Monday, September 7, 2015

ISIS ஐ உருவாக்கியது அமெரிக்காதான், கத்தாரும், துருக்கியும் ஆதரவு வழங்கின


சிவில் யுத்தம் காரணமாக இஸ்லாமிக் ஸ்டேட் என்ற சர்வாதிகார தீவிரவாதம் எழுச்சியுற்றது. இந்நிலையில் சிரியா அதிபர் பஷார் அல் அசாத் சார்பாக இந்தியா வந்துள்ள தூதர் ரியாத் கமெல் அப்பாஸ், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
கேள்வி: ஐ.எஸ்.க்கு எதிரான போரில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?
ரியாத் கமல் அப்பாஸ்: அது இந்தியாவின் முடிவைப் பொறுத்தது. ஆனால் பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்க்கும் நாடுகளுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
கேள்வி: உங்கள் பார்வையில், ஐ.எஸ். அமைப்பு சக்தி வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக சில ஆண்டுகளில் உருவெடுத்தது எப்படி?
ரியாத் கமல் அப்பாஸ்: ஆப்கானிஸ்தானில் அல் கய்தாவை உருவாக்கியவர் யார்? ஏன்? என்பதை கூறுங்கள். அமெரிக்காதான் அல்கய்தாவை உருவாக்கியது என்பது தெளிவு. அரபு நாடுகளின் உதவியுடன், ஆப்கனில் சோவியத் யூனியனை முறியடிக்க அல் கய்தாவை உருவாக்கினர். அமெரிக்கர்கள் ஆப்கானில் படையெடுத்த போது நிறைய சவப்பெட்டிகள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தன. பல ஆண்டுகள் போருக்குப் பிறகு ராணுவ வீரரை தரையில் பயன்படுத்துவதன் வியர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர். எனவே பிற நாடுகளில் அழிவை ஏற்படுத்தும் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு கொடுப்பதே சிறந்தது என்று அமெரிக்கா நினைத்தது. இப்படியாகத்தான் ஐ.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது. துருக்கி, கத்தார் ஆகிய நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.
தற்போது ஐ.எஸ். மிகவும் பலமாக உள்ளது. ஏன் அவர்கள் வலுவாக உள்ளனர், புறச்சக்திகள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். என்னுடைய சொந்தக் கருத்து என்னவெனில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்கா சீரியசாக சண்டையிடவில்லை என்பதே. ஐ.எஸ். அமைப்பை அமெரிக்கா தோற்கடிக்க விரும்பவில்லை. அவர்களை கட்டுப்படுத்த விரும்புகின்றனர். இராக்கி குர்திஸ்தானில் உள்ள எர்பிலை ஐ.எஸ். தாக்கியவுடன் அமெரிக்கா உடனே சிகப்பு கோடு இட்டது. அதனை கடக்காதீர்கள் என்று ஐ.எஸ் அமைப்பை எச்சரித்தது. இதனையடுத்து சிரியாவின் மேற்குப் பகுதியிலும் ஐ.எஸ். விரிவு படுத்தியது.
கேள்வி: ஐ.எஸ்.க்கு எதிராக போர் என்ற துருக்கியின் சமீபத்திய அறிவிப்பு பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில்: இது சும்மா ஒரு கேம் பிளான். பொதுமக்களிடத்தில் கருத்தை உருவாக்க செய்யப்படும் தந்திரம். ஐ.எஸ். விரிவாக்கத்தில் துருக்கியின் பங்கு இருப்பதற்கான சாட்சியங்கள் எங்களிடம் உள்ளன. மொசூலில் துருக்கிய தூதரகத்திலிருந்து ஐ.எஸ். அமைப்பு சிலரை பிடித்தது, ஆனால் உடனடியாக அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால்தான் கூறுகிறேன், துருக்கிக்கும் ஐ.எஸ்.க்கும் நெருங்கிய நட்புறவு உள்ளது என்று. ஐ.எஸ். க்கு எதிராக போர் என்ற பெயரில் அவர்கள் உண்மையில் குர்திஷ் மக்களை எதிர்த்தே போரிடுகிறது துருக்கி.
கேள்வி: சரி இதற்கு தீர்வுதான் என்ன?
பதில்: சிரியா மக்களுக்கு ஒரு புறம் அரசு உள்ளது, மறுபுறம் ஐ.எஸ். மற்றும் அல் நுசுரா பயங்கரவாத அமைப்பு. இந்த இரண்டுதான் மக்களின் தெரிவாக உள்ளது.
ஆனால் தீர்வு எளிதானதே. பயங்கரவாதிகளுக்கு ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும். எல்லைகளை மூடுங்கள், பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அகற்றுங்கள். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் துருக்கி, கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
சுவனப் பிரியன்


SHARE THIS

Author:

0 comments: