Friday, September 16, 2016

இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தை பெற்றுத்தந்த தலைமை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள்-உயர்பீட உறுப்பினர் கெளரவ எச்.எம்.எம்.றியாழ்

(YM.FAIROOS)

இலங்கை முஸ்லிம்களின் விடுதலைக்காக முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை உருவாக்கிப் போராடிய பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள், அதில் அவர் வெற்றியும் கண்டார். அத்தோடு, முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ அரசியல் அந்தஸ்துப் பெற வேண்டுமென்பதுடன், இலங்கை முஸ்லிம்களுக்கு தனி அரசியல் அடையாளத்தைப் பெற்றுத்தந்த தலைமையாகவும் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் திகழ்ந்தார் என முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் கணக்கறிஞருமான கெளரவ எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது, தமிழ் மக்களுக்கு சரியான தீர்வு கிட்ட வேண்டுமென்பதில் அவரிடம் மாற்றுக்கருத்து ஏதும் இருக்கவில்லை. அத்துடன், தமிழ் தலைவர்களுடன் நெருங்கிய உறவைப்பேணி வந்ததுடன், தனது அரசியல் வழிகாட்டியாகவும் எடுத்துச் செயற்பாட்டு இன ஒற்றுமைக்கு உதாரணமாகத் திகழ்ந்ததுடன், நாட்டில் வாழும் சகல இன மக்களுடனும் இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் அரும்பங்காற்றிய அவர், தேசிய மட்டத்திலும் சர்வதேசளவிலும் மதிக்கப்படும் தலைவராகவும் திகழ்ந்தார்.

அரசியல் தீர்வு, இனப்பிரச்சினைத் தீர்வு விடயங்களில் தனது அரசியல் மதி நுட்பத்தால் சிறப்பான தீர்வுகளை முன் வைத்த அரசியல் ஞானியாகவும், அரசியல் பயணத்தில் முஸ்லிம் காங்கிரசின் நோக்கத்தை அடைவதில் அயராதுழைத்த அவர் முஸ்லிம்களின் அரசியல் விடுதலையே மூச்சாகக் கொண்டு இறுதிவரை அந்ததப்பயணத்திலேயே தனது உயிரையும் துறந்தார்.

அவர் உயிர் துறந்த பதினாறு ஆண்டுகளைக் கடக்கின்ற இன்றைய நாளில் அன்னாரது மறுமை வாழ்வுக்கு அனைவரும் பிரார்த்தனை புரிவதோடு, அவர் விட்டுச் சென்ற பணிகளை தியாகத்தோடும் அர்ப்பணிப்போடும் முன்னெடுப்பதே அன்னாருக்கு நாம் செய்யும் கைமாறாகும்.

அதனை நாமனைவரும் உணர்ந்தவர்களாக அவர் எமக்கு காட்டித்தந்த தலைமையும் அவரது அரசியல் பாசறையில் வளர்ந்த எமது இன்றைய தேசியத்தலைமையுமான கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் கருத்து முரண்பாடுகளை வேறறுத்து நாம் அனைவரும் ஒன்றித்து மறைந்த மாபெருந்தலைவர் அவர்களின் வழியில் பயணித்து சமூகம் எதிர்கொண்டுள்ள சகல சவால்களையும் முறியடிக்க முன் வர வேண்டுமென இன்றைய நாளில் கேட்டுக்கொள்கிறேன்.

அதே நேரம், இன்று இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவைகளை அர்ப்பணிப்புடன் எதிர்கொண்டு தனது அரசியல் சாணக்கியத்தினால் முகங்கொடுத்து முஸ்லிம்களின் அரசியல் தீர்வு, அபிவிருத்தி, உரிமை மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக் கொள்ள மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் வழியில் பயணிக்கும் தேசியத்தலைமை ரவூப் ஹக்கீம் அவர்களின் கரங்களைப் பலப்படுத்த அனைவரும் முன் வர வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் கணக்கறிஞருமான கெளரவ எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.


SHARE THIS

Author:

0 comments: