன்­முறைக் குழுவின் மதபோத­கர்கள் பேசித் தீர்த்தாலும், ஐ.எஸ். படையில் அங்கம் வகிக்கும் பாத் கட்சி இராணுவ ஜனரல்களின் நடத்­தையில் கை வைக்க அவர்கள் தயாராக இல்லை. இவ்விருசா­ரருக்கும் மத்தியில் "உடன்­பாட்டுத் திருமணம்" (Marriage of Convenience ) நடைபெற்று விட்ட­தாக சில ஆய்வாளர்கள் எழுது­கின்றனர்.
அதேபோல், ஐ.எஸ். போராளிக­ளுக்கு மத்தியில் தீவிர வன்­முறைச் சிந்தனைகள் மற்றும் கோட்பாடுகளை புகுத்தும் , பரப்பும் செயற்பாடுகளை திட்ட­மிட்டு முன்னெடுப்பதனூ­டாக, அதன் மேல்மட்ட உறுப்பினர்­களின் கருப்பு எஜன்டாக்கள் இல­குவாக மறைக்கப்படுகின்றன.
அதனையே "ஐ.எஸ். இன் இரா­ணுவப் படையில் வந்தி­ணைந்து கொள்ளும் இளைஞர்­களின் உணர்ச்சிப் பரவச நிலையின் காரணமாக , அவ்வி­யக்கத்தின் ஆழத்தில் தொழிற்­படும் பாத் கட்சியினதும், அல்­கைதா ஈராக்கின் தலைவர்களி­னதும் அரசுக்குள் அரசு (State within state) பற்றிய தகவல்கள் மறைக்கப்பட்டுவிட்டன" என ஐ.எஸ். வன்முறைக் குழுவுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து­கொண்ட "சிரியப் புரட்சியை நெறிப்படுத்தும் அமைப்பின்" தலைவர் ஹசன் இத்கிம் குறிப்பி­டுகிறார்.
இன்னும், இத்தகைய பாத் கட்சி இராணுவ ஜனரல்களின் இரகசிய தீர்மானங்களுக்கு ஏற்ப அல் கைதா  வன்முறைக் குழுவின் தலைவர்கள் இயங்குவதால், அத­னோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதிலும் பாரிய கஷ்­டங்கள் காணப்பட்டதாக ஹசன் இத்கிம் தெளிவுபடுத்து­கிறார்.
சிரியா மற்றும் ஈரான் உளவுத் துறைக்கும் ஐ.எஸ் அமைப்­புக்கும் தொடர்பிருக்கிறதா?
மேற்சொன்ன கேள்விக்கான விடையை ஊகிப்பதற்கு கள நி­லவரம் பற்றிய புரிதல் அவசிய­மானது. அதாவது,  ஐ.எஸ். போராளிகள் "இஸ்லாமிய கிலாபத்" அல்லது " இஸ்லாமிய ஜிஹாத்" போன்ற கோஷங்களை இளைஞர்களின் உணர்வுகளை சூறையாடுவதற்காக போலி­யாக தூவி விட்டாலும் கூட, யதார்த்தத்தில் பிராந்தியத்தின்  முழுச் சீரழிவிற்கும் காரணகர்த்­தாவான அஸாதிற்கு எதிராக எவ்வித பாரிய தாக்குதல்க­ளையும் நடாத்தியதில்லை.
சிரியாவில் ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியுள்ள பெரும்பா­லான நகரங்கள், ஆயுதக் கிடங்­குகள் மற்றும் கொலை செய்த சிப்பாய்கள் என அனைத்தும் அஸாதிற்கு எதிராகப் போராடும் புரட்சிக் குழுக்க­ளுடையதாகும்.
தற்போது சிரிய ஐ.எஸ். கட்டுப்­பாட்டுப் பகுதியின் தலைநக­ராக அறிவிக்கப்பட்டுள்ள "ரக்கா" பகுதி புரட்சிப் படைகளின் கட்­டுப்பாட்டிலேயே ஆரம்பத்தில் காணப்பட்டது.
அதாவது, அஸாதின் இராணு­வத்தை அடித்து விரட்டி "ரக்­கா"வை விடுவித்தவர்கள் மக்கள் புரட்சிப் படையினரே. ஆனால், அப்பிராந்தியத்தை விடு­வித்துவிட்டு ஏனைய பகுதி­களை நோக்கி மக்கள் புரட்சிப் படையினர் நகர்ந்த சந்தர்ப்பத்தில் , விடுவிக்கப்பட்ட பிராந்தியங்­களை ஐ.எஸ். வன்முறைக் குழு கைப்பற்றிக் கொண்டது. மறு­புறம், பஷர் அல் அஸாதை வீழத்­துவதனை விடுத்து, "இஸ்லா­மிய தேசத்தை விரிவுப­டுத்தல்" என்ற பெயரில் , அஸா­தோடு போராடும் ஏனைய ஆயுதப் பிரிவுகளை முடக்கும் கைங்கரியத்தையே ஐ.எஸ். வன்முறைக் குழு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.
அதற்காக கவர்ச்சிகரமான இஸ்லா­மிய சுலோகங்களை ஐ.எஸ். வன்­முறைக் குழு பயன்படுத்துகி­றது. குறிப்பாக "புரட்சிப் படை­களின் பின்னால் துருக்கி, கட்டார் மற்றும் சவூதி அரே­பியா போன்ற இஸ்லாமிய வழி­காட்டலைப் பின்பற்றாத நாடுகள் இருக்கின்றன.
எனவே புரட்சிப் படையினர் முர்­தத்கள் (மார்க்கத்தை விட்டு வெளியேறியவர்கள்) ஆகும். மறுபுறம் , பஷர் அல் அஸாத் தெளிவான காபிர். அடிப்படை­யான காபிரோடு போராடுவ­தனை விட முர்தத்தோடு போராடுவதையே இஸ்லாம் வரவேற்கிறது. எனவே அஸாதோடு போராடுவதனை விட புரட்சிப் படையோடு போராடுவது அவசியமானது" என்பது ஐ.எஸ். மதபோத­கர்ளின்வாதமாகும்.
இத்தகைய அறிவுக்குப்படாத வாதங்கள் மற்றும் அஸாதுக்கு எதிரான ஜிஹாத் குழுக்களை முடக்குவதனூடாக அவனை பலப்படுத்துதல் போன்ற ஐ.எஸ். இன் செயற்பாடுகள் , ஈரான் மற்றும் அஸாதின் புலா­னாய்வுத் துறைக்கும் , ஐ.எஸ். இன் மேல்மட்ட உறுப்பினர்க­ளுக்கும் மறைமுகமான தொடர்பு காணப்படுகிறது என சில அரசியல் ஆய்வாளர்கள் முன்­வைக்கும் பலமாக ஊகத்தை வலுப்படுத்துகிறது.
மூன்று அல்லது நான்கு தசாப்த காலம் புலானய்வுத் துறையில் தேர்ச்சி பெற்ற இரா­ணுவ ஜனரல்களுக்கூடாக அஸா­தினதும், ஈரானினதும் புல­னாய்வுத் துறை ஐ.எஸ். இன் நாளாந்த விவகாரங்களில் தாக்கம் செலுத்தலாம் என அவர்கள் பலமாக வாதிக்கின்றனர். குறிப்பாக, பாத் கட்சி புலா­னாய்வுத் துறை நிபுணர்கள் ஐ.எஸ். இன் போலிக் கோட்பாடு­களால் கவரபட்டு வந்தவர்களல்ல. மாறாக, வெறும், பதவி , பணம் மற்றும் அதிகாரத்திற்காக இணைந்து கொண்டவர்களே.
எனவே, இவ்வாறான பலவீனத்தை அஸாதும் , ஈரானிய உளவுத்­துறைத் தலைவரான காஸிம் சுலைமானியும் பயன்ப­டுத்திக் கொண்டிருக்கக் கூடும்.
அதிலும், பாத் கட்சி உறுப்பினர்­களாக இருந்து , பின்பு ஐ.எஸ். இன் மேல்மட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் ஷீயாக் கொள்கைப் பின்புலத்தைக் கொண்ட புல­னாய்வுத் துறைத் தலைவர்­களை விசுவாசமாக்கிக் கொள்ளும் இலக்கிலும் தெஹ்­ரானும், டமஸக்கஸும் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.
இவையனைத்தும் களத்தில் சிரியப் புரட்சிக்கு சார்பாக பணியாற்றும் ஊடகவியலா­ளர்கள் முன்வைக்கும் பலமான ஊகங்கள். இவ்வூகத்தை நியாயப்­படுத்தும் விதமாக சில கள மாற்றங்களும் நிகழ ஆரம்பித்­துள்ளன. குறிப்பாக, கடந்த நான்கு வருடங்களில் முதல் தட­வையாக துருக்கியின் விமானப் படை தற்போது ஐ.எஸ். இன் இராஜதந்திர இடங்களை தாக்­கியழிக்க ஆரம்பித்துள்ளது.
அதாவது "அஸாதிற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்­டுமானால் , "இஸ்லாமிய கிலாபத்" என்ற போலி வேடத்தில் நடிக்கும் அவனது ஏஜன்டை தீர்த்துக் கட்ட வேண்டும்" என முடிவெ­டுத்துவிட்டது போல் துருக்­கியின் சடுதியான இராணுவத் தீர்மானங்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக, ஐ.எஸ். வன்முறைக் குழுவின் மேல்மட்டத்தின் செயற்பாடுகளின் மற்றொரு குரூர இராஜதந்திரத்தை பற்­றியும் அங்கு ஊடுருவி­யுள்ள சில ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதா­வது, ஐ.எஸ். அமைப்பினர் அதிக­மான வெளிநாட்டு முஸ்லிம் இளைஞர்களை கவரும் நிகழ்ச்சி நிரல்களுக்கு அழுத்தம் கொடுக்­கின்றனர்.
காரணம், உள்நாட்டு இளைஞர்­களை போரில் முன்னணியில் நிறுத்த முடியாது. ஏனெனில், அவர்களில் அதிகமா­னவர்கள் இறப்பெய்தும் பட்சத்தில், மக்களின் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி எற்­படும். எனவே, முக்கியமான தற்­கொலைத் தாக்குதல்களுக்கு மற்றும் படை நகர்வுகளில் முன்­னணிப் படையில் வெளிநாட்டு சிப்பாய்களையே அதிகம் ஐ.எஸ். வன்முறைக் குழு பயன்படுத்து­கிறது. இவர்களின் வாழ்­வுக்கும் , மரணத்திற்கும் ஐ.எஸ். எந்த விதத்திலும் பொறுப்புச் சொல்லத் தேவையில்லை என ஐ.எஸ். மேல் மட்டம் நம்புகிறது.
எனவேதான், அரபு மொழி பேசும் இளைஞர்களை விட , ஆங்கில ,பிரான்ஸ் மற்றும் ரஷ்ய மொழியிலான முஸ்லிம் இளைஞர்களை இலக்கு வைத்து ஐ.எஸ். இன் பிரச்சார உத்திகள் தொழிற்படுகின்றன. வெளிநாட்டு இளைஞர்களை கவரும் நிகழ்ச்சிகளை மார்க்க மூலாம் பூசுவதற்காக அல்கைதா உறுப்பினர்களையும் , அவர்களது கருத்தியலால் ஆகர்சிக்கப்பட்ட சில மத போதகர்களையும் சூட்சுமமாக ஐ.எஸ். மேல்மட்டம் பயன்படுத்திக் கொள்கிறது.


SHARE THIS

Author:

0 comments: